மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்சார் அதிகாரி..! ‘கன்னா பின்னா’ இயக்குநருடன் கர்..புர்…

575

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் கதாநாயகனின் கதைதான்  ‘கன்னா பின்னா’ படத்தின் கதை.

இந்தப்படத்தின் இயக்குநர் தியா என்பவர் ‘ நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.

இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு திரையிட்டு காட்டினார் இயக்குநர் தியா.

கன்னா பின்னா படத்தை பார்த்த சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன், “இந்தப்படத்தில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்கமுடியும்” என்று சொன்னாராம்.

அது குறித்த விளக்கம் கேட்ட இயக்குநரிடம் சில குறிப்பிட்ட வசனங்களையும் சில காட்சிகளையும், ஒரு பாடலையும் நீக்கும்படி கூறியுள்ளார்.

இத்தனைக்கும் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த திணிப்பும் இல்லாமல் தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர் தியா. ஆனாலும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் முக்கியம் என்பதாலும், அதுதான் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளரை தேவையில்லாத நட்டத்தில் இருந்து காப்பாற்றும் என்பதாலும் தணிக்கை அதிகாரி சொன்ன மாற்றங்களை செய்துள்ளார். ஆனாலும் சில இடங்களில் அவர் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கினால் கதையின் தன்மையே மொத்தமாக சிதைந்துவிடும் என விளக்கமும் கூறியுள்ளார் இயக்குநர் தியா. இவ்வளவு செய்தும் கூட ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தரமுடியும் என பிடிவாதம் காட்டியுள்ளார் தணிக்கை அதிகாரி மதியழகன்.

இதுதவிர, படத்தின் தயாரிப்பாளரையும் வைத்துக்கொண்டே, “இந்த மாதிரி படங்களை எல்லாம் ஏன் எடுத்து காசை வீணாக்குகிறீர்கள், பேசாமல் என்ன தொழில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதையே உருப்படியாக பண்ணலாமே, அல்லது படம் எடுப்பதற்கு முன் என்னை கலந்து ஆலோசித்திருக்கலாமே?”

என தயாரிப்பாளரின் மனதை குலைக்கும் விதமாக பேசியுள்ளார் மதியழகன்.

படம் எடுப்பதற்கு இதுவரை சென்சார் என்னென்ன விதிமுறைகள் வைத்திருக்கிறதோ, அதை மீறாமல் படம் எடுப்பதற்கு, இதற்குமுன் ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் வாங்கிய படங்கள் தானே அளவுகோல்..? மற்ற இயக்குனர்களை போல இயக்குனர் தியாவும் அதனை பின்பற்றியே இந்தப்படத்தை இயக்கியுள்ளாராம்.

அதனால் படம் எடுப்பதற்கு முன்பே அதுகுறித்து சென்சார் அதிகாரியிடம் ஆலோசிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என அவரிடம் கேள்வியும் எழுப்பிய தியா, சமீபத்தில் வெளியான ஆபாசமான காட்சிகள், வசனங்கள் நிறைந்த, ஒரு படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதனால் கோபமான மதியழகன், “மற்ற படங்களை பற்றி பேச உங்களுக்கு அதிகாரமில்லை? உங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லுங்கள்.”  என தெனாவெட்டாகவும்  சொன்னாராம்.

சற்று நேரத்திலேயே, “சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் பார்த்தீர்களா..? அதற்கு எப்படி ‘யு’ சான்றிதழ் கொடுத்தோம் தெரியுமா?” என அவரே இன்னொரு படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

“இப்போது மட்டும் இன்னொரு படம் குறித்து நீங்கள் எப்படி பேசலாம்?”

என இயக்குனர் தியா கேட்டதும் டென்ஷன் ஆன மதியழகனிடம், அருகில் இருந்த தயாரிப்பாளரிடம், “இந்தப்படத்தின் ரைட்ஸ் ஏதாவது இயக்குநரிடம் கொடுத்திருக்கிறீர்களா?” என கேட்டிருக்கிறார்..

அதற்கு ‘இல்லை’ என தயாரிப்பளார் பதில் சொன்னதும், இயக்குனர் தியாவை தனது அறையைவிட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் தனியாக நீண்ட நேரம் பேசியுள்ளார்.

ஒரு படத்தின் தணிக்கை விபரங்கள் குறித்து பகிர்ந்துகொள்ள முதன்மையான ஆள் படத்தின் இயக்குநர்தான். தன்னிடம் பேசாமல், கன்னா பின்னா படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட நேரம் பேசியதை வைத்து மதியழகன் அவரிடம் பேரம் பேசியுள்ளார் என்று சந்தேகப்படுகிறார் இயக்குநர்.

தணிக்கை அதிகாரி மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதல்லவா..? அதனால் அவருடன் படம்பார்த்த மற்ற தணிக்கை குழு உறுப்பினர்கள் விபரங்களை இயக்குநர் தியா கேட்டுள்ளார். ஆனால் மதியழகனோ, முறைப்படி ஒரு கடிதம் எழுதிக்கொடுங்கள், அதுகுறித்த விபரங்கள் உங்களுக்கு தபாலில் வரும் என்று பதில் கூறியுள்ளார் ஆனால் இதுவரை எந்த தபாலும் சென்சார் அலுவலகத்தில் இருந்தோ, அது சம்பந்தப்பட்ட துறையிடமிருந்தோ வரவில்லை..

பெரிய படங்கள், சிறிய படங்கள் என பாரபட்சம் காட்டி தணிக்கை சான்றிதழ் வழங்கினால், சிறிய தயாரிப்பாளர்கள் எப்படி படம் தயாரிக்க முன்வருவார்கள்.. வந்தவர்களும் நட்டப்பட்டு, அத்துடன் படத்தொழிலுக்கே கும்பிடு போட்டு வெளியேறும் சூழலைத்தான், தன்னிச்சையாக செயல்படும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இந்த சென்சார் அதிகாரி உருவாக்குகிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு இயக்குனரின் பல வருட உழைப்பை, கனவை கருவிலேயே சிதைக்கும் வேலையையும் செய்கிறார் என குமுறுகிறார் இயக்குநர் தியா..

ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி தயாரிப்பாளருக்கு இன்னும் செலவு வைக்க விரும்பவில்லையாம். அதேசமயம் தணிக்கை அதிகாரியின் பேரத்துக்கு படிந்து பணம் கொடுத்து படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கவும் விரும்பவில்லையாம்.

வரும் டிசம்பர் -9ஆம் தேதி கன்னா பின்னா படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில், தணிக்கை அதிகாரியின் இந்த செயலால், அதிர்ச்சியடைந்துள்ள இயக்குனர் தியா, சட்டபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறாராம்.

பின்குறிப்பு

இந்த செய்தி குறித்து சென்னை மண்டல அதிகாரி மதியழகன் என்ன சொல்கிறார்?

அவரது தரப்பை அறிய மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோம்.  அவரது பதில் கிடைத்தால் அதையும் வெளியிடுகிறோம்.