இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘அரங்கேற்றம்’ தொடரில் கற்பழிப்பு காட்சி

928

வெள்ளித்திரையில் கே.பாலசந்தருக்கு பேரும் புகழையும் தேடிக்கொடுத்த படங்களில் முக்கியமானது – அரங்கேற்றம்.

சின்னத்திரையில் அவரது சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு பேரும் புகழையும் தேடிக்கொடுக்கப்போவதும் அரங்கேற்றம்தான்.

கடந்த சில வருடங்களுக்கு முன் டெல்லி மாணவிக்கு ஓடும் பஸ்ஸில் நடந்த பாலியல் வன்முறைக் கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது.

நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் வேதனை வடு மறைவதற்குள், சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கயவர்களின் கொடுமைக்குப் பலியானார்.

இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. அதனால் பெரும்பாலான சம்பவங்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகின்றன.

இந்த பாலியல் வன்முறை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு, ‘அரங்கேற்றம்’ மெகா தொடரை வழங்குகிறார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா. புதுயுகம் தொலைக்காட்சியில் மே 26-ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது அரங்கேற்றம் தொடர்.

விஜயலட்சுமி ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிகிறார். இளமைத் துள்ளலுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிந்த விஜயலட்சுமிக்குத் திருமணம் நடக்கிறது. இல்லற வாழ்வில் நுழையும் ஆனந்தக் கனவுகளுடன் இருந்த விஜயலட்சுமியை, திடீரென நான்கு ஆண் மிருகங்கள் கடித்துக் குதறுகின்றன.

பாலியல் வன்முறைக்கு ஆளான அவலத்தில் கூனிக்குறுகிப் போகிறார் விஜயலட்சுமி.

பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாகப் பார்க்கும் சமூகத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

நடந்த சம்பவத்திற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்பதையும் இந்த சம்பவத்திற்கு அவமானப் படவேண்டியது இந்த சமூகம்தான்தான் என்று உணர்கிறார்.

தன் மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எதிர்த்து, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக கொதித்து எழுகிறாள் விஜயலட்சுமி. தன்னை இழிநிலைக்கு ஆளாக்கிய கயவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும், இனி எந்தப் பெண்ணுக்கும் அநீதி நிகழக்கூடாது எனவும் அறப்போராட்டத்தைத் தொடங்குகிறாள்.

இவளது ஆவேசப் போராட்டத்திற்கு குடும்பம் ஆதரவாக இருந்ததா, கைகொடுக்க வேண்டிய கணவனின் நிலை எப்படியிருந்தது?

என்பதே அரகேற்றம் தொடரின் கதை என்கிறார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா.

இந்தத் தொடரில் விஜயலட்சுமியாக சிவரஞ்சனி, அவரது கணவராக ஷாம் நடிக்கிறார்கள்.

பா.விஜய் பாடல் எழுத ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கிறார்.