ஜி.எஸ்.டி.யை சினிமாக்காரர்கள் எதிர்ப்பது என்?

1228

தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி… என்பதுபோல் மற்றவர்களுக்கு…. அதாவது, மக்களுக்கு பிரச்சனைகள் வரும்போது வாயை மூடிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்கள் தனக்கு பிரச்சனை வரும்போது மட்டும் குய்யோமுறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள்.

உதாரணமாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்  செல்லாது என சர்வாதிகாரத்தனமாக மோடி அறிவித்தபோது, நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

தான் உழைத்து சேமித்து வைத்த பணத்தை எடுக்க, வங்கி, மற்றும் ஏடிஎம் வாசலில் பல மாதங்கள் வரிசையில் நிற்கும்நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்.

கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன், கள்ள நோட்டை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மோடி நடத்திய இந்த கபடநாடகத்தை  ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்த்தபோது, ரஜினியும், கமலும் முந்திரிக்கொட்டையைப்போல் முந்திக் கொண்டு மோடிக்கு பாராட்டு பத்திரம் வாசித்தனர்.

இன்றைக்கு ஜி.எஸ்.டி. என்ற பெயரில், துப்பாக்கியை சினிமாக்காரர்கள் பக்க(மு)ம் திருப்பியுள்ளார் மோடி.

அதென்ன ஜி.எஸ்.டி.?

சரக்கு மற்றும் சேவை வரி  (Goods and service Tax ) என்பதன் சுருக்கம்தான் ஜி.எஸ்.டி.

நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் பல்வேறுவிதமான வரிகளை மத்திய அரசும், மாநில அரசும் விதிக்கின்றன.

விற்பனை வரி, சேவை வரி, நுழைவு வரி, உற்பத்தி வரி, கலால் வரி என பல்வேறு பெயர்களில் மக்களை மொட்டையடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும் அத்தனை வரிகளையும் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரே வரியாக வசூலிப்பதுதான் இந்த ஜி.எஸ்.டி.

இந்த ஜி.எஸ்.டி. நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

சாமானியனின் அடிப்படை தேவைக்கான பொருட்களுக்கு 5 சதவிகிதம் (தங்கத்துக்கு 3 சதவிகிதமாம்… என்ன கணக்கோ?), ஆடம்பர பொருட்களுக்கு 12 முதல் 18 சதவிகிதம், அதீத ஆடம்பரத்துக்கு 28 சதவிகிதம் எனப் பிரிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில், சினிமா போன்ற பொழுதுபோக்குகள் அதீத ஆடம்பரம் என்ற பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஜி.எஸ்.டி வரி, ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கமல் போன்ற சினிமாவுக்காரர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

28 சதவிகிதம் வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்புள்ளது என்பதை சுட்டிக்காட்டி, ‘மக்களுக்கு கஷ்டம் வரக்கூடாது’ என்ற காரணத்துக்காகவே 28 சதவிகித ஜி.எஸ்.டி. யை எதிர்ப்பதாக சினிமாக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இப்படி சொல்வதற்கும், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததற்கும் அதிக வித்தியாசமில்லை.

சினிமாக்காரர்கள் என்றைக்குமே  மக்கள் நலனுக்காக சிந்திப்பவர்கள் இல்லை.

சுனாமி வந்து சுருட்டியபோது கூட சினிமாவை ரிலீஸ் செய்த இரக்கமற்ற  இவர்கள், மக்களுக்காக ஜி.எஸ்.டி. யை எதிர்ப்பதாக சொல்வது கேலிக்கூத்து அல்ல, கேடி(களின்)கூத்து.

மக்களை சுரண்டுவதில் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை  சினிமாக்காரர்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
அவற்றில் மிக முக்கியமானது…..

வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கு மக்களிடமிருந்து வரியை வசூலித்து தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பங்கு போட்டுக் கொள்வது.

சினிமா பார்க்க வரி கட்டுகிறவர்கள் அதன் பார்வையாளர்களாகிய மக்கள்தான்.

