விஷால் – புரட்சி தளபதி அல்ல, புரட்டு தளபதி

விஷால் – புரட்சி தளபதி அல்ல, புரட்டு தளபதி
…………………..
ஜெ.பிஸ்மி

சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு அலைந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்களுக்கு எளிதில் திறக்காத கோடம்பாக்கக்கோட்டைக்கதவு, பணம்படைத்தவர்களின் வீட்டுப்பிள்ளைகளுக்கு மட்டும் வெகுசீக்கிரத்தில் விரியத்திறந்துவிடுகிறது.

இப்படி ‘குறுக்குவழியில்‘ கோடம்பாக்கத்துக்குள் குடியேறியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் விஷால். இவர் போராடித் திரையுலகுக்கு வந்தவர் இல்லை, அவரது அப்பாவின் பணபலத்தினால் நோகாமல் படத்துறைக்குள் ஊடுருவியவர்.

கிரானைட் தொழிலில் கோடிகோடியாய் சம்பாதித்த ஜி.கே.ரெட்டி என்ற தொழில்அதிபர், சரத்குமாரை வைத்து 90களில் ஐ லவ் இண்டியா, மகாபிரபு ஆகிய இரண்டு பிரம்மாண்டமான தோல்விப் படங்களைத்தயாரித்தவர். அடுத்து தன்னுடைய மூத்த மகன் அஜய் கிருஷ்ணாவை ஹீரோவாக்கி பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தை தயாரித்தார். முக்கிய வேடத்தில் சிவாஜி நடித்தும்கூட இந்தப்படமும் ஒடவில்லை.

தன் மகன் அஜய் ஹீரோவாக க்ளிக்காகவில்லை என்றதும், அடுத்து, நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக வேலைபார்த்த, இளைய மகன் விஷால் கிருஷ்ணாவை ஹீரோவாக்க ஆசைப்பட்டார் ஜி.கே ரெட்டி. ஆனால் இம்முறை சொந்தப்படம் எடுக்கவில்லை. புத்திசாலித்தனமாக, வேறு ஒரு தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் செய்து, அந்தப்படத்தில் தன் மகன் விஷால் கிருஷ்ணாவை ஹீரோவாக்கினார். ஷங்கரின் உதவியாளரான காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான அந்தப் படம்தான்… செல்லமே (2004).

விஷால் ஹீரோவாக அறிமுகமான செல்லமே ஓரளவு பேசப்பட்டநிலையில், அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி படத்தில் நடித்தார் விஷால். படத்துக்கு என்ன அர்த்தத்தில் சண்டக்கோழி என்று பெயர் வைத்தார்களோ தெரியாது, நிஜத்தில் சண்டக்கோழியாகவே இருந்தார் விஷால். தனக்கு ஆக்ஷன் ஹீரோ என்கிற மிகப்பெரிய அந்தஸ்த்தைக் கொடுத்தவர் என்கிற நன்றியுணர்ச்சிகூட இல்லாமல் லிங்குசாமியுடன் சண்டைபோட்டு அவரை அவமானப்படுத்தினார்.

அடுத்து திமிரு படத்தில் நடிக்கும்போது அந்தப்படத்தின் இயக்குநர் தருண் கோபியுடனும் தகராறு செய்தார். வேதம் என்ற ஒரேயொரு படத்தில்தான் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருந்தார் விஷால். ஆனால் சினிமாவையே கரைத்துக் குடித்தவர்போல் இயக்குநர்களின் பணியில் அநியாயத்துக்கு தலையிட்டார். அப்பா பைனான்ஸியர், அண்ணன் அஜய் தயாரிப்பாளர், அப்புறமென்ன? விஷால் வைத்ததுதான் சட்டம். யார் இயக்குநராக இருந்தாலும், அவர்களை டம்மியாக்கிவிட்டு தானே ஸ்டார்ட்… கட் சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய தலையீடு காரணமாக விஷால் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அதுநாள்வரை விஷாலுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்த அண்ணன் அஜய்யையும் கழற்றிவிட்டு, 2013ல் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற புதியபடநிறுவனத்தைத் தொடங்கினார்.

