கேரளாவுக்கு செல்லும் அப்பா

969

மெட்ரோ போன்ற சமூகத்தைக் கெட்டுகுட்டிச்சுவராக்கும் படங்களுக்கு மத்தியில் அண்மையில் வெளியான படங்களில் ஆரோக்கியமான படம் – சமுத்திரக்கனியின் அப்பா.

தரத்தில் மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான படங்களில் கல்லாப்பெட்டியை நிரப்பிய படங்களின் பட்டியலிலும் அப்பா படத்துக்கு இடம் உண்டு.

குழந்தை வளர்ப்பு, பெற்றோர்களின் பொறுப்புணர்வு,  கல்விக்கொள்கை, கல்விக்கொள்ளை, ஆண் பெண் நட்பு என பல தளங்களிலும் விரிவான பார்வையை செலுத்திய அப்பா படம் சில வாரங்களுக்கு முன் தமிழகம் எங்கும் சுமார் 250 தியேட்டர்களில் வெளியானது.

படம் வெளியாகி மூன்று வாரங்களாகிவிட்டநிலையில் இன்னமும் பல தியேட்டர்களில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அப்பா படத்துக்கு கிடைத்த வணிக வெற்றியின் தொடர்ச்சியாக அப்பா  படம் தற்போது கேரளாவில் வெளியாகிறது.

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே கேரளாவில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது சமுத்திரக்கனியின் அப்பா படமும் இடம்பிடித்துள்ளது.

சமுத்திரக்கனி கேரள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்.

Appa in Kerala

சிக்கார், மாஸ்டர்ஸ், திருவம்படி தம்பன், த ஹிட் லிஸ்ட், டி கம்பெனி, தி ரிப்போர்ட்டர் உட்பட பல மலையாளப்படங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

கேரள ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கண்ணியமான இமேஜ் உண்டு.

எனவே அப்பா படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ணினால் நிச்சயமாக தப்பு பண்ணாது என்ற எண்ணத்தில் பெரிய விலைகொடுத்து படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஒரு விநியோகஸ்தர்.

லேட்டஸ்ட் தகவலின்படி, கேரளாவில் 25 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது அப்பா.

அச்சனின் அருமை தெரிந்த கேரளத்து ரசிகர்கள் அப்பாவை நிச்சயமாகக் கொண்டாடுவர்கள்.