நான் ஏன்யா உனக்கு பம்முறேன்? – பாரதிராஜாவை கிழித்துத் தொங்கப்போட்ட பாலா…

1148

குற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்க இருப்பதாக ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா.

தற்போது அவரே கதாநாயகனாக நடிக்க அந்தப் படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார்.

பாரதிராஜாவை ஹீரோவாக பார்க்கும் அளவுக்கு தமிழ்சினிமா ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை.

எனவே, பல வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கிய அந்திமந்தாரை, சில வருடங்களுக்கு முன் இயக்கிய அன்னக்கொடி படங்களைப் போல் தியேட்டரைவிட்டு ஓடக்கூடிய படமாகவே இருக்கப்போகிறது பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை.

இந்த ஆபத்திலிருந்து அந்தப்படத்தை காப்பாற்ற பாரதிராஜா கண்டுபிடித்த குறுக்குவழிதான் பாலாவை வம்புக்கு இழுத்தது.

அந்தப் படத்தை மையமாக வைத்து நடக்கும் சர்ச்சையைப் பார்க்கும்போது, இதன் மூலம் கிடைக்கும் ஓசி விளம்பரத்தை வைத்து குற்றப்பரம்பரை படத்தை ஓட்டிவிடலாம் என்று பாரதிராஜா கணக்குப் போடுகிறார் என்றே தோன்றுகிறது.

அதிலும் பாலா தரப்பு விளக்கத்தைக் கேட்கும்போது பாரதிராஜாவின் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஏனெனில் பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை படத்துக்கும் தான் இயக்க உள்ள படத்துக்கும் துளியும் தொடர்பு இல்லை என்று பாலா தெளிவுபடுத்திச் சொல்லிவிட்டார்.

அதன்பிறகும் பாலாவை பாரதிராஜா வம்புக்கு இழுக்கிறார் என்றால், இந்த சர்ச்சையை ஊதிப்பெரிதாக்கி அதை வைத்து தன் படத்துக்கு வசூல் அறுவடை செய்ய திட்டமிட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

பொதுவாக பாலாவின் பிரஸ்மீட் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

எதைப் பற்றி கேட்டாலும் சிரித்துக் கொண்டே மழுப்புவார்.

அல்லது காமெடி பண்ணி கேள்வியையே திசை திருப்புவார்.

முதன்முறையாக பாலாவின் பிரஸ்மீட் படு சீரியஸாக நடைபெற்றது இந்தமுறைதான்.

குற்றப்பரம்பரை படம் தொடர்பாக பாரதிராஜாவும் அவரது ஆட்களும் தன்னை கேவலப்படுத்திப் பேசுவதை பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டார் பாலா.

இனி பாலாவின் பேச்சு….

“ பாரதிராஜாவினால ரொம்ப காயப்பட்டிருக்கிறேன். அதனாலதான், நடந்த உண்மைகளை உங்கள் மூலமா சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

‘குற்றப்பரம்பரை’ நாவல் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியால் எழுதப்பட்டது. அதுக்கும் முன்னாடி பாரதிராஜா அதைப் படமாக்கப் போறாருங்கறது எனக்கும் தெரியும்.

வேல ராமமூர்த்தி நாவலை படிக்கும் முன்பு நான் அவரை சந்தித்ததே இல்லை. அந்த நாவலில் சில பகுதிகள் எனக்கு பிடித்திருந்தது. சரி. அதை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு திரைப்படமாக கொண்டு வரலாமே என்று வேல ராமமூர்த்தியை அழைத்து பேசினேன்.

இது எப்போது எழுதினது? குற்றப்பரம்பரையை எடுக்கப்போவதாக பாரதிராஜா சார் வேறு சொல்லிக் கொண்டு இருக்கிறாரே என்று அவரிடம் கேட்டேன்.

பாரதிராஜா படமாக எடுக்க நினைக்கும் முன்பே ‘கூட்டாஞ்சோறு’ என்ற பெயரில் இந்தக்கதையை எழுதிவிட்டேன் என்றார்.

