பிரேம்ஜிக்கு முக்கியத்துவம்! டம்மியாக்கப்பட்ட கார்த்தி? பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்ட – பிரியாணி

706

கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் – பிரியாணி. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் இந்த மாதம் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின.அதை உறுதி செய்யும்வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரியாணி படத்தின் இசை வெளியிடப்பட்டது.

பொதுவாக படத்தின் வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்தான் இசையை வெளியிடுவார்கள். பிரியாணி படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டதால் இம்மாதம் படம் வெளியாகும் என்று கார்த்தியின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தநிலையில் பிரியாணி படத்தின் வெளியீட்டை அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தள்ளி வைத்துள்ளது. அதாவது பொங்கலுக்குத்தான் பிரியாணி ரிலீஸ்.

இதே நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜேஷ். எம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு வருகிறது. காமெடிப் படமான இதில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்த மாத இறுதியில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.
இது பற்றி ஸ்டூடியோகிரீன் அதிபர் ஞானவேல் ராஜா என்ன சொல்கிறார்?

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தை தீபாவளிக்கு என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டோம். பிரியாணியை இந்த மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தோம். தீபாவளிக்கு நாட்கள் நெருங்கிவிட்டதால் இரண்டு படங்களுக்கான பப்ளிசிட்டியில் குழப்பம் வரும் என்பதால் பிரியாணியை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறோம்’’ என்றார்.

ஞானவேல் ராஜா இப்படியொரு காரணம் சொன்னாலும் திரையுலகில் வேறு மாதிரி பேச்சு கிளம்பியிருக்கிறது. தன் தம்பி என்பதால் தன்னுடைய அனைத்துப் படங்களிலும் பிரேம்ஜிக்கு அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் வெங்கட்பிரபு, பிரியாணி படத்திலும் தன் படத்தில் வேலையைக் காட்டிவிட்டாராம். யெஸ்..படத்தின் ஹீரோவான கார்த்தியை டம்மியாக்கிவிட்டு பிரேம்ஜிக்கு ஹீரோ ரேன்ஜுக்கு பில்ட்அப் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம். படத்தைப் பார்த்த கார்த்தியும், ஞானவேல் ராஜாவும் கொந்தளித்துவிட்டார்களாம். அதுமட்டுமல்ல, பிரேம்ஜி சம்மந்தப்பட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டு, ரீஷூட் பண்ணச் சொல்லி இருக்கிறார்களாம். எனவேதான் பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது பிரியாணி.