நேருக்கு நேர் சந்திக்கும்போது கசப்பைக் காட்டிக் கொள்ளாமல் கட்டிப் பிடித்து அன்பைப் பொழிவார்கள். அத்தனை நட்பு! அத்தனையும் நடிப்பு!

1597

நேருக்கு நேர் சந்திக்கும்போது கசப்பைக் காட்டிக் கொள்ளாமல் கட்டிப் பிடித்து அன்பைப் பொழிவார்கள். அத்தனை நட்பு! அத்தனையும் நடிப்பு!

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 15

 

சினிமாவில் இன்றைய தேதிக்கு இருவரும்தான் போட்டியாளர்கள்.

இருவரில் யார் நம்பர் ஒன் என்ற போட்டியில் அந்த இளம் ஹீரோ முன்னிலையில் இருக்கிறான்.

அவன் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்.

இவன் அவனைவிட பின் தங்கியிருக்கிறான்.

அதைவிட இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க இருந்தார்கள்.

பெரிய டைரக்டரின் சொந்தப்படம்.

வேறு ஒரு பெரிய டைரக்டர் அந்தப் படத்தை இயக்கவிருந்தார்.

கதைப்படி இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் இருந்தது.

ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு இவனை டம்மியாக்கினார்களாம்.

அதனால் அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டான்.

அப்புறம்தான் விஷயம் தெரிந்திருக்கிறது.

அந்த இளம் ஹீரோவின் பேச்சைக் கேட்டுத்தான் இவனை டம்மியாக்கினார்கள் என்பது.

எனவே அந்த ஹீரோவைக் கண்டாலே இவனுக்கு ஆகாது.

ஆனால் நேருக்கு நேர் சந்திக்கும்போது கசப்பைக் காட்டிக் கொள்ளாமல் கட்டிப் பிடித்து அன்பைப் பொழிவார்கள். அத்தனை நட்பு! அத்தனையும் நடிப்பு!

”ஆமா… அவனைப் பத்தி இப்ப ஏன் கேக்குறீங்க?”

”ஒண்ணுமில்லை. சும்மா கேட்டேன்” என்று பேச்சை மாற்றினான்.

நானும் அந்தப் பேச்சை அப்போதே மறந்துவிட்டேன்.

ஆனால் அவன் மறக்கவில்லை என்பது வேறொரு நாள் தெரிந்தது.

பொள்ளாச்சிக்கு அவுட்டோர் போயிருந்தான் அவன்.

ஒரே ஷெட்யூலில் படத்தை எடுப்பதால் நாற்பது நாட்கள் அங்கேயே தங்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனான்.

ஆனாலும் தினமும் போன் பண்ணுவதாகச் சொன்னான். பிரிவுத் துயர் தாங்காமல் கண்ணீரோடு வழியனுப்பினேன்.

பொள்ளாச்சி போய் ஒரு வாரம் வரை ஒழுங்காக தினமும் போன் பண்ணினான்.

பிரிவுத் தூரம் தெரியாத அளவுக்கு மணிக்கணக்கில் பேசினான்.

கொஞ்சினான்.

அவன் நினைப்பிலேயே நானும் இருந்தேன்.

தூக்கத்திலும் அவன் ஞாபகம்தான்.

அதன் பிறகு என்னாச்சு என்று தெரியவில்லை. அவனிடமிருந்து போனே வரவில்லை.

நான் துடித்துப் போனேன்.

என்னாச்சு அவனுக்கு?

ஒரு நாள்…

இரண்டு நாள்…

ஒரு வாரம்.

பத்து நாள்…

நாட்கள் ஓடிக் கொண்டே இருக்க, ஒரு நாள் திடீரென அவனிடமிருந்து போன்.

ஆசையாய் போனை எடுத்த நான் அவனுடைய பேச்சைக் கேட்டதும் அதிர்ச்சியில் இடிந்து போனேன்.

”ஹலோ எப்படி இருக்கீங்க? ஏன் போன் பண்ணவே இல்லை? ரொம்ப பிஸியா?”

நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் எடுத்த எடுப்பிலேயே சீறினான்.

”அதிருக்கட்டும். அன்னைக்கு என்னமோ பத்தினியாட்டம் பேசினியே அவனுக்கும் எனக்கும் அந்த மாதிரியான கான்டாக்ட் இல்லவே இல்லை. அவன் பக்கா டீஸன்ட் அப்படி இப்படின்னு சர்டிஃபிகேட் எல்லாம் கொடுத்தே?”

நான் யாரைப் பற்றி இப்படி சொன்னேன் என்று சட்டென்று எனக்கு பிடிபடவில்லை.

தொடர்ந்து அவன் பேச்சில்தான் விளங்கியது.

அவனது போட்டியாளரான அந்த இளம் ஹீரோவைத்தான் அவன் சொல்கிறான் என்று.

நான் சொன்னது உண்மைதானே? அதில் என்ன சந்தேகம் இவனுக்கு?

”உண்மையைத்தானே சொன்னேன்? அதுக்கென்ன இப்போ?”

”எது உண்மை? அவனா டீஸண்ட்? எனக்கே காது குத்துறியா? அவன் ஒரு பொம்பளைப் பொறுக்கி, அந்தப் படத்தில நடிச்சப்ப நீங்க ரெண்டு பேரும் ஒரு ராத்திரியைக் கூட வீணடிக்காம கொட்டம் அடிச்சது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”

”என்ன பேசுறீங்க? அவனுக்கும் எனக்கும் அந்த மாதிரி எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை. ப்ளீஸ் நம்புங்க…”

கண்ணீருடன் கெஞ்சினேன்.

”சும்மா நடிக்காதேடீ. இந்த நடிப்பை ஏதாவது படத்துல காட்டு, அவார்டு கிடைக்கும். என்கிட்ட வேணாம். அதான் இப்ப பார்த்தேனே உன் லட்சணத்தை…

”என்ன… என்ன பார்த்தீங்க?”

”அந்தப் படத்தோட லாங்குல நீங்க ரெண்டு பேரும் ஜலக்கிரீடை பண்ணியதை இப்பத்தான் டிவில பார்த்தேன். நடிப்புங்கிற பேருல ஆத்துக்குள்ளேயே ஜல்சா பண்ணிருக்கீங்க. ஆத்துக்குள்ளேயே, இப்படீன்னா… ரூமுக்குள்ளே என்னவெல்லாம் பண்ணிருப்பீங்க?”

மைகாட். அவன் இப்படி பேச என்ன காரணம் என்று புரிந்தது. அந்த படத்தில் நானும் அந்த இளம் ஹீரோவும் ஒரு பாடல் காட்சியில் நடித்தோம்.

அந்தப் படத்தின் டைரக்டர் வேறு யாருமல்ல. அவனது அப்பாதான்.

வேறு டைரக்டர்கள், புரட்யூஸர்கள் யாரும் அவனை வைத்து படம் எடுக்க முன்வராத காலம் அது.

எனவே தானே மகனை வைத்து சொந்தமாகப் படம் எடுத்தார்.

மகனுக்கு அப்போது சுத்தமாக மார்க்கெட்டும் இல்லை.

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று அவனைப் பற்றி பலரும் கமெண்ட் அடித்தனர் அப்போது.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்