“பிறகு பாரதிராஜா சாரை சந்தித்தீர்களா” என்று கேட்டதற்கு பாரதிராஜாவை சந்தித்ததாகவும் அப்போது “வேலா இந்த நாவலை எழுதியதிற்காக உன் கையை முத்தமிடணும் போல இருக்கிறது. உன் விரல்களுக்கு மோதிரம் அணிய வேண்டும் போல இருக்கிறது” என்று பாரதிராஜா சொன்னதாகவும் வேல ராமமூர்த்தி கூறினார்.

இதுதான் வேல ராமமூர்த்தியும் நானும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு.

‘குற்றப்பரம்பரை’ என்பது கதையல்ல, அது நடந்த உண்மைச் சம்பவம். வரலாறு.

நான் கதை எழுதினேன், நான் கதை எழுதினேன் என்று யாருமே அந்த வரலாற்று சம்பவத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. இந்த வரலாற்றை நான்தான் படமெடுப்பேன் என்று அடம்பிடிப்பது சிறுபிள்ளைத்தனமான ஒரு விஷயம். ஏனென்றால் வரலாற்றை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். இது புரியவில்லை அவர்களுக்கு.

திடீரென்று ஒரு நாள் பாரதிராஜா சார் போன் பண்ணினார். “என்ன நீ ‘குற்றப்பரம்பரை’யை படமாக எடுக்கிறீயாமே” என்று கேட்டார்.

வேல ராமமூர்த்தி ஒரு நாவலை எழுதியிருக்கிறார். அதில் இருந்து சில சம்பவங்களை எடுத்து வேறு ஒரு களத்தில்தான் பண்ணுகிறேன் என்றேன்.

“நீ என்ன வேண்டுமானாலும் படம் எடு. ‘குற்றப்பரம்பரை’ என்று மட்டும் தலைப்பு வைக்காதே. அது என் கனவுப்படம்” என்றார்.

நான் எடுக்கவில்லை என்று சொல்லாமல், தலைப்பு வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டுவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு பத்திரிகையில் பேட்டிக் கொடுக்கிறார். எவ்வளவு நாகரீமான பேட்டி என்று பாருங்கள்?

“பாலா என் எச்சிலைத் திங்க மாட்டான் என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இது என்ன வார்த்தை? அதைப் படித்த பிறகு ரொம்ப எரிச்சலடைந்தேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம், “என்ன இப்படி பேசியிருக்கிறார்?” என்றார்கள்.

வயசு ஏற ஏற அனைவருமே குழந்தை மாதிரி மாறுவது இயல்பு. ஆகவே, பிரியத்துடனும் பாசத்துடனும் சொல்லியிருக்கலாம் விடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.”

என்று பாரதிராஜாவுக்கும் தனக்கும் இடையிலான உரசல் பற்றி பேசிய பாலா, அடுத்து ரத்னகுமார் மீது பாய்ந்தார்.

யார் இந்த ரத்னகுமார்?

கருத்தம்மா படத்துக்கு கதை எழுதியவர். எஸ்.ஜே.சூர்யாவை வைத்து திருமகன் என்ற மொக்கப்படத்தை இயக்கியவர்.

தற்போது பாரதிராஜாவின் மண்டையைக் கழுவி அதில் நஞ்சைக் கலந்து கொண்டிருப்பதாக பாலா தரப்பினரால் குற்றம்சாட்டப்படுபவர் இவர்தான்.

ரத்னகுமார் என்று அவரது பெயரை உச்சரிப்பதையே அவமானமாக நினைக்கிறார் பாலா.

தன்னுடைய பேச்சில் அவன் இவன் என்று ‘மரியாதையுடன்’ பாலா குறிப்பிடுவது இந்த ரத்னகுமாரைத்தான்.

“அந்தக் கதையை எழுதினேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான் ஒருவன். குறிப்பு எடுத்தால் இணையத்தில் வந்துவிடப் போகிறது. அவன் தான் எழுதியது என்றும், தன்னுடைய ரத்தமும் சதையும் என்றம், அந்தக்கதையை பாலா எடுத்தால் அவன் மீது வழக்கு போடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறான்.

அப்போதுதான் ஒன்று யோசித்தேன். இந்த ஆள் என்ன வேலை பாக்குறான்? கல்லூரி பேராசிரியராம். ஒரு வரலாற்றை படமாக்குவதற்கு எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்று எந்த முட்டாப்பயலாவது இப்படி சொல்லுவானா?

