நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா…. – பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்

907

தமிழ்த்திரைப்படத்துறையோடு ஒப்பிடும்போது பக்கா கமர்ஷியலான படஉலகம் பாலிவுட்தான். ஆனாலும் அங்கே சாப்பக் போன்ற பெண்களை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, தீபிகா படுகோன் போன்ற வணிகமதிப்பு கொண்ட முன்னணி கதாநாயகிகளும் இதுபோன்ற – பெண்களை பிரதானப்படுத்தும் – திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர்.

தீபிகா படுகோன் நடிப்பில் அண்மையில் வெளியான சாப்பக் என்ற ஹிந்தித் திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய கதை இது. லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்.

புதுடெல்லியைச் சேர்ந்த லக்‌ஷ்மி அகர்வால் என்ற பெண், தனது 15 வயதில், குட்டா, நயீம் கான் உட்பட மூன்று நபர்களால் ஆசிட் தாக்குதலுக்குள்ளானார். அவர்களில் ஒருவனை திருமணம் செய்ய முடியாது என்று லக்‌ஷ்மி மறுத்ததே இந்த துயரசம்பவத்தின் பின்னணி.

தன்னைப்போலவே ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லக்‌ஷ்மி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.

இவரது வாழ்க்கைக்கதையைத்தான் மேகா குல்சார் இயக்கத்தில், சாப்பக் என்ற திரைப்படமாக தயாரித்து நடித்துள்ளார் தீபிகா படுகோன்.

முகத்தில் ஆசிட் வீசப்பட்டதற்குப் பிறகான காட்சிகளில் நடித்தபோது தீபிகா படுகோனுக்கு ப்ராஸ்தடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த மேக்கப்புக்காக தீபிகா படுகோன் பல மணிநேரம் செலவிட்டது ஒன்றே சாப்பக் படத்தின் மீதான அவருடைய அர்ப்பணிப்புக்கு உதாரணம்.

சாப்பக் படத்துக்கு முன்னதாக, கஹானி, நில் பேட்டி சனாட்டா, ஆங்கிரி இண்டியன் காடஸெஸ், இங்கிலீஷ் விங்கிலீஷ், மேம், குயின், என்.எச்.10, நோ ஒன் கில்டு ஜெஸிக்கா, நீர்ஜா, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, மர்டாணி, மேரி கோம் என பெண்களை மையப்படுத்திய கதைஅம்சம் கொண்ட எண்ணற்ற திரைப்படங்கள் (WOMEN CENTRIC FILMS) ஹிந்தியில் வெளியாகி இருக்கின்றன.

ஹிந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் இவ்வகைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழில் ஏன் இம்மாதிரியான படங்கள் அதிகம் வெளிவருவதில்லை?

அவ்வப்போது அத்திபூத்தாற்போல் வெகுசில படங்கள் வெளியாகி உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் இதுபோன்ற தொடர்முயற்சி ஏன் தமிழில் சாத்தியப்படவில்லை?

நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா என ரசிகஅபிமானத்தைப்பெற்ற பல கதாநாயகிகள் இருந்தும் பெண்களை மையப்படுத்திய படங்கள் இங்கே ஏன் அடிக்கடி வருவதில்லை?

இத்தனைக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் கடந்த காலங்களில் வணிகரீதியில் இங்கே வெற்றியையும் பெற்றிருக்கின்றன.

நயன்தாரா நடித்த அறம், மாயா, கோலமாவு கோகிலா, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட அருந்ததி, ஜோதிகாவின் ரீ எண்ட்ரி படமான 36 வயதினிலே என சின்னதாக பட்டியலே போடலாம்.

இந்தப்படங்களின் வணிக வெற்றியைத் தொடர்ந்து, த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்ற ஏனைய கதாநாயகிகளும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கத் தலைப்பட்டனர்.

குறிப்பாக நடிகை த்ரிஷா முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டியதோடு முன்னுரிமையும் கொடுத்தார். நாயகி, மோகினி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி என அண்மைக் காலங்களில் த்ரிஷா நடித்ததெல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள்தான்.

