”உன் பாஸ்ட் லைஃப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் என் மனைவியானப்புறம் நீ எனக்கு சின்ஸியரா இருக்கணும்.”

1638

”உன் பாஸ்ட் லைஃப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் என் மனைவியானப்புறம் நீ எனக்கு சின்ஸியரா இருக்கணும்.”

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 14

 

அவனை நான் ஜென்டில்மேன் என்று நினைத்தேன்.

என்னிடம் அவன் நடந்து கொண்ட விதம் அப்படி.

எங்களுக்குள் காதல் மலர்ந்த பிறகு பல நாட்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்.

அவன் ஒரு பக்கம் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பான்.

எனக்கும் ஷூட்டிங் இருக்கும்.

இரண்டு பேருமே பிஸி என்பதால் தினமும் சந்திக்க முடியாது.

போனில்தான் பேசிக் கொள்வோம்.

எப்போதாவது அத்திபூத்தாற்போல் இரண்டு பேருக்கும் ஷூட்டிங் இருக்காது.

அந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் எங்கள் சந்திப்பு.

டப்பிங் என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்புவேன்.

ஷூட்டிங் என்று சொல்லிவிட்டு வர முடியாது.

ஷூட்டிங் என்றால் மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸர், டச்சப் பாய் என்று என்னோடு ஒரு கூட்டமே   கிளம்பி வரும்.

சில சமயம் அம்மாவும் வருவாள்.

அவர்களை தவிர்த்து விட்டு நான் மட்டும் தனியாகக் கிளம்ப முடியாது.

டப்பிங் என்றால் அந்தப் பிரச்சினை இல்லை.

அவனது நண்பனை விட்டு ஏதாவது   ஒரு   படக்கம்பெனியின் பெயரைச் சொல்லி இன்றைக்கு டப்பிங் இருக்கிறது. இத்தனை மணிக்கு வர வேண்டும் என்று அம்மாவிடம் பேசச் சொல்வான்.

அம்மாவும் நம்பிவிடுவாள்.

அதைவிட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

ஷூட்டிங்குக்குக் கிளம்புவதுபோல் டப்பிங்குக்கு நானும் வருகிறேன் என்று  உற்சாகமாக  அம்மா கிளம்ப மாட்டாள்.

டப்பிங்குக்கு வருவது என்றாலே அம்மாவுக்கு அலர்ஜி.

டப்பிங் தியேட்டரில் உட்கார, போரடிக்குமாம்.

டப்பிங் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு காட்சியையும் பல தடவை திரும்பத் திரும்ப திரையிடுவார்கள்.

ஒரே காட்சியை  மீண்டும் மீண்டும்  பார்ப்பது  அம்மாவுக்க அலுத்துவிட்டது.  அதனால் டப்பிங் என்றால்  அம்மா வர மாட்டாள்.

டப்பிங் என்று பொய் சொல்லி  வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றி விட்டு நான் வரும்போது ஏதாவது ஒரு ஸ்டூடியோவில் காரில் காத்திருப்பான் அவன்…. என் ஆசை நாயகன்.

என் காரை அங்கேயே பார்க் பண்ணிவிட்டு அவனுடைய காரில் ஏறிக் கொள்வேன்.

கண்ணாடியை ஏற்றி விட்டால் யாருக்குத் தெரியப் போகிறது?

அவனுடன் காரில் போவதே சொர்க்கம்தான்.

மகாபலிபுரம் செல்லும் சாலையில் கார் பறக்கும்.

படு வேகமாக காரை ஓட்டுவான். பயத்தில் நான் அலற,  அதை ரசிப்பான் அவன்.

மகாபலிபுரம் சாலை காதலர்களின் சொர்க்கம்.

அங்கே தனிமையான இடத்திற்கு பஞ்சமில்லை.

அப்படி ஒரு இடத்தைத் தேடி காரை நிறுத்துவான்.

இரண்டு பேரும் மணிக்கணக்கில் பேசுவோம்.

காதலர்கள் என்ன பேசுவோம்? எல்லாம்தான்.

ரொமான்ட்டிக்கான பேச்சு தவிர எங்கள் எதிர்காலம் பற்றியும் பேசுவோம்.

சில சமயம் கடந்த காலத்தைப் பற்றியும்…

என் கடந்த காலத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் அவனிடம் சொல்லிவிட நினைத்தேன்.

பின்னால் யாராவது என்னைப் பற்றி ஏதாவது தப்பாகச் சொல்லி, அதனால் பிரச்சினை வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கை எண்ணத்தில்….

அவனோ கேட்கத் தயாராக இல்லை.

”இதப்பாரு நிலா. உன் பாஸ்ட் லைஃப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் என் மனைவியானப்புறம் நீ எனக்கு சின்ஸியரா இருக்கணும். அதுபோதும் எனக்கு”

என்று சொன்னவன் அதன் பிறகும் கூட என் கடந்த காலத்தைப் பத்தி ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அவன் மீது எனக்கிருந்த காதலும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தன.

எனக்கு புருஷனாக வரப்போகிற இவன் எவ்வளவு உயர்வானவன், உத்தமமானவன்.

ஆனால் ஒரே ஒரு முறை கேஷுவலாக, அவனைப் போலவே இப்போது நம்பர் ஒன்ன்றா நடிகனாக இருக்கும் இன்னொரு இளம் ஹீரோ பற்றி பேச்செடுத்தான்.

”நிலா… நான் ஒண்ணு கேக்கவா? அந்தப் பூனைக்குட்டியோட நடிச்சியே…” என்று ஆரம்பித்தான்

எனக்கு அவன் யாரைச் சொல்கிறான் என்று முதலில் புரியவே இல்லை.

”பூனைக்குட்டியா?” என்று புரியாமல் விழித்தேன்.

அதன் பிறகு அந்த இளம் ஹீரோவின் பேரைச் சொன்னான்.

எனக்குச் சிரிப்பாய் இருந்தது.

”பூனைக்குட்டி….  என்ன அர்த்தத்தில் இப்படியொரு பெயர்?”

”க்ளோஸப் ஷாட்டுல அவனைப் பார்த்ததில்லையா நீ? பூனைக்குட்டி பாக்குற மாத்தியே இருக்கும்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

அவன் சிரிக்கவில்லை.

சீரியஸாக இருந்தான்.

”சொல்லு நிலா. அந்தப் படத்தில் நடிச்சப்ப அவன் உன்னை….”

என்று இழுத்தான்.

இப்போது ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறான் என்று சத்தியமாய் எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் பதில் சொன்னேன்.

”அவன்கிட்ட அதிகமா நான் பேசுனது கூட கிடையாது. அதைவிட அவன் யாருக்கிட்டேயும் பேசவே மாட்டான். செட்டுக்கு வர்றப்ப ஹலோ சொன்னாக்கூட பதில் சொல்ல மாட்டான். அவ்வளவு ரிசர்வ்ட் டைப். இன்ஃபாக்ட்  லவ் சீன்ல நெருங்கி நடிக்கக்கூட கூச்சப்படுவான்.”

அந்த இளம் ஹீரோவைப் புகழ்ந்து நான் சொன்னதை அவன் ரசிக்கவில்லை.

முகம் கறுத்தது.

காரணம் எனக்கு புரியாமல் இல்லை.

என்ன காரணம் தெரியுமா?

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்