காவித்துறையாகும் கல்வித்துறை

61

கொரோனா பெருந்தொற்று நாட்டை பீதிக்குள்ளாக்கியிருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயலை சத்தமில்லாமல் அரங்கேற்றி வருகிறது.

University Grants Commission என்கிற பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இளங்கலை வரலாறு படிப்புக்கான பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்துள்ளனர்.

புராணகால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும் புகுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத் தலைப்பில் இடம்பெற்றிருந்த பாடத்தை மாற்றி, 7-வது தாளில், இந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்துள்ளனர். இது சகோதரத்துவத்துடன் வாழும் இந்து – முஸ்லீம் இடையே பிரிவினை எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் மண்டைகளில் மததுவேஷம் ஏற்படவும் காரணமாக அமையும்.

இப்படிப்பட்ட பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த செயலை கண்டிக்க வேண்டிய அரசியல்கட்சிகள் தேர்தல் பரபரப்பில் இருப்பதால் இதை கண்டுகொள்ளவே இல்லை. பாஜக எதிர்பார்த்ததும் இதைத்தான். அதனால்தான் தேர்தல் பரபரப்புநிலவும் தற்போதைய சூழலை தேர்ந்தெடுத்து தன்னுடைய சசித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்த செயலை கண்டு கண்டித்தவர் வைகோ மட்டும்தான். கல்வித்துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப்போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைகோவின் அறிக்கையைத் தொடர்ந்து சீமான் போன்ற தமிழுணர்வு மிக்க மற்ற கட்சிகளின் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்தப்பிரச்சனையை கையில் எடுப்பார்கள் என்று நம்புவோம்.

கல்வித்துறையை காவித்துறையாக்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். வியூகத்தின்படி தொடர்ந்து செயல்பட்டுவரும் பா.ஜ.க. மற்றும் அதன் மாணவர் அமைப்புகளின் அடாவடிப் போக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே டெல்லி பல்கலைக்கழகத்தில் அரங்கேறியது.

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய Three Hundred Rāmāyaṇas (300 இராமாயணங்கள்) என்ற கட்டுரைக்கு எதிராக ABVP அமைப்பினர் உருவாக்கிய கலவரத்தினால் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டது.

டெல்லியில் ஆரம்பித்த அவர்களின் அடாவடிப் போக்கு நெல்லை வரை வால் நீண்டது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்த புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் ‘Walking With The Comrades’ என்ற ஆங்கிலப் புத்தகம் சில மாதங்களுக்கு முன் – நீக்கப்பட்டது.

மூன்றாண்டுகளாக பாடத்திட்டத்தில் இருந்த ஒரு புத்தகம் திடீரென நீக்கப்பட்டதற்குக் காரணம், ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா கட்சி சார்ந்த மாணவர் அமைப்பான ABVP என்கிற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் நிர்ப்பந்தம்தான்.

அருந்ததி ராய் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக அந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்ற ஏ.பி.வி.பி. அமைப்பின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘Walking With The Comrades’ புத்தகத்தை நீக்கியது.

முதுநிலை பட்டப்படிப்பில் அனைத்து வகை வரலாறு – இலக்கியம் ஆகியவற்றைக் கற்கின்ற வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஹிட்லர் – முசோலினி – இடி அமீன் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகள் – பாடங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படித்து, அதிலிருந்து ஏற்க வேண்டியவற்றை ஏற்பதும் – தள்ள வேண்டியதைத் தள்ளுவதும் அவர்களின் அறிவாற்றல் மேம்பாடுக்குரியது.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் எது இடம்பெறவேண்டும் என்பது அதன் துணைவேந்தர் – பேராசிரியர்கள் – கல்விப்புலம் சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரின் முடிவுக்குட்பட்டதே!

இந்திய அரசியலமைப்பில் கல்வி என்பது பொதுப் பட்டியலின் அதிகார வரம்பில் இருக்கும் ஒரு துறை. எனவே மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இரண்டுமே இந்த விவகாரத்தில் சட்டமியற்ற முடியும்.

உயர்கல்வித்துறை என்பது, மாநில அரசிடம் உள்ள நிலையிலும்கூட ஏபிவிபி அமைப்பின் எதிர்ப்புக்குப் பயந்து – பணிந்து அருந்ததிராயின் புத்தகத்தை நீக்கிய அடிமை அ.தி.மு.க. அரசை மன்னிக்கவே முடியாது.
இன்னொரு பக்கம், சிபிஎஸ்சி 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படம் இடம் பெற்றிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் பாடப்பிரிவில் பகவத் கீதை பாடமும் இடம்பெற்றது.

தமிழ், திருக்குறள், திராவிடம், மதநல்லிணக்கம், தோழமை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறவர்களை ‘அர்பன் நக்சல்கள்’ என்றும், ‘ஆன்ட்டி இந்தியர்கள்’ என்றும் முத்திரை குத்துகின்றனர் மதவெறிபிடித்த இந்துத்வா சக்திகள்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் உண்மையான தேசவிரோதிகள் இத்தகைய மதவெறி சக்திகளே.

கல்விப்புலத்தில் காவி விதைகளைத் தூவுவது எதிர்காலச் சமுதாயத்தின் மனதில் நஞ்சைக் கலக்கும் செயல். இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

நாட்டின் இளைய மாணவ சமூகமும், முற்போக்காளர்களும் மோடி அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை தீவிரமாக எதிர்ப்பதோடு, எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்த பாஜக ஆட்சியையும் அவர்களின் பழமைவாத சித்தாந்தங்களையும் அகற்ற வேண்டும்.

சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசும் திமுக அடுத்த ஆட்சியைப்பிடிக்கும் என்ற செய்திகள் வருகின்றன. தந்தை பெரியார் – அண்ணா ஆகியோர் வகுத்தளித்த கொள்கைகளை நெஞ்சில் ஏந்திச் செயல்படுவதாக சொல்லும் திமுக ஆட்சியமைந்த பிறகாவது கல்வியை காவிமயமாக்கும் செயல் தடுத்து நிறுத்தப்படுமா? அல்லது எடப்பாடி அரசைப்போல் திமுக அரசும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்கப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.