தணிக்கையில் தப்புமா திரௌபதி? – தீட்டப்படும் கத்தரி

1969

தமிழில் ஆண்டுக்கு 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சுமார் 200 திரைப்படங்கள்தான் திரைக்கு வருகின்றன. வெளியாகும் 200 படங்களில் 50க்கும் குறைவான படங்களே ரசிகர்களால் கவனிக்கப் படுகின்றன. ஏனைய படங்களால் யாருக்கும் எந்தப்பிரயோஜனமும் இல்லை. அந்தப்படங்களை எடுப்பவர்களுக்கும் யாதொரு நன்மையும் விளைவதில்லை.

திரௌபதி என்கிற படமும் ஏறக்குறைய இப்படியான ஒரு படமாக ரசிகர்களின் கவனத்துக்குவராமலே காணாமல்போயிருக்கக்கூடிய ஒரு படம்தான். சாதி வெறியைத் தூண்டுகிற வசனங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான காட்சிகளும் அப்படத்தை பேசுபொருளாக மாற்றிவிட்டன. அதன் தொடர் நிகழ்வுகள் திரௌபதி படத்தை பரபரப்பு செய்தியாக்கியதோடு அந்தப் படத்துக்கு ஓசி விளம்பரமாகவும் அமைந்துவிட்டது.

சில வருடங்களுக்குமுன் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற மிகவும் சுமாரான ஒரு படத்தை இயக்கியவர் மோகன்.ஜி. தோல்விப்படம் கொடுத்த இயக்குநர்களுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். அதனால், க்ரவுட் ஃபண்டிங் (Crowd Funding) முறையில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து திரௌபதி என்ற படத்தை இயக்கி வந்தார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு சற்று முன்புவரை இப்படி ஒரு படம் தயாரானதே யாருக்கும் தெரியாது. திரௌபதி படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு பற்றிக்கொண்டது பரபரப்பு.

திரௌபதி படம் சாதிவெறியைத் தூண்டுவதாகவும், இந்தப்படம் வெளியானால் தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெடும் என்று பலரும் அச்சத்தை வெளிப்படுத்த, இன்னொருதரப்பினர் அந்தப் படத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றனர். படம்குறித்த வாத, பிரதிவாதங்களால் சமூகவலைத்தளங்களில் கடும்சர்ச்சைகளை சந்தித்து வருகிறது திரௌபதி.

உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற முன்குறிப்புடன் டிரெய்லரில் விரியும் காட்சிகள் உண்மையிலேயே பகீர் ரகம்.

ஒரு காட்சியில் ஒரு இளைஞனை அடங்கிப்போகுமாறு சொல்ல, “அடங்குன்னா அடங்கக்கூடாதுன்னு எங்க அண்ணன் சொல்லி இருக்காரு”  என்று   அந்த இளைஞன் திமிராக பதில் சொல்கிறான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் “அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி, திமிரி எழு” என்கிற கொள்கை முழக்கத்தை முன்வைத்தவர் தொல்.திருமாவளவன்.

தங்களை அடங்கக்கூடாது என்று அண்ணன் (திருமாவளவன்?) சொல்லி யிருப்பதாக கூறும் அந்த இளைஞன் மற்றொரு காட்சியில், அந்த சாதிப்பெண்களை திருமணம் செய்து செட்டிலாகுமாறு எங்கள் அண்ணன் சொல்லி இருக்கிறார் என்கிறான்.

ஒடுக்கப்பட்ட இளைஞனை காதலித்து திருமணம் செய்த பெண்ணை அவரது உறவினர்கள் மிரட்டி வீடியோ எடுப்பது போன்ற காட்சியும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பிற சாதிப்பெண்களை காதலிப்பதே பணத்துக்காகத்தான் என்றும், இதை அவர்கள் திட்டமிட்டே செய்வதாகவும் திரௌபதி படத்தின் டிரெய்லரில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திரௌபதி படத்தின் ஹீரோவான ரிச்சர்ட், முரட்டுமீசையுடன் குறிபிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞராக நடித்துள்ளார். அவர் பேசும் வசனங்களும்கூட, அவருடைய சாதிப்பெண்களை காதலிக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை எச்சரிக்கை செய்வதுபோல் உள்ளது.

