‘திருச்சி டைகர்ஸ்’ அணியை கேட்கும் சிவகார்த்திகேயன்

1893

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு அதன் மூலம் வரும் வருவாயில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படும் என்றார் செயலாளர் விஷால்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடப்பதற்கான வேலைகள் இப்போது வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

அதன்படி ‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’ (CCL) வரும் 17ம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 6 ஓவர்கள் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுகிறார்கள்.

தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் தலைநகர் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதாவது ‘மதுரை காலேஜ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ என்று 8 அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

இதில் எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். எனவே அவர் கேப்டனாக இருக்கும் அணிக்கு ‘திருச்சி டைகர்ஸ்’ பெயர் சூட்டும்படி நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்ராம்.

மேலும், ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.

இதுதவிர போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியுள்ளன.