என்னை முந்தி கொண்ட கமல் – ‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ விழாவில் கலகலப்பூட்டிய பார்த்திபன்

348

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குனர் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன் , A.P ஸ்ரீதர் போன்ற பலபேர் இருக்கிறார்கள்  நானும்  ரவுடிதான் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை  தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல்  அந்த வேலையை ஆரம்பித்து விட்டார்.

குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ” என்றார் .

நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.ஸ்ரீதர் “இதுபோன்ற  தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள்  உலகம் முழுக்க பனிரெண்டு  நாடுகளில் 42 இடங்களில் இது இருக்கிறது . பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது . இந்தியாவில் இதுதான் முதல் தந்திரக் கலை ஓவியக் காட்சியகம் .

அடுத்து பெங்களூர், மும்பை  உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன் . இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய்” என்றார்.

இங்கு என்ன சிறப்பு?

“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலைப் பொருள்கள் இங்கு நிறுவப்பட்டிருகின்றன. இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்றுதான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் இந்த ட்ரிக் ஆர்ட் வகை ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகம் என்பது  வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல் தன்மை கொண்டதாக இருக்கும். தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அப்படிப்பட்ட கலை, பங்கேற்பாளர் இன்றி இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாது . இது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது.

பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.”

உங்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது?  உங்கள் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சி காத்திருக்கிறது. வேடிக்கை, நகைச்சுவை ஆனால் நிச்சயமாக நீங்கள் மூட்டாளாக்கப்பட மாட்டீர்கள்!

“கண் கட்டு வித்தைக்கு தயாராக வாருங்கள்” என்ற சவாலோடு அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:

1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.

2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார்டு தரப் போகிறார்.

3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.

4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம்கொடுங்கள்.

5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்?

6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவ் அரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா?

8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.

9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” –மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா? உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…

10. “மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.

11. “அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்தமாபெரும் குமிழியில்.

12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்!

13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.

14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்!

இதுபோல் மொத்தம் 24 ஓவியங்கள். இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. ஒரு மனிதன் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே கொண்டு வர இந்தக் கலைக்கூடம் உதவும்.

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குகிறார்  உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.