ஜாலியன் வாலா பாக் படுகொலையை நான் மட்டும் தான் எடுப்பேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

‘மருதநாயகம்’ படத்தை நான் மட்டும் தான் எடுக்க முடியும் என்று கமல் சார் சொல்ல முடியுமா?

வரலாற்றை யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எடுக்கலாம். இது கூட தெரியவில்லை. அவன் பேராசிரியராம். அவனுடைய மாணவர்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

வேல ராமமூர்த்தியிடம் போனில் கேட்டு ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அவர் பேசியது தப்பு என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கு நான் விளக்கமளிக்க வேண்டும். நான் அதை நியாயப்படுத்தி பேசவில்லை. விளக்கம் சொல்றேன்.

வேல ராமமூர்த்தி அப்படி ஒரு கதை எழுதியிருக்கிறானா என்று கேட்டால் ஒரு எழுத்தாளனுக்கு கோபம் வரத்தானே செய்யும். நியாயம்தானே அது. அதனால் கோபமாக ஒரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்.

திடீரென்று குற்றப்பரம்பரை பட பூஜை என்றார்கள்.

தனஞ்ஜெயன் சார் போன் பண்ணினார்.

“தாராளமா பண்ணட்டும் சார். ‘குற்றப்பரம்பரை’யைத்தான் நம்ம எடுக்கவே இல்லையே? தலைப்பே வேறு அல்லவா வைத்திருக்கிறோம்? நான் வேறு ஒரு கதை அல்லவா எடுக்கிறேன் என்றேன்.

என்னையும் கூட பூஜைக்கு கூப்பிடட்டும். நானும் வர்றேன் இந்தப்பிரச்சினை முடியட்டும் என்று அவரிடம் தெரிவித்தேன்.

நானும் வேல ராமமூர்த்தியும் எழுதி வைத்திருக்கிறது வேறு, அவர் வரலாற்றில் எடுத்து வைத்திருப்பது வேறு. இது கதை, அது வரலாறு. இரண்டிற்கு வித்தியாசம் இருக்கிறது.

அந்தப் படத்தில் வேலை பார்ப்பதற்கு, நானும் வேல ராமமூர்த்தியும் பாரதிராஜாவிடம் வேலைக் கேட்டு போனோம் என்று அவன் (ரத்னகுமார்) சொல்லியிருக்கான்.

நான் பாலுமகேந்திரா என்ற இயக்குநரிடம் மட்டுமே உதவியாளரா இருந்தவன். அந்த குரு என்ற ஸ்தானத்தை அவரைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்று கர்வமாகவும், திமிராகவும் வாழ்ந்தவன். அதற்காக பல நாட்கள் வறுமையில் பட்டினிக் கிடத்திருக்கிறேன்.

குற்றப்பரம்பரை படத்தின் பூஜையில் பேசும்போது “வந்து வேலை பாக்கட்டும். பாரதிராஜாவுக்கு ஷூ துடைக்கட்டும்” என்று சொல்லியிருக்கிறான்.

யாரை பார்த்து ஷூ துடைக்கச் சொல்றான்?

அவனை நேரில் பார்க்கும் போது அண்ணே, அண்னே என்று கூப்பிட்டிருக்கிறேன். இப்போது அவன் பெயரை சொல்லவே அறுவறுப்பாக இருக்கிறது.

இப்படி ஒரு சந்தர்ப்பவாதியை எங்கேயும் நான் பார்த்ததில்லை.

நான் வேறு கதை எடுக்கிறேன் என்ற தகவலையாவது சொல்லிவிடுங்கள் என்று தனஞ்ஜெயன் சாரிடம் சொல்லி அனுப்பினேன். அவரும் போய் சொல்லியிருக்கிறார்.

இந்த ரத்னகுமார் என்னை கதைத் திருடன் என்று சொல்றான். எனக்கு அறிவில்லையாம். உனக்கு அறிவு இருந்தால் இது என் கதை என்றே சொல்ல மாட்டாய்.

