1000 கோடி ரூபாய் வசூல்…. – பாகுபலி 2 புதிய சாதனை

1342

 

எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது.

யெஸ்…. பாகுபலி- 2 படம் 1000 கோடி என்ற அதிகபட்ச வசூல் சாதனையை எட்டிவிட்டது.

தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது பாகுபலி 2.

உலகம் முழுக்க சுமார் 8000 தியேட்டர்களில் வெளியானதாக சொல்லப்பட்டது.

படம் வெளியான முதல்நாளே சுமார் 120 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய திரையுலகில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தது பாகுபலி 2 .

உலகம் முழுக்க ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்றை பெற்றதால் பாகுபலி 2 படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் எந்தவொரு படத்துக்கும் கிடைத்திராத வரவேற்பு பாகுபலி 2 படத்துக்குக் கிடைத்திருப்பதாக ஆர்ப்பரிப்புடன் சொல்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

8000 தியேட்டர்களில் வெளியான நிலையில், ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பு காரணமாக கூடுதல் தியேட்டர்களிலும் கூடுதல் காட்சிகளிலும் திரையிடப்பட்டதால், படம் வெளியான ஒன்பதே நாட்களில் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

இந்தியாவில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள பாகுபலி வெளிநாடுகளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமே 500 கோடி ரூபாய் வசூலை இதுவரைபெற்றுள்ளன.

அமீர்கான் நடிப்பில் வெளியான பி.கே. மற்றும் தங்கல் திரைப்படங்கள்தான் இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக சாதனை படைத்து அந்த சாதனையை தக்க வைத்திருந்தன.

ஆனால் தற்போது பாகுபலி 2படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து, அமீர்கான் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

அது மட்டுமல்ல, உலக அளவில் இந்திய திரைப்படங்களுக்கான சந்தை மதிப்பின் எல்லையை மிகப்பெரிய அளவில் விசாலமாக்கியுள்ளது.