தாத்தா கருணாநிதியின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட பேரன் அருள்நிதி

814

கருப்புத்துண்டை கழற்றிவிட்டு மஞ்சள் துண்டை அணிந்தாலும், தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியின் பகுத்தறிவை யாரும் சந்தேகப்பட்டதில்லை.

ஆனால் அவரது குடும்பத்தினர் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றுவதில்லை என்பதும் ஊரறிந்த விஷயம்தான்.

ஸ்டாலினின் மனைவி கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருப்பது ஒன்று போதும் உதாரணத்துக்கு.

இந்நிலையில் கருணாநிதியின் மூன்றாவது தலைமுறையும் பகுத்தறிவு கொள்கையை காற்றில் பறக்கவிட்ட கதை தற்போது அம்பலமாகி இருக்கிறது.

மு.கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன்அருள்நிதி.

இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டு, பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

‘வம்சம்’ படத்தை தொடர்ந்து ‘மௌனகுரு’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ தகராறு என சில படங்களில் நடித்துள்ளார் அருள்நிதி.
அடுத்து இவரது நடிப்பில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமான்டி காலனி’ ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன!

இவை தவிர மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், அருள்நிதி ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

அந்தப்பெண் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகள் என்றும் சொல்லப்பட்டது.

நெருப்பில்லாமல் புகையுமா?

அருள்நிதி குறித்த கிசுகிசு தற்போது உண்மையாகிவிட்டது.

அருள்நிதிக்கும் அவர் காதலித்த பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

அருள்நிதி மணக்கப் போகிறவரின் பெயர் கீர்த்தனா. ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டதுபோல், இவர் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகள்தான்.

நேற்று நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் மு.க.அழகிரி, ஸ்டாலின் உட்பட இரு குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர்!

மு.க.அழகிரி, ஸ்டாலின் உட்பட பல பகுத்தறிவாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற அருள்நிதியின் நிச்சயதார்த்தம் வேத மந்திரங்கள் முழங்க இந்துமுறைப்படி நடைபெற்றுள்ளது.

அட.. ஆமாம்… அருள்நிதியின் நெற்றியில் குங்குமம்…!