பழைய தலைவரே பதவியை பிடித்தார்… – விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் திருப்பம்…!

1006

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, டிஏ அருள்பதி இருவரும் போட்டியிட்டனர்.

தலைவர் பதவி வகித்த அருள்பதி மீது கட்டப்பஞ்சாயத்து பண வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததால் இந்த தேர்தலில் அருள்பதிக்கு மீண்டும் தலைவர் நாற்காலி கிடைக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய தலைவர் அருள்பதி 248 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா 194 வாக்குகளும் பெற்றனர்.

செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக்குமார் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நேசமணி 142 வாக்குகளும், கலைப்புலி சேகரன் 140 வாக்குகளும் பெற்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி சீனிவாசலு 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே ராஜன் 199 வாக்குகள் பெற்றார்.

இணைச் செயலரளர் பதவிக்கு ஸ்ரீ ராம் 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜகோபாலன் 173 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பொறுப்புக்கு பாபுராவ் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சித்திக் 142 வாக்குகள் பெற்றார்.

இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து அனைத்து பொறுப்புக்களுக்கும் அருள்பதி அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.