சல்மான்கானாக மாறிய அருண் விஜய்

1069

சல்மான் கானாக மாறிய அருண்விஜய் என்ற தலைப்பைப் படித்துவிட்டு, அருண் விஜய் என்னவோ சல்மான்கான் அளவுக்கு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றுவிட்டார் என்று நினைத்துவிட வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த சல்மான் கான் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது காரை ஏற்றினார்.

அந்த வழக்கிலிருந்து சமீபத்தில்தான் சல்மான்கான் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டார்.

சரக்கடித்துவிட்டு அப்பாவி மீது காரை ஏற்றி கொன்ற சல்மான் கானை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்ட தைரியமோ என்னவோ, சில வாரங்களுக்கு முன் பிரபல தொழில் அதிபரின் மகள் ஐஸ்வர்யா என்பவர்  ஃபுல் போதையில் காரை ஓட்டி ஒருவரை காலி பண்ணினார்.

சல்மான் கான் ஸ்டைலில் குடிபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

arun vijay accident

இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

‛முறைமாப்பிள்ளை  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகராக உயரமுடியாமல்போனதால்,  அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார்.

அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

அருண் விஜய் நடித்த  வா டீல் படம் பல வருடங்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.

அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தேடி வராததினால் தானே தயாரிப்பாளராகி குற்றம் 23 என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

தன் மனைவியுடன் இதில்  கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய், வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறார்.

பின்னர் நள்ளிரவில் குடிபோதையிலேயே கொஞ்சமும் நிதானமில்லாமல் அதிவேகமாக காரை  ஓட்டிச்சென்றவர், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸின் வாகனம்  மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்.

இதில் போலீஸ் வாகனத்தின் பின்புறம் சேதம் அடைந்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போதையில் அவர் போலீஸ் அதிகாரியை தரக்குறைவாக பேசினாராம்.

விசாரணையில், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்ததால், சென்னை பாண்டிபஜார் போலீசார், அருண் விஜய்யை கைது செய்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்தியது ஆகிய இருபிரிவுகளின் அவர் மீது  கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அருண் விஜய்யின் தந்தையும், நடிகருமான விஜயகுமார், பாண்டிபஜார் காவல்  நிலையத்துக்கு விரைந்து வந்தார்.

பின்னர், அருண் விஜய்யை, போலீசார் அவரது சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.

இதற்கிடையில், அருண் விஜய்யை போலீஸ் கைது செய்யவில்லை என்ற தகவலும் தற்போது பரவி வருகிறது.

சமீபத்தில் பா.ஜ.க. கட்சியில் சேர்ந்த விஜயகுமார் தன் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி தன் மகனை காப்பாற்றி விட்டதாக தகவல்  அடிபடுகிறது.

சேதமடைந்த போலீஸ் வாகனத்தை தன்னுடைய செலவில் சரி செய்து தருவதாக போலீஸ் அதிகாரிகளிடம் விஜயகுமார் உறுதி அளித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.