ஒன் ஹார்ட் – ஏ ஆர் ரஹ்மானின் இசைப்பயணமே, திரைப்படமாக…

778

நகைச்சுவைப் படம், திகில் படம், குடும்பக்கதைப்படம் என சினிமாவின் கதை அம்சத்தின் அடிப்படையில் பல பிரிவுகள் உண்டு.

ஆங்கிலத்தில் ஜானர் என்று சொல்லப்படும் இந்தப் பிரிவில் கான்சர்ட் ஜானர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

அது என்ன கான்சர்ட் ஜானர்?

ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படம்தான் கான்சர்ட் ஃபிலிம்.

ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இது போன்று ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட ‘திஸ் இஸ் இட்’ (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

‘திஸ் இஸ் இட்’ பாணியில் நாமும் நம்முடையை இசைப்பயணத்தைத் தொகுத்து ஒரு திரைப்படமாக உருவாக்கினால் என்ன என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தோன்றியது.

அதுதான் தற்போது ஒன் ஹார்ட் கான்சர்ட் ஃபிலிமாக உருவாகி இருக்கிறது.

அமெரிக்காவில் ஏ ஆர் ரஹ்மான் மேற்கொண்ட ஒரு இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்த இசைப்பயணத்தின்போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சிதான் ஒன் ஹார்ட்.

இந்த படத்திற்கான ஒலிக்கலவை முழுவதும் டால்பி அட்மாசில் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது.

அத்துடன் இப்படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது.

ஒன் ஹார்ட் படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கின்றன.

ஒன் ஹார்ட் திரைப்படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள். அவற்றில் தமிழ் பாடல்களும் அடக்கம்.

இது வரை நீங்கள் ஏ ஆர் ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதை கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசைநிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாடவேண்டிய மற்றும் இடம்பெறவேண்டிய நிகழ்வுகளின் வரிசை பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள். அதனை சுவைப்பட சொல்வது தான் இந்த படம்.

இது அவருடைய ப்ரொபஷனல் பயோகிராபி.

இந்த படம் ரசிகர்களுக்கு அவரைப்பற்றிய புரிதலை புதிய கோணத்தில் அளிக்கும்.

அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்?

அதை ஏனைய இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் ?

அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை, அவர்களின் திறமையைக் கடந்து, எந்தவொரு தனித்துவமான பண்பின் அடிப்படையில் அல்லது எமோஷனல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அவர் விளக்கி கூறுவது புது அனுபவமாக இருக்கும்.

இப்படம் உலகம் முழுவதும் விரைவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது.