சீனு ராமசாமி சினிமாவுக்கு செட் ஆவானா? – பாலாவுக்கு வந்த பலத்த சந்தேகம்….

742

பொதுவாக திரைப்பட விழாக்களுக்கு சென்றால், இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டுதான் உட்கார வேண்டியதாக இருக்கும்.

பாராட்டுகிறேன் என்ற பெயரில் பொய்யாய் பொளந்து கட்டுவார்கள்.

பத்து பைசாவுக்கு போறாத நபர்களை எல்லாம் பாராட்டித்தள்ளுவார்கள்.

இத்துப்போனவர்களை எல்லாம் இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

அதிலும் மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

காதில் புகையே வந்துவிடும். அந்தளவுக்கு பொய்யுரைத்து பார்வையாளர்களை நொந்து நூடுல்ஸாக்கிவிடுவார்கள்.

இயக்குநர் பாலா இந்த ரகம் இல்லை.

அவர்களே… இவர்களே… என்று சம்பிரதாயமாக எல்லாம் பேசமாட்டார்.

வார்த்தை ஜாலமும் காட்டமாட்டார்.

வாயில் வந்ததை அப்படியே பேசிவிடுவார்.

பாலாவின் பேச்சு சிலருக்கு இனிக்கும். பலருக்கு கசக்கும்.

விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கியுள்ள ‘தர்மதுரை’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பாலா பேசியதும் இந்த ரகம்தான்.

‘ஸ்டுடியோ 9’ சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்!

இயக்குநர் பாலா ‘தர்மதுரை’ பாடல்களை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பாலா வழக்கம்போல் தன் இயல்பு மாறாமல் பேசினார்…

‘‘என்னோட குருநாதர் பாலுமகேந்திராவிடம் இயக்குநர் சீனுராமசாமியும் பாடம் பயின்றுள்ளார்.

அப்போது சீனுராமசாமி சினிமாவை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்!

‘டேய் உனக்கு வேறு எதுவும் பேசத் தெரியாதா? சினிமாவை விட்டால் வேறு எந்த விஷயமும் இல்லையா?’ என்று நான் அடிக்கடி அவனிடம் கேட்பேன்!

சில சமயங்களில் சீனுவை பார்த்து ஓடி ஒளிந்தும் கூட இருக்கிறேன்.

ஏன் தெரியுமா? அவனிடம் பேசினால் சினிமா பற்றிப் பேசிப்பேசி வறுத்து எடுப்பான்!

அதனாலேயே சீனு ஒரு முட்டாள், இவன் எப்படி சினிமாவுக்கு செட் ஆவான் என்று கூட சில சமயங்களில் நான் நினைத்திருக்கிறேன்.

அவன் இயக்கிய படங்களை பார்த்தப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

அதுமட்டுமல்ல, அவன் ஒரு திறமைசாலி என்பதையும் புரிந்துகொண்டேன்.

சீனு ராமசாமிக்காகவும், இந்தப்படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷுக்காகவும்தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன்’’ என்று பாலா பேச, அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

தர்மதுரை படத்துக்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர்.

தன் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்ற அடிப்படையில் கூட யுவனுக்காக விழாவுக்கு வந்ததாக பாலா குறிப்பிடவில்லை.

தாரை தப்பட்டை படத்தையே கிழிச்சுத் தொங்கப்போட்டவரு இளையராஜாதான். அந்த கோபமா இருக்கும்.