இவற்றில், நாயகி, மோகினி ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ, த்ரிஷாவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் திரைக்குவருவதற்கு நீண்டகாலமாகவே போராடிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பரமபதம் விளையாட்டு இம்மாதம் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.

த்ரிஷா நடித்த படங்கள் மட்டுமல்ல, காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் (குயின் ஹிந்திப்பட ரீமேக்), ஸ்ரேயா நடித்து வரும் சண்டக்காரி ஆகிய படங்களும்கூட திரைக்கு வராமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா ஆகியோரின் மார்க்கெட் சரிவு.

இன்னொரு காரணம்… கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு கிடைத்த தோல்விகள்.

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தை அடுத்து அதேபாணியில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ருத்ரமாதேவி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்து வந்த பாகமதி படமோ படுதோல்வி

நயன்தாரா நடித்த அறம் படம் பெற்ற வெற்றியை டோரா, ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்கள் பெறவில்லை. வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த கஹாணி படத்தின் ரீமேக்கிலும் நயன்தாராதான் நடித்தார்.

தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும் வெளியாகி, இரண்டு மொழிகளிலுமே படுதோல்வி.

ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளப்படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே படம், ஜோதிகாவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து அவரை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய எந்தப்படமும் வணிகவெற்றியைப்பெறவில்லை. இவற்றில் நாச்சியார் பாலா இயக்கிய படம். ஆனாலும் மக்களால் வரவேற்கப்படவில்லை.

ஆக… பெண்களை முன்னிலைப்படுத்தி படம் எடுத்தால் வெற்றிகிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்த நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா போன்றவர்களே, ஒருகட்டத்தில் ஆபத்தான உதாரணங்களாக மாறிப்போனார்கள்.

அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் போணியாகாமல் முடங்கிப்போனதற்கு அவர்களே காரணமாகிப்போனார்கள்.

நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா நடிப்பில் வெளியான படங்களே வெற்றியடையவில்லை என்றால் மற்ற நடிகைகளை வைத்து படங்கள் என்னாகும் என்ற அச்சத்திலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களை சினிமா வியாபாரிகள் கைவிட்டுவிட்டனர். நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா நடித்தும் அப்படங்கள் தோல்வியடைந்ததற்கு, கதைக்கு முன்னுரிமை கொடுக்காமல் தங்களை மட்டும் அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டதுதான் என்ற உண்மையை கண்டறியத் தவறிவிட்டனர்.

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று வருணிக்கின்றன ஊடகங்கள். அதே நயன்தாரா முன்னணி ஹீரோக்களுடன் நடித்த தனி ஒருவன், நானும் ரௌடிதான், இருமுகன், பிகில், விஸ்வாசம், தர்பார் போன்ற படங்கள் வணிகவெற்றியை அடைகின்றன. ஆனால், நயன்தாராவை மட்டும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட டோரா, ஐரா, கொலையுதிர்காலம் போன்ற படங்கள் படுதோல்வியை சந்திக்கின்றன.

இதன் மூலம் ஒரு உண்மை புலனாகிறது.

பெண்கள் மென்மையானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை பூவுடன் ஒப்பிடுவோம். நிஜத்தில் வேண்டுமானால் ஒருவேளை இந்த ஒப்பீடு சரியாக இருக்கலாம்.

சினிமாவில் கதாநாயகி நடிகைகள் என்பவர்கள் ஹீரோக்கள் என்ற பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்தான். இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.

நட்சத்திர நடிகர்களுடன் இணையும்போது மட்டுமே வெற்றியடையும் இவர்கள், தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்ட படங்களில் நடித்தபோதெல்லாம் தோல்விகளை சந்திப்பதை பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.

கதாநாயகி நடிகைகள் பூக்கள் அல்ல, கதாநாயகன் என்ற பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்தான்.

– ஜெ.பிஸ்மி