நாய் பாஷை தெரிந்தவன் நான் என்றும் சொல்லியிருக்கிறான். நாய் பாஷை தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை. முதலில் நீ அதை கற்றுக் கொள். நாய் பாஷையைக் கற்றுக் கொண்டால் அதில் இருந்து நன்றியையாவது கற்றுக் கொள்ளலாம்.

உனக்கும் பாரதிராஜாவுக்கும் என்ன உறவோ அதை விமர்சனம் பண்ணுவதற்கு நான் வரவில்லை. ஆனால் நீ என்னிடம் என்ன பேசினே என்று நான் சொல்ல வேண்டும்.

இதுநாள் வரை நான் மூடி மறைத்த விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் ‘பிதாமகன்’ படப்பிடிப்பு முடித்து அறைக்குச் சொல்லும் போது என்னை வழிமறித்து சுமார் முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தான்.

அந்த இயக்குநர் இமயத்தோட தாய், தகப்பன், பாட்டான், பூட்டான் என அவ்வளவு பேரையும் அவனுடைய பேச்சில் இழுக்கிறான்.

அவனுக்கு இந்தக்கதையை பண்ணத் தெரியாது. உங்களால் தான் முடியும், நீங்க பண்ணுங்க. நான் எழுதி வைத்திருக்கிறேன். நான் பாரதிராஜாவுக்கு இனிமேல் கதை, வசனம் எழுத மாட்டேன் என்று பேனாவை தரையில் குத்திட்டேன் என்றான். பேனாவைக் குத்துறதுக்கு இவன் என்ன நீதிபதியா?

இவன் எழுதியதால்தான் பாரதிராஜா இயக்குநர் ஆனாரா?

இப்படிப்பட்ட ஒருவன் பாரதிராஜாவோட முதுகுக்கு பின்னால் நின்றுக் கொண்டு என்ன வேண்டுமானாலும் என்னை பேசுவான் அதை இமயம் எப்படி அனுமதிக்கலாம்.

நான் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

எவ்வளவு நாள் பொறுமையாக இருப்பது? நாலு தடவை மன்னித்தேன்.

இனிமேலும் நான் மன்னிக்கணுமா?

பெரிய மனுஷன் ஆச்சே இன்னும் ஒரு தடவை மன்னிப்போம் என்று இன்றைக்கு காலையில் கூட மூணு தடவை நான் பாரதிராஜாவுக்கு போன் பண்ணினேன்.

ரெண்டு தடவை போனை எடுக்கவே இல்லை.

மூணாவது முறை போனை எடுத்து விட்டு “மூணாவது தடவை போன் பண்றான்யா” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்றார்.

எதை பேச வேண்டுமானாலும் என்னிடம் நேருக்கு நேராக பேச வேண்டியதுதானே? ஏன் பயப்படுக்கிறீர்கள்?

நான் போன் பண்ணினேன்… பாலா பம்முகிறான் என்று சொல்கிறாராம்.

நான் ஏன்யா உனக்கு பம்முறேன்?

நான் பாலுமகேந்திரா சாருக்கு மட்டும் தான் பம்முவேன்.

நான் இனிமேலும் பொறுமையாக இருக்கக்கூடாது என்பதால் தான் இங்கு வந்திருக்கிறேன்.

இருவரையுமே எச்சரிக்கிறேன். எதற்கெடுத்தாலும் நான் அந்த மண்ணு, அந்த இனம், அந்த புழுதியில் பிறந்தவன், அந்த மண் வாசனை, நான் தான் எடுக்கணும், எனக்கு தான் உரிமை என்று பேசிக் கொண்டு இருக்கிறார். எதை எடுக்கணுமோ எடுங்கள், உங்களை யார் வேண்டாம் என்றார்கள்.

இடையே என்னை ஏன் குத்துறே?

நான் ‘குற்றப்பரம்பரை’யை எடுக்கப் போகிறேன் என்று சொன்னேனா?

இனிமேல் ஒரு தடவை என்னைப் பற்றி வாயைத் திறந்தால் எனக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு நல்லது இல்லை. இதுதான் பாரதிராஜாவுக்கு என்னோட இறுதி எச்சரிகை!”

என்று ஆவேசமாக பேசி முடித்தார் பாலா.