இப்படியாக, படம் முழுக்க சாதிவெறுப்பை உமிழ்கிற காட்சிகளும், வசனங்களும் நிரம்பிக்கிடப்பதோடு, வில்லன் கதாபாத்திரத்தை அச்சுஅசலாக அப்படியே திருமாவளவனின் வார்ப்பாகவே திரையில் நடமாட விட்டிருக்கின்றனர்.

வில்லன் அணிந்திருக்கும் ஆடை வடிவமைப்பு, தோற்றம் திருமாவளவனை ஞாபகப்படுத்துகிறதே? என்று கேட்டால், “வில்லன் தொடர்பான காட்சிகளை நான் போனவருடம் ஜூன் மாதத்திலேயே படமாக்கிவிட்டேன். அவர் சமீப காலமாகத்தான் இதுமாதிரியான உடைகளை அணிய ஆரம்பித்திருக்கிறார்” என்று விளக்கம் செல்லிஇருக்கிறார் திரௌபதி படத்தின் இயக்குநர்.

கூடுதல் தகவலாக, “நான் திண்டிவனத்தைச் சேர்ந்தவன். ஆனால் பல வருடங்களாக சென்னையில் வசிக்கிறேன். வடசென்னையில் நான் பார்த்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படத்தையே எடுத்திருக் கிறேன். ஒரு அரசியல்கட்சியில் வட்டச்செயலாளர் ரேன்ஜில் இருக்கும் ஒருவர் சில வக்கீல்களுடன் சேர்ந்து இதுபோன்ற சுமார் 3500 திருமணங்களை செய்து வைத்திருக்கிறார்” என்கிறார்.

மேல்சாதியினரை உயர்த்தியும், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே மக்களை ரட்சிக்க வந்தவர்கள் என்பது போன்ற பிம்பம், தமிழ்சினிமாவில் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. தேவர்மகன், சின்னக்கவுண்டர் போன்ற படங்கள் அந்த சாதிகளின் பெருமையைப் பேசியது மட்டுமல்ல, படத்தின் தலைப்பிலும் அந்த சாதிகளைத்தாங்கி வந்தன.

இதுபோன்ற படங்களில் எல்லாம் குறிப்பிட்ட சாதியினரை கதாநாயகர்களாக தூக்கிப்பிடித்தது மட்டுமல்ல, அந்த கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களுக்கு கைகட்டி சேவகம் செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தனர்.

இந்த சித்தரிப்பை உடைத்து அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை கதாநாயகனாக அடையாளப்படுத்தும்போக்கு அதிகரித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய, காலா, கபாலி போன்ற படங்களில் ரஜினியை நேரடியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டவில்லை என்றாலும் அவருடைய கதாபாத்திரத்தை தன்னுடைய சமூகத்தவராகவே உருவாக்கி யிருந்தார். அவரது தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் போன்ற படங்களின் கதாநாயகன்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே வடிவமைக் கப்பட்டிருந்தனர். இந்தப் படங்களில் இடம்பெற்றிருக்கும் ஆதிக்க சாதி, ஆண்டை பரம்பரை போன்ற வசனங்களை வைத்தே இதை எளிதில் நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை கதாநாயகர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட படங்களுக்கு ஒரு தரப்பில் ஆதரவு கிடைத்த அதேநேரம் இன்னொரு தரப்பில் எதிர்ப்பும் எழுந்தது.

