தர்மதுரை – விமர்சனம்

1447

தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை படங்களைப் போலவே வலுவான கதை அம்சத்துடன் சீனு ராமசாமியிடமிருந்து வெளிவந்திருக்கும் சமூகப்பொறுப்புமிக்க திரைப்படம்.

குத்துப்பாட்டு, ஆபாசம், வன்முறை போன்ற தமிழ்சினிமாவுக்கே உரித்தான தீயஇலக்கணங்களை எடுத்தாளத்தக்க ஏதுவான கதைக்களம்தான்.

அவற்றை ஏறெடுத்தும் பார்க்காமல், தனக்கு தெரிந்த திரைமொழியில் தர்மதுரை என்கிற மனிதநேயமிக்க மருத்துவரின் வாழ்க்கைக்கதையைச் சொல்லி இருக்கிறார் சீனுராமசாமி.

எந்நேரமும் குடித்துக்கொண்டே திரிகிற விஜய்சேதுபதி, சொந்த அண்ணன் தம்பிகளாலேயே சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பெரும்தொந்தரவாக இருக்கிறார்.

விஜய்சேதுபதியின் இடையூறு எல்லை மீறிப்போய்விட, அவரை ஒரு அறைக்குள் அடைத்து வைக்கின்றனர்.

உடன் பிறந்தவன் என்றும் பாராமல், அவனை போட்டுத் தள்ளிடலாமா என்று யோசிக்கிறார்கள்.

அவர்களின் சதித்திட்டத்தை மோப்பம் பிடிக்கும் அம்மா ராதிகா அங்கிருந்து விஜய்சேதுபதியை தப்பிக்க வைக்கிறார்.

தப்பி ஓடுகிற பதட்டத்தில், அவரது அண்ணன் வைத்திருக்கும் எட்டு லட்ச ரூபாய் பணப்பையை தவறுதலாக எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்.

ஊர் மக்களிடம் வசூலித்த சீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் விஜய்சேதுபதியின் குடும்பமே அவமானப்படுவதோடு, சொந்த வீட்டை இழந்து, ஊருக்கு வெளியே குடியேறுகிறது.

இது எதுவுமே தெரியாமல், தனக்கு சந்தோஷம் தந்த இடத்தை நோக்கி பயணப்படுகிறார் விஜய்சேதுபதி.

அவர் ஏன் குடிநோயாளி ஆனார்? என்ற கேள்விக்கு விடையாக விரியும் ப்ளாஷ்பேக்கில்…

மதுரை மருத்துவக்கல்லூரி மாணவராக விஜய்சேதுபதி.

சக மாணவிகளாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே.

மருத்துவக்கல்லூரியின் பேராசிரியராக ராஜேஷ்.

தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே இருவருக்குமே விஜய்சேதுபதி மீது காதல்.

தன் காதலை தனக்குள்ளேயே வைத்திருக்கிறார் தமன்னா. ஸ்ருஷ்டி டாங்கே வெளிப்படுத்திவிடுகிறார்.

இவர்கள் இருவருமல்லாமல், கிராமத்துப்பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் காதல் வயப்படுகிறார் விஜய்சேதுபதி.

கல்யாணத்தை நோக்கி நாட்கள் நகர்கிற வேளையில், அவருக்கு தெரியாமலே… அவரது தம்பிகள் இருவரும் 50 பவுன், 5 லட்சம் பணம் என்று வரதட்சணை கேட்க, தற்கொலை செய்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரது மரணத்தை மறக்க முடியாத துக்கத்தில் குடிநோயாளியாகிவிட்ட விஜய்சேதுபதி அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பது தர்மதுரை படத்தின் மீதிக்கதை.

தர்மதுரை என்ற தலைப்புக்கு மிகப்பொருத்தமான கதாபாத்திரம் விஜய்சேதுபதிக்கு.

படத்தின் துவக்கத்தில் குடித்து விட்டு கலாட்டா பண்ணுகிற சராசரி குடிகாரனாக…

மருத்துவத்தின் மாண்பு தெரிந்த சிறந்த மாணவனாக…

தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே தன்னை விரும்புவது தெரிந்து அதை மிகவும் பக்குவமாக கையாள்கிற இளைஞனாக….

கிராமத்து அப்பாவி பெண்ணா ஐஸ்வர்யா தன்னை அண்ணன் என்று அழைத்தும் அதையும் மீறி அவர்மீது காதல் வயப்படும் காதலனாக….

அம்மா ராதிகாவுக்கு கட்டுப்பட்ட மகனாக..

இவை எல்லாவற்றையும்விட, மருத்துவ படிப்பு படித்தவர்கள் வெளிநாடு செல்லாமல் கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்ற தன் புரஃபொசரின் வாக்குப்படி கிராமத்தில் 30 ரூவா டாக்டராக பணி செய்யும் டாக்டராக… என படம் முழுக்க வெவ்வேறு பரிமாணங்களில் விளையாடி இருக்கிறார் விஜய்சேதுபதி.

தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று கதாநாயகிகள்.

ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து, அந்த கதாபாத்திரத்துக்கு கொடுத்த முடிவு அதிர்ச்சி என்றாலும், இயக்குநரின் புத்திசாலித்தனம்.

முதன்முறையாக தமன்னாவுக்கு நடிக்க அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம்.

டாக்டர் சுபாஷினியாக நினைவில் நிற்கிறார். சொந்த குரலில் டப்பிங்… அட நல்லாத்தான் இருக்கு.

இவர்களை ஓவர்டேக் பண்ணி இருக்கிறார் அன்புச்செல்வி என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய்சேதுபதியின் அம்மாவாக வரும் ராதிகா, மருத்துவ கல்லூரி புரொஃபஸராக வரும் ராஜேஷ், ஐஸ்வர்யாவின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்சேதுபதியின் அண்ணனாக வரும் அருள் தாஸ், தம்பியாக வரும் சௌந்தரபாண்டி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியானவை. ராதிகா, ராஜேஷ் பாத்திரங்கள் நெகிழ்ச்சியானவை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும், சுகுமாரின் ஒளிப்பதிவும் தர்மதுரையை தரமானதுரையாக்கி இருக்கின்றன.

வெற்றிகரமான சினிமாவுக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட தரமான பொழுதுபோக்கு படம்.

எவ்வித குறுகுறுப்பும்… குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்க தகுதியான படம்.