அமைச்சரின் பதவியைக் கேட்ட டாக்டர்

46

மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்த டாக்டர்.மகேந்திரன் சில மாதங்களுங்கு முன், அந்தக்கட்சியிலிருந்து விலகினார்.

கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.

மகேந்திரனின் விலகலுக்கும், கமல் மீது குற்றம்சுமத்தியதற்கும் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்ல, டாக்டர் மகேந்திரன் விரைவில் தி.மு.க.வில். இணைய இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய உடனே தி.மு.க.வில் இணைந்தால் அனாவசிய விமர்சனங்களுக்கு வழிவகுத்துவிடும் என்பதால் சில வாரம் அமைதியாக இருந்தால் டாக்டர் மகேந்திரன்.

இதுதான் சமயம் என்று தமிழக பாஜக தலைவர்கள் சிலர் டாக்டர் மகேந்திரனை சந்தித்து பாஜகவில் சேரும்படி வற்புறுத்தினர். முக்கிய பதவி தருவதாகவும் ஆசைகாட்டினார்கள்.

தமிழ்நாட்டைப்பொருத்தவரை பாஜகவில் சேருவது தற்கொலைக்கு சமம் என்ற உண்மையை புரிந்து வைத்திருந்த டாக்டர் மகேந்திரன், பாஜகவில் சேர வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

இன்னொரு பக்கம், முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பினர், அதிமுகவில் சேரும்படி டாக்டர் மகேந்திரனை வற்புறுத்தி வந்தனர்.

அதிமுகவினருடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டிருந்த டாக்டர் மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனை தோற்கடித்துவிட்டார் என்று அவர் மீது மக்கள் நீதி மய்யத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் அதிமுகவில் சேர்ந்தால், தன்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடும்… அது தன்னுடைய நற்பெயரை கெடுத்துவிடும் என்பதால் அதிமுகவின் அழைப்பையும் நிராகரித்தார் டாக்டர் மகேந்திரன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டநிலையில் நீண்டகாலத்துக்கு அமைதியாக இருந்தால் அரசியல்களத்தில் மறக்கப்பட்டுவிடுவோம் என்பதை புரிந்து கொண்ட டாக்டர் மகேந்திரன் சில மாதங்களுக்கு முன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில்…

திமுகவில் இதுவரை அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை?

ஏன்… என்ன காரணம்?

புதிதாக கட்சியில் சேர்ந்த டாக்டர் மகேந்திரனுக்கு மாநில அல்லது மாவட்ட அளவில் முக்கியமான பதவியைக் கொடுத்தால், கட்சியில் நீண்டகாலமாக இருக்கும் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்படும்.

ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக மிகவும் பலவீனமாக உள்ளது. டாக்டர் மகேந்திரனுக்கு பதவி கொடுக்கப்போய் அது கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிடுமோ என்பது திமுக தலைமையின் கவலை.

திமுகவில் சாதாராண தொண்டனாக இருக்க டாக்டர் மகேந்திரனுக்கு விருப்பமில்லை.

அதனால் திமுகவின் ஐடி விங் செயலாளர் பதவியை தனக்கு வழங்கும்படி வாய்விட்டே கேட்டிருக்கிறார் டாக்டர் மகேந்திரன்.

திமுகவின் ஐடி விங் செயலாளராக இருப்பவர் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

2017ல் திமுகவுக்காக ஐடி விங்கை உருவாக்கியதே இவர்தான். அதன் நிறுவன செயலாளாராக இருக்கும் தியாகராஜனின் கீழ் ஒன்றரை லட்சம்பேர் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

தான் வகிக்கும் ஐடி விங் செயலாளர் பதவியை டாக்டர் மகேந்திரனுக்குக் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் பிடிஆர் தியாகராஜன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டிருக்கிறார்.

என்னிடமிருந்து ஐடிவிங் செயலாளர் பதவியை பறித்தால், ஜக்கி வாசுதேவ்க்கு எதிராக நான் பேசியதால் நீங்கள் என் மீது நடவடிக்கை எடுத்ததாக எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.

அது எனக்கும் அவமானம்… கட்சிக்கும் கெட்டபெயர்… இன்னும் ஒரு வருடம் கழித்து யாருக்கு வேண்டுமானாலும் இந்த பதவியை கொடுங்கள் நோ அப்ஜெக்ஷன் என்று எடுத்துரைத்திருக்கிறார்.

அதன் பிறகு இந்த விஷயத்தை ஆறப்போட்டுவிட்டது திமுக தலைமை.

ஐடி விங் செயலாளர் பதவி தனக்கு கிடைப்பதில் இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது தெரிந்ததும், டாக்டர் மகேந்திரன் அப்செட்டாகிவிட்டாராம்.

அதுமட்டுமல்ல, எனக்கு ஐடிவிங் செயலாளர் பதவி வேண்டாம்… அமைச்சர் பிடிஆர் தியாகராஜனே ஐடிவிங் செயலாளராக இருக்கட்டும். நான் இணை செயலாளராக பணியாற்றுகிறேன். ஒரு வருஷம் கழித்து ஐடிவிங் செயலாளர் பதவியை எனக்குக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம் டாக்டர் மகேந்திரன்.

இதற்கிடையில் கோவை தி.மு.க. மண்டல பொறுப்பாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க கட்சித்தலைமை தீர்மானித்திருக்கிறதாம்.

நான் பொறுப்பேற்ற உடன் உங்களுக்கு உரிய பதவி தருகிறேன் என்று டாக்டருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் உதயநிதி.

டாக்டர் மகேந்திரனுக்கு பதவி கொடுப்பது தொடர்பாக திமுகவில் நடக்கும் பஞ்சாயத்துகள் ஒன்றுவிடாமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக்குப்போக, கைகொட்டிச் சிரிக்கிறதாம் கமல் தரப்பு.

 

You can watch on youtube :