ஃப்ரீயாக இருக்கிறாயா, பிரியாணி சாப்பிட வா.. – அன்னை இல்லத்திலிருந்து ரஜினிக்கு அழைப்பு

812

கதாநாயக நடிகர்கள் சொந்தப்படம் தயாரிக்க இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

ஒன்று… அந்த நடிகரை வைத்து வேறு யாரும் படம் தயாரிக்க முன்வராததால், வேறு வழியில்லாமல் தானே படம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பார்.

இரண்டு.. தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை தானே மொத்தமாக அள்ள வேண்டும் என்ற பேராசை.

விக்ரம் பிரபு சொந்தப்படம் தயாரிக்க இந்த இரண்டு காரணங்களும் இல்லை. மூன்றாவதாக ஒரு காரணம்.

விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களுக்கு பேசிய சம்பளத்தை யாருமே தரவில்லையாம். கடைசியாக அவர் நடித்த வீரசிவாஜி படத்திற்கு ஒரு கோடி சம்பள பாக்கி.

இதை எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்த விக்ரம் பிரபு யாரோ ஒருவருக்கு ஓசியில் நடிப்பதைவிட நாமே சொந்தமாக படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதன்படி ‘ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட்’ என்ற படநிறுவனம் தொடங்கினார்.

இந்நிறுவனம் முதல் முதலாக தயாரிக்கும் படம் ‘நெருப்புடா’.

அறிமுக இயக்குனர் அஷோக் குமார் இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, அவருடைய ஆஸ்தான நடிகையான நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். தீயணைப்பு படை வீரரின் கதையை சொல்லும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடிகர் திலகம் சிவாஜியின் ‘அன்னை இல்ல’த்தில் நடைபெற்றது.

‘நெருப்புடா’ பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட விக்ரம் பிரபுவின் அப்பா பிரபு, பெரியப்பா ராம்குமார் இருவரும் இணைந்து பெற்றுகொண்டனர்.

அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த்…

‘‘எனக்கும் அன்னை இல்லத்துக்கும்  தொடர்பு நீண்டகாலமாக இருக்கிறது. இங்கு வந்து நான் நிறைய தடவை சாப்பிட்டிருக்கிறென். சிவாஜி அப்பா இருக்கும்போது சில ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு ஃபோன் பண்ணி, ஃப்ரீயாக இருக்கிறாயா, இருந்தால் வீட்டுக்கு வா! பிரியாணி போடுறேன்’’ என்று அன்போடு கூப்பிடுவார்.

அப்படி நான் அன்னை இல்லத்துக்கு வரும்போது அங்கு நிறைய பேர் இருப்பார்கள்.

சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளை சேர்ந்தவர்களும் இருப்பார்கள்.

எல்லோரும் ஒன்றாக உட்காந்து சாப்பிடுவோம்.

அன்னை இல்லத்தில் சாப்பிடாத திரையுலகினரே இருக்க முடியாது.

காரணம் பண்புக்கும், அன்புக்கும் பேர் போனது அன்னை இல்லம்!

இப்போது சிவாஜி அப்பா இருந்திருந்தால் என் தாடியை பார்த்து, ‘‘நீ என்ன எனக்கு போட்டியா?’’ என்று கேட்டிருப்பார்.

என்றைக்குமே அவருக்கு போட்டியாக யாரும் இருந்தது கிடையாது! இருக்கவும் முடியாது!

விக்ரம் பிரபு நடித்த இந்த ‘நெருப்புடா’ மாபெரும் வெற்றி பெறும்! அப்படி வெற்றிபெற்று இப்படத்திற்கான விழாவையும் இந்த அன்னை இல்லத்தில் தான் நடத்த வேண்டும். அந்த விழாவுக்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் நான் வருவேன்.” என்று வாழ்த்தினார்.