கலைப்புலியை மிரட்டும் கபாலி பட விநியோகஸ்தர்கள்…

714

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்சினிமா வரலாற்றில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் கபாலிதான்.

அது மட்டுமல்ல, ஏர்ஏசியா விமானத்தில் விளம்பரம் செய்தது உட்பட பப்ளிசிட்டியிலும் பல புதுமையான முயற்சிகளும் கபாலி படத்துக்காக செய்யப்பட்டன.

கபாலி படத்துக்கு  கொடுக்கப்பட்ட பில்டப் காரணமாக அப்படத்தைப் பார்க்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய  எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மக்களின் பேராதரவு காரணமாக உலக அளவில் 600 கோடியை கபாலி படம்  வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

கபாலி படம் வெளியாகி ஏறக்குறைய நான்கு மாதங்களாகிவிட்டநிலையில்,  தற்போது கபாலி படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ரஜினியின் முந்தைய படமான லிங்கா படத்தினால் நஷ்டம் என்று சிலர் கூக்குரல் எழுப்பியதைப்போலவே தற்போது கபாலி படத்தினால் நஷ்டம்  ஏற்பட்டதாகக் கூறி நஷ்டஈடு கேட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“தஞ்சாவூரில் உள்ள விஜயா  திரையரங்கில் கபாலி படம் திரையிடப்பட்டதற்காக 81 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது.  ஆனால் 25  லட்சம் மட்டுமே வசூலானது. அதாவது மூன்றில் ஒரு பங்கு கூட வசூலாகவில்லை. இதே நிலை தான் எல்லா ஊரிலும். கபாலி படம் சரியில்லை என்றதும் அனைத்து விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்ட தாணு நஷ்டம் ஈடுகட்டப்படும் என உத்தரவாதம் தந்ததால் எல்லோரும் பொறுமையாக  இருந்துள்ளனர். ஆனால் சொன்னபடி நஷ்டத்தை திருப்பித் தராததால் ஆத்திரமடைந்த திரையரங்க உரிமையாளர்கள் தாணுவின் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளார்கள்.”

என்று நேற்று வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் பரப்பப்பட்டது.

“கபாலி நஷ்டஈடு தொடர்பாக அதன் தயாரிப்பாளர் தாணுவை சற்றுமுன் அவரது அலுவலகத்தில் திருச்சி – தஞ்சை ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் மீண்டும் மாலை 4  மணிக்கு  பேச்சுவார்த்தை துவங்க உள்ளது. இதில் நஷ்டஈடு கிடைக்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.” என்று மீண்டும் ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டது
“கபாலி நஷ்டஈடு தொடர்பாக அதன் தயாரிப்பாளர் தாணுவை திருச்சி – தஞ்சை ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து  அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதற்காக பத்திரிகையாளர்களை விரைவில் சந்திப்பார்கள்.” மறுபடியும் அப்டேட் செய்யப்பட்டது.

என்ன நடக்கிறது? கலைப்புலி தாணுவிடம் பேசினோம்…

“கபாலி படத்தின்  திருச்சி ஏரியாவை வாங்கியது  முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன்.  அவருக்கு மட்டுமல்ல, அவரிடமிருந்து படத்தை வாங்கியவர்களுக்கும் கபாலி மிகப்பெரிய லாபத்தையே கொடுத்திருக்கிறது. உண்மை இப்படி இருக்க, கபாலி படத்துக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் ப்ளாக் மெயில் செய்கிறார்கள். இவர்கள் யாரும் என்னிடம் பிசினஸ் வைத்துக் கொண்டவர்கள் இல்லை. இவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள்!  கபாலி படத்தின்  திருச்சி ஏரியாவை வாங்கியவர் தயாரித்துள்ள மியாவ் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவுக்கு என்னை அழைத்தனர். போய் வாழ்த்துவிட்டு வந்தேன். உண்மை இப்படி இருக்க, கபாலி படத்தை வைத்து யாரோ சிலர் குட்டையைக்குழப்ப நினைக்கின்றனர்.”