பாலா, பாரதிராஜாவை குப்புறத்தள்ளிய குற்றப்பரம்பரை

849

பொன்னியின் செல்வன் கதை பற்றி திரையுலகில் ஒரு கருத்து நிலவுகிறது.

அந்தக்கதையை யார் படமாக எடுக்க நினைத்தாலும், அவர்களது முயற்சி நிறைவேறாது.

ஏதாவது ஒருவகையில் தடங்கல் ஏற்பட்டு அந்த முயற்சி கைவிடப்பட்டுவிடும் என்பதே அது.

இதை உண்மை என நம்புகிற அளவுக்கு சில சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

கமல், மணிரத்னம் ஆகியோர் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க எண்ணி, பின்னர் கைவிட்ட சம்பவங்களும் அவற்றில் அடக்கம்.

அன்றைக்கு பொன்னியின் செல்வன் கதைக்கு பொருந்திய அதே விஷயம் இப்போது  குற்றப்பரம்பரை கதைக்கும் பொருந்தும் போலிருக்கிறது.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் சில பிரிவினர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ கதையை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் பாலா.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாலாவின் அறிவிப்பைக்  கண்டு கொதித்துப்போனார் பாரதிராஜா.

காரணம்…. பல வருடங்களுக்கு முன் குற்றப்பரம்பரை படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாரதிராஜா.

ஏனோ அந்தப் படம் டேக் ஆப் ஆகவில்லை.

அதன் பிறகு எப்போதெல்லாம் படமில்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாரோ அப்போதெல்லாம்… குற்றப்பரம்பரைதான் எட்ன அடுத்தப்படம்… அதுதான் என் கனவுப்படம் என்று கரகரகுரலில் பேட்டி கொடுப்பார்.

இப்படியாக குற்றப்பரம்பரை படத்தை எடுக்காமலே அதற்கான காப்பிரைட் ஹோல்டராக தன்னை காட்டிக் கொண்ட பாரதிராஜாவுக்கு, அதே விஷயத்தை பாலா கையில் எடுத்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனவே அவரும் தன் பங்குக்கு ஒரு குற்றம்பரம்பரை படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார்.

அதோடு, அவசர அவசரமாக அந்தப் படத்துக்கு பூஜையும்போட்டார்.

இதன் தொடர்ச்சியாக ‘குற்றப் பரம்பரை’ கதை தொடர்பாக பாரதிராஜா, பாலா இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

பாலாவின் குற்றப்பரம்பரை படத்தின் கதாசிரியரான வேல ராமமூர்த்தி பாரதிராஜாவை கண்டமேனிக்க கழுவி ஊற்றினார்.

பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை படத்தின் கதாசிரியரான ரத்னகுமார் என்பவர் பாலாவை தரக்குறைவாகப்பேச, பதிலுக்கு பாலாவும் ரத்னகுமாரை கேவலமாக வசைபாடினார்.

இப்படியாக குற்றப்பரம்பரை என்ற வரலாற்று நிகழ்வை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இரண்டு தரப்பினரும் சொந்தம் கொண்டாடினார்.

திரையுலகம் இந்த மோதலை வேடிக்கைப் பார்த்தது.

இத்தனை களேபரத்துக்குப் பிறகு குற்றப்பரம்பரை படத்தின் நிலவரம் என்ன?

முதலில் பாலாவின் குற்றப்பரம்பரை படத்தின் தற்போதைய நிலை என்ன என்று பார்ப்போம்…

சசிகுமாரை வைத்து பாலா இயக்கிய  ‘தாரை தப்பட்டை’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு பாலாவின்  நாற்காலி ஆட்டம் காணத்தொடங்கிவிட்டது.

அவரை வைத்து படம் எடுக்க இனி தயாரிப்பாளர்கள் யாரும் வருவார்களா என்பதே சந்தேகம் என்கிற அளவுக்கு தன் பெயரை கெடுத்துக்கொண்டார் பாலா.

தயாரிப்பாளர்கள் வராவிட்டால் என்ன? நாமே தயாரிக்கலாம் என்று இனி பாலாவால் படத்தயாரிப்பில் இறங்க முடியாத அளவுக்கு அவருக்கு பைனான்ஸ் செய்து வந்த ஆட்களும் கல்லாப்பெட்டியைமூடிவைத்துவிட்டனர்.

எனவே ‘குற்றப்பரம்பரை’ படத்தை டிராப் பண்ணி விட்டு, புதுமுகங்களை வைத்து வேறொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

இந்தப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க பாலா திட்டமிட்டிருக்கிறாராம்.

பாலாவின் குற்றப்பரம்பரை படத்தின் கதி என்றால், பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை படத்தின் கதியும் ஏறக்குறைய இதேதான்.

‘குற்றப் பரம்பரை’ படத்துக்கு பூஜை போட்ட பாரதிராஜாவும், பாலாவைப்போலவே கிடப்பில் போட்டுவிட்டார்.

தற்போது, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கக் கிளம்பிவிட்டார்.

இப்படத்தின் ஹீரோவாக இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருண் நடிக்க, கதாநாயகியாக நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கிறார்.