அரசாங்கம் வரி விலக்கு அளிக்கும்போது, அந்த வரியை மக்கள் செலுத்த வேண்டியதில்லை, வரி செலுத்தாமலே திரைப்படங்களை பார்க்கலாம் என்பதே அதன் அர்த்தம்.

ஆனால் நடைமுறையில் வரிவிலக்கு என்பது எப்படி இருக்கிறது?

வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்களை பார்க்க வரும் மக்களிடமிருந்தும் வரியுடன் கூடிய டிக்கெட் கட்டணத்தையே  கட்டாயமாக வசூலிக்கின்றனர். அதாவது, 120 ரூபாய் தியேட்டர் கட்டணத்தில் 36 ரூபாய் வரியையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

அப்படி பிடுங்கிய பணத்தை  தியேட்டர்காரர்கள் அரசுக்கு செலுத்துவதில்லை.

மாறாக, தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர்.

இப்படி மக்களின் பணத்தை இவர்கள் கொள்ளையடிக்க அரசாங்கமே அனுமதித்திருக்கிறது என்பதுதான் கொடுமை.

அதாவது வரிவிலக்கு சலுகை வழங்க 5 லட்சத்திலிருந்து 75 லட்சம் வரை வணிகவரித்துறை அமைச்சகத்தில் லஞ்சம் வாங்குகின்றனர்.

எதற்கு? தியேட்டர்களில் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் பணத்தை இவர்கள் பங்கு போட்டுக்கொள்வதை கண்டு கொள்ளாமல் இருக்கத்தான் இந்த லஞ்சம்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 2006 ஆம் ஆண்டில்தான் இந்த வரிவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதாவது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டும் வரிவிலக்கு என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்தினால், மாமனாரின் இன்பவெறி, மச்சினியின் முதலிரவு போன்ற பலான படங்களுக்கும் வரிவிலக்கு கிடைக்கும் வழியும், வாய்ப்பும் இருந்ததால், அடுத்து வந்த ஜெயலலிதா அரசு, யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு மட்டும் வரிவிலக்கு என்று மாற்றம் செய்தது.

மொத்தத்தில்,  2006 முதல் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் சுமார் 1570 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இவற்றில்  யு சான்றிதழ் பெற்றதால் வரிவிலக்கு வழங்கப்பட்ட படங்கள் என்று தோராயமாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக 1000 படங்கள் தேறும்.

ஒரு படம் சராசரியாக  5 கோடி வசூல் செய்ததாக வைத்துக் கொள்வோம். 1000 படங்களின் வசூல்… 5000 கோடி.

சென்னை போன்ற பெருநகரங்களில் திரைப்படங்களுக்கு 30 சதவிகிதம் வரியும், சிறு நகரங்களிலும் மற்ற ஊர்களிலும் 20 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

சராசரியாக 25 சதகிவிதம் என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், 1250 கோடி ரூபாயை மக்களிடமிருந்து பிடுங்கி சினிமாக்காரர்கள் ஏப்பம்விட்டிருக்கிறார்கள்.

அதாவது மக்களின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் பிக்பாக்கெட் அடிப்பதைப்போல் பிடுங்கித் தின்றுள்ளனர். இன்னமும் தின்று கொண்டிருக்கின்றனர்.

ஜி.எஸ்.டி.  இந்த வழிப்பறி கொள்ளைக்கு ஆப்பு வைத்துவிட்டது. அதாவது, இனி வரிவிலக்கு என்ற பெயரில் மக்களின் பணத்தை சூறையாட முடியாது.

அதுமட்டுமல்ல,  இனிமேல் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முழுமையாக கணிணிமயமாக்கப்பட்டு, அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட இருக்கிறது.

அதனால்தான் ஜி.எஸ்.டி.யைக் கண்டு அலறுகிறார்கள் சினிமாக்காரர்கள்.

-ஜெ.பிஸ்மி