இப்படியான சூழலில்தான் திரௌபதி படத்தின் டிரெய்லர் வெளியாகி யிருக்கிறது. ‘கபாலி’,‘காலா’, ‘பரியேறும் பெருமாள், ‘அசுரன்’ போன்ற படங்களுக்கான எதிர்வினையா இந்தப்படம்? அந்தப்படங்கள் முன்வைக்கும் கருத்துக்களை எதிர்க்கும் படமா ‘திரௌபதி? என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

“இந்தப் படங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பே அதாவது கடந்த 2013 ஆம் வருடத்திலேயே இந்தக்கதையை தேர்வு செய்துவிட்டேன். க்ரவுட் ஃபண்டிங் முறையில் படம் எடுத்ததால் இத்தனை காலமாகிவிட்டது.” என்று சொன்னாலும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில், “பா.ரஞ்சித் பேசியது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால், நான் எடுப்பது நாணயத்தின் மறுபக்கம்.” என்றும் சொல்லி இருக்கிறார் ‘திரௌபதி’ படத்தின் இயக்குநர்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல், ரசிகர்களின் கவனத்துக்கு வராமலே காணாமல்போயிருக்கக்கூடிய திரௌபதி சமூக வலைத்தளங்களில் இந்தளவுக்கு வைரலானது எப்படி? என்ற கேள்வி நிச்சயமாக எழும். அதற்கான பதில் இதுதான்… இப்படத்தின் இயக்குநரான மோகன்.ஜி. அஜித்தின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக்கொள்பவர். அதுமட்டுமல்ல, அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர்தான் இந்தப் படத்தின் ஹீரோ ரிச்சர்ட். இந்த இரண்டு தொடர்புகள் போதாதா அஜித் ரசிர்களுக்கு? திரௌபதி படத்தை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விட்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநரை அழைத்து அஜித் பாராட்டினார் என்ற தகவலோடு, அஜித்துடன் மோகன். ஜி இருக்கும் ஒரு புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஷேர் பண்ணப்பட்டது. இப்படியொரு தகவல் வெளியானதும், சாதிவெறியைத் தூண்டும் திரௌபதி படத்தை அஜித் ஆதரிப்பதா? அந்தப்படத்தின் இயக்குநரை அழைத்து பேசுவதா? என்றெல்லாம் அஜித்துக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

“திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகராக அவருடன் எடுத்த புகைப்படம் அது’’ என்று இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திரௌபதி படத்தின் இயக்குநர்.

இதற்கிடையில், சமூகவலைத்தளங்கள், மற்றும் ஊடகங்கள் புண்ணியத் தினால் படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைத்திருப்பதால் திரௌபதி படத்தை வாங்கி வெளியிட பல பெரியநிறுவனங்கள் முன்வந்துள்ளன.  அதேநேரம், இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்பூரில் உள்ள 13 தியேட்டர்களில் இந்தப்படத்தை ரிலிஸ் செய்ய வேண்டாம் என்று ஆம்பூர் பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் தியேட்டர் உரிமையாளர்களிடமும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்துள்ளனர்.

இன்னொரு பிரிவினரோ, இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கியே தீருவோம் என்று சூளுரைத்து, இப்போதே வாழ்த்துப் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் திரௌபதி படம் திரைக்கு வரும்போது மிகப்பெரும் சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.

எனவே திரௌபதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மண்டல தணிக்கை அலுவலகத்துக்கு எழுத்துப்பூர்வமாகவும் ஏராளமான கடிதங்கள் வந்திருப்பதாக கேள்வி. திரௌபதி படம் இதுவரை தணிக்கை செய்யப்படவில்லை என்றால், நிச்சயமாக தணிக்கையில் அந்தப்படம் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, ஏற்கனவே இந்தப்படம் தணிக்கை செய்யப்பட்டிருந்தால்?

“திரௌபதி படத்துக்கு ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் எங்களால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரமும் எங்களுக்கு இல்லை. ஒருவேளை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சான்றிதழை ரத்து செய்யும்படி அங்கிருந்து எங்களுக்கு உத்தரவு வந்தாலோ, அல்லது எங்கள் அமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்தாலோ மட்டும்தான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.” என்கிறது தணிக்கை அலுவலக வட்டாரம்.

திரௌபதி படக்குழுவினரிடம் நாம் விசாரித்தபோது, இதுவரை தணிக்கை சான்றிதழ் பெறவில்லை என்றும் இந்தவாரம்தான் தணிக்கைக்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

கத்தரி ரெடி. தப்புமா திரௌபதி?

  • ஜெ.பிஸ்மி