செவாலியே கமலை பாராட்ட மறந்த செல்வி ஜெயலலிதா…

730

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது.

சிறந்த நடிப்பாற்றலுக்காக இந்த விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பிறகு செவாலியே விருது பெறும் நடிகர் கமல்ஹாசன்தான்.

தனக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘வாட்ஸ் அப்’பில் குரல் பதிவினை வெளியிட்டுள்ளார் கமல்.

“ பிரான்ஸ் அரசின் கலை – இலக்கியத்துக்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரும் அறியச் செய்த காலம் சென்ற சத்யஜித்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இச்செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதருக்கு என் நன்றி.

இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கைமண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைகடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருவசம் மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது. இதுவரையிலான என் கலைபயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன்.

கைதாங்கி எழுத்தும், கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே, நான் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள் 4 வயது முதல் என் கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். என்னை பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கிவிடுகிறது.

நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்.”

என்று தன் பாணியில்  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

rajinitweet

கமலின் நண்பரும், அவரது போட்டியாளருமான ரஜினி, “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்”  என்று ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி மட்டுமின்றி, ‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கமும்  அறிக்கைவாயிலாக தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறது.

“பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது.

அதே போல் இன்று எங்கள் சகோதரர்  உலக நாயகன் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட  கமல்ஹாசன்  அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.

செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல், கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம்.

இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும்.

செவாலியர் விருது கிடைத்த எங்கள் சகோதரர்  கமல்ஹாசன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும், அனைவர் சார்பிலும் வாழ்த்துதல்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.​”

செவாலியே விருது பெற்ற கமலுக்கு உலம் முழுக்க உள்ள தமிழர்களும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா இது பற்றி வாயைத் திறக்கவில்லை.

விஸ்வரூபம் பஞ்சாயத்தை அவர் இன்னமும் மறக்கவில்லை போலிருக்கிறது.