பொதுவாக கால்ஷீட் சொதப்புகிற ஹீரோக்கள்கூட சொந்தப்படம் எடுத்தால் திருந்திவிடுவார்கள் என்பதுதான் திரையுலக இயல்பு. படத்தாயாரிப்பில் உள்ள பிரச்சனைகளை நேரடியாய் பார்த்த பிறகு நல்லபிள்ளையாய் மாறிவிடுவார்கள் என்ற யதார்த்தம் விஷாலிடம் செல்லுபடியாகாமல்போனதுதான் துரதிஷ்டம். சொந்தப்படம் எடுக்கத் தொடங்கி சினிமாவின் கஷ்டநஷ்டம் அறிந்த பிறகும் விஷால் மாறவே இல்லை.

ஒரு பக்கம் தன்னை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களைப் பாடாய்ப்படுத்தினார். தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு மிஷ்கின் புண்ணியத்தில் கிடைத்த வெற்றிப்படம்தான் துப்பறிவாளன். அடுத்து, துப்பறிவாளன்2 படம் தொடங்கப்பட்டநிலையில் மிஷ்கினுடன் தகராறில் ஈடுபட்டு அவரை படத்திலிருந்தே நீக்கினார். மிஷ்கினிடம் மட்டுமல்ல, அவரை வைத்து படம் இயக்கிய ஒவ்வொரு இயக்குநர்களிடமும் அவர் காட்டிய கோரமுகம் கொடூரமானது. அதிலும் புதுமுக இயக்குநர்கள் சிக்கினால் வாழ்க்கையே சின்னாபின்னம்தான்.

இன்னொரு பக்கம் பணம்போட்ட தயாரிப்பாளர்களையும் காலி பண்ணி கண்ணீர் சிந்த வைத்தார். சொன்னபடி கால்ஷீட்டும் கொடுப்பதில்லை, வாங்கிய அட்வான்ஸைத் திருப்பியும் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் விஷால். லைகா நிறுவனத்துக்கு கால்ஷீட் தருவதாகச் சொல்லி சுமார் 20 கோடியை வாங்கிய விஷால் கடைசிவரை கால்ஷீட் கொடுக்கவே இல்லை. பொறுமையை இழந்த லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது. விஷாலின் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் தைரியமாகவே இருக்கிறார் விஷால். ஒரு சொத்துகூட அவருடைய பெயரில் இல்லையாம்.

நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திப்பது விஷாலுக்கு புதிதல்ல. ஏற்கனவே அவரை வைத்து ஆக்ஷன் என்ற படத்தை தயாரித்து 10 கோடிக்குமேல் நஷ்டமடைந்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற தயாரிப்பாளரும் விஷால்மீது வழக்கு தொடர்ந்தார். ஆக்ஷன் படம் 30 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. விஷாலின் தலையீட்டினால் பட்ஜெட் 35 கோடியைத்தாண்டியநிலையில், மேலும் பணத்தை முதலீடு செய்ய மறுத்தார் தயாரிப்பாளர். நஷ்டம் வந்தால் நான் ஏற்கிறேன் என்று விஷால் உறுதிமொழி அளித்ததன்பேரில் 42 கோடி பட்ஜெட்டில் ஆக்ஷன் படத்தை எடுத்துமுடித்தார் டிரைடண்ட் ரவி. படம் வெளியாகி, 10 கோடி நஷ்டம். அக்ரிமெண்ட்டின்படி விஷால் 8 கோடி தர வேண்டும். ஆனால் விஷாலோ பணம் தர மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

