நடிகை என்றால் பணத்துக்காகவும், சான்ஸுக்காகவும் பலரிடம் உடம்பை விற்பவள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?

1877

நடிகை என்றால் பணத்துக்காகவும், சான்ஸுக்காகவும் பலரிடம் உடம்பை விற்பவள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?

என் கதை‘  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்

அத்தியாயம் – 12

அந்த ஹீரோ மட்டுமல்ல எனக்குத் தெரிந்து ஏறக்குறைய எல்லா ஹீரோக்களுமே பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆனால், இவன்…. என்னைக் கவர்ந்த ஹீரோ…. அப்படிப்பட்டவனில்லை.

இத்தனைக்கும் அவன் ஒரு  பேரழகன்.

அவன் அழகு இளம் பெண்களை தூங்கவே விடாது.

அப்பேற்பட்ட அழகன்….. ஹேண்ட்ஸமான ஒரு ஹீரோ  பெண்கள் விஷயத்தில் யோக்கியமானவனாக இருப்பான் என்று எதிர்பார்க்கவே முடியாது.

ஆனால் இவனோ பெண்கள் பக்கம் திரும்பக்ககூட மாட்டான். இந்த விஷயம்தான் அவன் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது.

உங்களில் பலருக்கு தெரியுமோ…. தெரியாதோ….. ஆனால் எனக்கு சர்வநிச்சயமாகத் தெரியும். சினிமாவில் மலிவாகக் கிடைப்பது பெண்கள்தான்.

அதுவும் கண்ணுக்கு லட்சணமான நடிகர் என்றால் சொல்லவே வேண்டாம்.

லெங்கின்ஸை உருவிவிட்டு கட்டிலில் மல்லாக்கப் படுக்க  எத்தனையோ   பெண்கள் தயாராய் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட பெண்களுக்கு மத்தியில் நடிகனாக வலம் வரும்  இவனோ கற்புக்கரசனாக இருக்கிறான்.

இவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்பவள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.

அவனை நினைத்து  வியந்துபோன   எனக்கு, ஒருநாள்  நானே  அந்த அதிர்ஷ்டசாலியாய்  ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் நடித்த படத்தின் ஷூட்டிங் சுமார்    இரண்டு மாதங்கள் நடந்தது.

இந்த இடைப்பட்ட  காலத்தில் அவனுக்கும் எனக்கும் நல்ல நட்பு   ஏற்பட்டிருந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக் கொண்டிருப்போம்.

தன்னைப் பற்றி…. தன் லட்சியம் பற்றி எல்லாம் சொல்வான்.

என்னைப் பற்றி ஆர்வமாக கேட்பான்.

இந்த  இரண்டு மாதத்தில்   ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகவே புரிந்து கொண்டோம்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவன் மீது எனக்குக் காதலே வந்துவிட்டது.

அதை நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

ஆஃப்டர் ஆல் நான் ஒரு நடிகை.

அவனுக்கு நடிகைகளைப் பற்றித் தெரியும்.

நடிகை என்றால் பணத்துக்காகவும், சான்ஸுக்காகவும் பலரிடம் உடம்பை பங்கு போடுபவள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?

அவன் எப்படி என்னை, என் காதலை ஏற்றுக் கொள்வான்?

என் காதல் எனக்கே முட்டாள்தனமாக தோன்றியதால்  என்னுடைய  ஆசையையும் காதலையும்   ஆழமாய் எனக்குள்ளேயே  புதைத்துக் கொண்டேன்.

என் காதலை வெளிப்படுத்தி அவன் மறுத்துவிட்டால், அவமானம்.  அதைவிட ஏமாற்றம்.

அந்த ஏமாற்றத்தை நிச்சயமாக என்னால் தாங்க முடியாது.

அதனால் அவனோடு நட்பாகவே இருந்துவிடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்த நிலையில்….

ஒரு நாள் நானும் அவனும் மட்டும் இருந்த  ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னான்…

”நிலா ஐ லவ் யூ”

அவன் சொன்னதை, என்னால் முதலில் நம்ப முடியவில்லை.

நிஜமாகத்தான் சொல்கிறானா…  அல்லது காமெடி பண்ணுகிறானா?

வாட்ச்சில் தேதியைப் பார்த்தேன்.

ஏப்ரல் ஒண்ணாம் தேதியா?

இல்லையே….

அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவன் கண்களில் பொய்யில்லை.

என் பதிலை எதிர்நோக்கும் தவிப்புதான் தெரிந்தது.

அவனது பார்வை என்னை துளைத்துச் சென்று என் இதயத்துக்குள்ளிருந்து  பதிலைத் தேடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என் பதில் என்னவாக இருக்கும், என்று இருப்புக் கொள்ளாமல் அவன் மனசு அலைபாய்வதையும் உணர்ந்தேன்.

பதில் சொல்லவில்லை நான்.

மௌனமாக இருந்தேன்.

என்ன பதில் சொல்வது?

உண்மையில் எனக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது.

இந்த சாக்கடை வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா என்று நான் எத்தனையோ நாட்கள் ஏங்கிக் கிடந்திருக்கிறேன்.

என் ஏக்கத்துக்கு இத்தனை சீக்கிரம் விடிவு காலம் வரும் என்று நான் நினைக்கவே இல்லை.

இதோ என்னை மீட்டுச் செல்ல ஒரு ‘காதல் மன்னன்’.

அதுவும் நான் விரும்பிய ‘ஆசை’ நாயகன்.

தேங்க் காட்.

என் உடம்புக்காக அலையும் ஆண்களைத்தான் இதுவரை நான் பார்த்திருக்கிறேன்.

என் மனசை விரும்பும் முதல் ஆண் இவன்தான்.

இவனுக்காக எதையும் நான் இழக்கலாம்.

என்னிடம் இனி இழக்க என்ன இருக்கிறது?

என் உடம்பு உட்பட எல்லாவற்றையும் எப்போதே இழந்து விட்டேன்.

இழக்காமல் இருப்பது, இந்த நடிகை என்ற அந்தஸ்து ஒன்றுதான்.

என் ராஜகுமாரனுக்காக அதைத் தூக்கி எறியவும் நான் தயார்.

அவனுடைய மனைவி என்ற அந்தஸ்துக்கு முன்னால் இந்த பணம், பேர், புகழ் எல்லாம் சாதாரணம். மயிருக்கு சமம்.

அவனுக்கு மனைவியாகும் பாக்யம் எனக்குக் கிடைத்தால் அவன் காலடியில் காலம் முழுக்க கிடப்பேன்.

அவனுக்காக வாழ்ந்து, அவன் மடியிலேயே உயிரை விட வேண்டும்.

”நிலா, நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே.”

மறுபடி அவன் கேட்டபோதுதான் நான் நிகழ்காலத்துக்கு வந்தேன்.

பதிலுக்கு நானும் அவனிடம் என்னென்னவோ கேட்க நினைத்தேன்.

எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

தோன்றவில்லை என்று சொல்வதைவிட கேட்க நினைத்தது எல்லாம் மறந்துவிட்டது என்பதுதான் உண்மை.

அவனுக்குள் நான் இருக்கிறேன் என்பதே எவ்வளவு பெரிய விஷயம்.

கறைபட்ட என்னை கைபிடிக்க அவன் முன் வந்ததே வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் பாக்யம்.

அதை இழக்க நான் என்ன பைத்தியமா?

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்