பாகுபலி 2 – விமர்சனம்

2846

 

மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம்பாகத்துக்கு, அதன் முதல் பாகத்துக்குக் கிடைத்த அபரிமிதமான வெற்றிதான் பலமும், பலவீனமும்.

இரண்டாம்பாகம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவாக மட்டுமல்ல, ஒருவேளை எதிர்பார்த்தஅளவுக்கு படம் இல்லாதுபோனால் முதல்பாகம் அளவுக்கு இல்லை என படத்தை கழுவி ஊற்றவும் காரணமாகிவிடும்.

பாகுபலி மாபெரும் வெற்றிபெற்று சரித்திரம் படைத்ததால் பாகுபலி-2 ஆம் பாகத்துக்கும் இதே ஆபத்து இருந்தது.

பாகுபலி முதல் பாகத்துக்கு நிகராக அல்ல, அதைவிட சிறப்பாக ‘பாகுபலி 2’யை உருவாக்கி அந்த ஆபத்தை முறியடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

தன்னுடைய தந்தை அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்) வீற்றிருந்த மகிழ்மதியின் அரியாசனத்தை வஞ்சகமாக கைப்பற்றிய    பல்வாள் தேவனிடமிருந்து (ராணா) மகேந்திர பாகுபலி (பிரபாஸ்) எப்படி கைப்பற்றுகிறார் என்பதுதான் பாகுபலி-2 படத்தின் கதை.

அதோடு, முதல் பாகத்தில் வைக்கப்பட்ட ‘அமரேந்திர பாகுபலியை ராஜவிசுவாசியான கட்டப்பா ஏன் கொன்றார்?’ என்ற கேள்விக்கான விடையையும் உணர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி கலங்க வைத்திருக்கிறார்.

பொதுவாக இரண்டாம் பாகப் படங்களில், முதல் பாகத்தின் கதையை ஞாபகப்படுத்துவதற்காகவே சில நிமிடங்களை காலி பண்ணிவிடுவார்கள்.

பாகுபலி படத்தின் கதைச்சுருக்கத்தை பிரம்மாண்டமான சிலையாக வடித்து, டைட்டில் கார்டிலேயே தன் வித்தையைத் தொடங்கிவிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

முதல் பாகத்தைவிட, இரண்டாம்பாகத்தில் வலுவான கதையுடன், உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதுதான் இரண்டாம் பாகத்திற்கும் வெற்றியை இலகுவாக தேடிக் கொடுத்திருக்கிறது.

காதல், காமெடி, சென்ட்டிமெண்ட், ஆக்ஷ்ன் என படத்தின் முதல்பாதி பரபரக்கிறது.

இரண்டாம்பாதியில் காமெடிக்கோ, பொழுதுபோக்கு அம்சங்களுக்கோ வேலையில்லாமல் எமோஷனல் டிராமாவாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பொறுமையை சோதிக்கும் போர்க்காட்சிகளும் சேர்ந்துகொள்ள, முதல் பாதியைவிட இரண்டாம்பாதி சற்று இழுவையாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்ற கேள்விக்கான விடையை பொருத்தமான இடத்தில் அவிழ்த்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

மட்டுமல்ல, அந்தக்காட்சியில் பாகுபலியைக் கொல்லும் கட்டப்பாவைப்போலவே பார்வையாளர்களையும் கலங்க வைத்துவிடுகிறார்.

பிரபாஸ், அனுஷ்கா காதல் காட்சிகளில் புதுமை இல்லை என்றாலும், ரசனை.
அப்பா அமரேந்திர பாகுபலி, மகன் மகேந்திர பாகுபலி என இரண்டு வேடங்களில் பிரித்து மேய்ந்திருக்கிறார் பிரபாஸ்.

மகனைவிட அப்பா அமேரேந்திர பாகுபலி கதாபாத்திரம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கம்பீர நடை, அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு, மிடுக்கு என நிஜ மன்னனாகவே வாழ்ந்திருக்கிறார் பிரபாஸ்.

பல்வாள் தேவனாக… வில்லத்தனமான நடிப்பில் வேறு பரிமாணம் காட்டி அசத்தியிருக்கிறார் ராணா.

பல்வாள் தேவன் வேடத்தில் வேறு ஒருவரை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு முத்திரையைப் பதித்திருக்கிறார்.

முதல்பாகத்தில், வயதான தோற்றத்தில் அனுஷ்கா. அத்தனை முக்கியத்துவமும் இல்லை. 2 ஆம் பாகத்தில் ‘தேவசேனா’வாக அனுஷ்காவின் இளமையும், வீரமும் ரசிகர்களுக்கு விருத்தாகி இருக்கின்றன.

க்ளைமேக்ஸில் தமன்னாவின் முகம் தெரிகிறது. ஒரு வசனம் கூட இல்லை.

இரண்டாம்பாகத்தில் சத்யராஜுக்கு கூடுதல் முக்கியத்துவம். பிரபாஸ், ராணா என இரண்டு பேருக்கு நிகராக சத்யராஜின் கட்டப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கட்டப்பாவை காமெடிக்கும் பயன்படுத்தி சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ராஜமாதேவி… மகாராணி சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன். கம்பீர நடிப்புக்கு, தனக்கு நிகர் வேறுயாருமில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாகத்தைப்போலவே, ஒளிப்பதிவு, கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள், சண்டை இயக்கம், பின்னணி இசை, எடிட்டிங் என தொழில்நுட்பத் தரத்தில் ஹாலிவுட் படங்களை மிஞ்சுகிற அளவுக்கு சிகரம் தொட்டிருக்கிறது பாகுபலி-2.