காமெடி நடிகர் பிளாக் பாண்டி காதல் திருமணம்

732

கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்துள்ள வளர்ந்து வரும்நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி.

இவர்  தற்போது பத்துக்கும் மேற்பட்ட புதுப்படங்களில் நடித்து வருகிறார்.

பிளாக் பாண்டிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண் பெயர் உமேஸ்வரி பத்மினி. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் திருமணம் டிசம்பர் 1–ந்தேதி சென்னை நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் நடக்கிறது. இது காதல் திருமணமாம்.

‘டி.வி.யில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தபோது ஒரு ரசிகையாக உமேஸ்வரி பத்மினி எனக்கு அறிமுகமானார். நட்பாக பழகினோம். பிறகு காதல் மலர்ந்தது. 7 வருடங்களாக காதலிக்கிறோம். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்து இருந்தோம். தற்போது அவர்கள் சம்மதம் கிடைத்துள்ளது. திருமணம் செய்து கொள்ள போகிறோம்.

என் தாத்தா காமெடி நடிகர் பபூன் சொக்கலிங்கம் ஆவார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம், தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருடன் பழகியுள்ளார். என் தந்தை எம்.சி.சேகர் தமிழக அரசின் நாடக பிரிவில் நடிகராக பணியாற்றியுள்ளார்.

நான் ஏற்கனவே குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தற்போது எஸ்டாட் என்ற பெயரில் ஸ்டூடியோ துவங்கியுள்ளேன். விரைவில் படங்களுக்கு இசையமைப்பேன். டைரக்டராகவும் ஆவேன்.’

– என்று தன் காதல் திருமணம் குறித்து பிளாக் பாண்டி கூறினார்.