கொடுத்தவாக்கை காற்றில் பறக்கவிடுவதில் விஷாலுக்கு நிகர் விஷால்தான். நடிகர் சங்கக்கட்டிட நிதி திரட்டுவதற்காக ஐசரிகணேஷ் தயாரிப்பில், கார்த்தி விஷால் இருவரும் ஹீரோவாக நடிக்க, பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படம் தயாரிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு 5 கோடி சம்பளம் கார்த்திக்கு 5 கோடி சம்பளம் என பேசப்பட்டு, லண்டனில் ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் கம்போசிங் முடிவடைந்து. கார்த்தியை வைத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், வழக்கம்போல் விஷால் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. பலமுறை அழைத்தும் படப்பிடிப்புக்கு வராததினால் வேறுவழியில்லாமல் ‘கருப்பு ராஜா வெள்ளை’ ராஜா படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் ஐசரிகணேஷ். இதனால் அவருக்கு பல கோடிகள் நஷ்டம். இன்னொரு பக்கம் நடிகர்சங்க கட்டிடப்பணிகள் காலவரையின்றி முடங்கிப் போய், இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன.

கால்ஷீட் தருவதாக கைநீட்டி பணத்தை வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதில் சிம்புவையே மிஞ்சியவர் விஷால்தான். அவரை வைத்து தற்போது மார்க்ஆண்டனி என்ற படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்ட செட் 30 நாட்களாக விஷாலுக்காகக் காத்திருந்தது. படக்குழுவினர் தினமும் செட்டுக்கு வருவதும், விஷால் மட்டம்போடுவதாக 30 நாட்கள் படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டதில் தயாரிப்பாளருக்கு 3 கோடி நஷ்டம். விஷாலை தொடர்பு கொண்டால்… செல்போன் நாட் ரீச்சபிள். மானேஜரிடம் கேட்டால் தெரியாது. வீட்டுக்குப்போனால் அவரை சந்திக்க அனுமதி இல்லை. நடிகர்சங்கத்திடம் புகார் தெரிவித்தால், “அவர்தான் நடிகர் சங்கத்தின் செகரட்டரி… அவரைப்போய் நாங்கள் எப்படி விசாரிப்பது?“ என்றார்களாம். தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் தெரிவித்தால், “உதயநிதியின் க்ளோஸ்ட் ப்ரண்ட் விஷால். அவரை எப்படி நாங்கள் விசாரிக்க முடியும்?“ என்று நழுவினார்களாம்.

தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை இப்படி காலில்போட்டு மிதிக்கும் விஷால், சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு, தலைவர் பதவியைப் பிடித்ததுதான் கொடுமையிலும் கொடுமை. சினிமா உலகத்தையே புரட்டிப்போடப்போவதாக புருடாவிட்டு பதவிக்கு வந்தார் விஷால். அதைச் செய்கிறேன் இதைச்செய்கிறேன் என்று தினம் தினம் பிரஸ்மீட்கள். தமிழ்ராக்கர்ஸை பிடிக்கப்போவதாக அறிக்கைகள். கடைசியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் டிரஸ்ட்டில் வைப்புநிதியாக இருந்த கோடிக்கணக்கான பணம் காலியானதுதான் மிச்சம்.

நடிகர் சங்கத்தின் செயலாளராக, சங்கத்தின் கட்டிடத்தை கட்டிமுடிக்காமலே, தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை குறிவைத்தார். அந்தப்பதவியிலும் உருப்படியாய் ஒன்றும் சாதிக்கவில்லை.

ஆக ஒரு நடிகராக, தன்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் விஷால் நேர்மையாக இல்லை.

அவரை ஒரு நடிகராக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்குநர்களையும் மதிப்பதில்லை.

சக நடிகர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் என்ற பதவிக்கும் உண்மையாக இல்லை.

விஷாலின் செயல்பாடுகளை பார்க்கும்போது மனரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அப்படி என்ன பிரச்சனை என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், “தனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்றவர்களின் வெற்றியையும் உயரத்தையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைவிட அவர்கள் பெரிய சம்பளம் வாங்குவதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அந்த எண்ணம்தான் அவரை டிஸ்டர்ப் செய்துகொண்டே இருக்கிறது” என்கின்றனர்.

இது உண்மையாக இருக்கும்பட்சம் விஷாலுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் உரக்கச்சொல்லத்தோன்றுகிறது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா விஷால்…

…………………………..
பின்குறிப்பு – குமுதம் இதழுக்காக எழுதிய கட்டுரை

vishalVishal – Not a revolutionary thalapathy
Comments (0)
Add Comment