அஜித்துக்கு எதிராக அணிதிரளும் தயாரிப்பாளர்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த தொழில்களில் திரைப்படத்துறையும் ஒன்று. அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரைப்படத்துறை இன்னமும் இயல்புநிலையை எட்டவில்லை.

முக்கியமாக கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதில் மக்கள் மத்தியில் அச்சமும், தயக்கமும் நிலவிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வரும் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை இல்லாதுபோனதால் படவசூலில் மிகப்பெரிய பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, பல திரைப்படங்கள் வெளியானாலும், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், சிம்பு நடித்த மாநாடு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வணிகஅளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ஏனைய படங்கள் போஸ்டர் ஒட்டிய பணத்தைக் கூட வசூலிக்கவில்லை என்பதே உண்மை.

புத்தாண்டிலிருந்து இந்நிலை மாறும், மக்கள் பழையபடி திரையரங்குகளுக்குக் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் திரைப்படத்துறையினர். குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள்.

இது அசட்டு நம்பிக்கை இல்லை, அர்த்தபூர்வமான நம்பிக்கைதான். காரணம் 2022ன் தொடக்கம் முதலே முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும், பல பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வரவிருக்கின்றன.

அவற்றில் முக்கியமான படம் அஜித்குமார் நடித்த வலிமை. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13 அன்று வலிமை படத்தை திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். அதற்கு முன்னதாக, ஜனவரி 7 ஆம் தேதி எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பேண் இண்டியா திரைப்படமாக உருவாகியுள்ள ட்ரிபிள் ஆர் வெளியாகிறது.

வலிமை வெளியாகும் அதே தினத்தில் பவன்கல்யாண் நடித்த பீமன்நாயக் என்ற மெகாபட்ஜெட் தெலுங்குப் படமும், அதற்கடுத்த நாளான ஜனவரி 14 அன்று பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் என்ற தெலுங்குப் படமும் வெளியாகின்றன. இந்தப்படங்கள் எல்லாம் தமிழிலும் வெளியாக உள்ளன.

பிப்ரவரி 4 ஆம் தேதி சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படமும், பிப்ரவரி 17 அன்று சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் விஜயசேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் வெளியாக உள்ளன. இதே மாதத்தில் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள யானை படம் வெளியாகிறது.

இந்தப்படங்கள் மட்டுமின்றி, விஜய் நடித்து வரும் பீஸ்ட், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎப்-2, என ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 2022ல் ஏகப்பட்ட திரைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திரைப்படத்துறை மீண்டெழுவதற்கு இவற்றில் சரிபாதி படங்கள் வெற்றியடைந்தாலே போதும். எல்லாவற்றையும்விட, ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிற, அவர்கள் பார்க்கத் துடிக்கும் படங்கள் வெளியாகும்போதுதான் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளை நோக்கி திரண்டுவரும். அப்படி திரண்டுவரும் கூட்டத்தால் திரைப்படத்துறை புத்தெழுச்சி பெறும் என்பது உறுதி.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வரவிருப்பதால் 2022 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு பொற்காலமாக அமையக் கூடிய நற்சூழல் கனிந்து வருகிறது. இந்த நேரத்தில் – வெண்ணெண் திரள்கிற நேரத்தில் தாழியை உடைப்பதுபோல் – தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கமும், நடப்புத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து மிகப்பெரிய குண்டை வீசுவதற்கு தயாராகி வருகின்றன.

என்ன குண்டு?

ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்ற அறிவிப்புடன் ஸ்டிரைக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா பிரச்சனயால் நசிவுற்றுகிடக்கும் திரைப்படத்துறை லாபதிசைக்கு நகரக்கூடிய நல்ல சூழல் தற்போதுதான் உருவாகிவருகிறது. இந்த நேரத்தில் யாராவது ஸ்டிரைக் செய்வார்களா? எதற்காக இப்போது ஸ்டிரைக்?

தமிழ்சினிமா டிஜிட்டல் மயமாகி பல வருடங்களாகின்றன. பிலிம்சுருள்கள் காலாவதி யாகி, இப்போதெல்லாம் டிஜிட்டல்முறையிலேயே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் மூலம் சினிமாவை திரையிடும் தொழில்நுட்பத்தை க்யூப், யுஎப்ஓ போன்ற சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில் மார்க்கெட் லீடராக இருப்பது க்யூப் சினிமா.

டிஜிட்டல்முறையில் படங்களை திரையிடுவதற்கு VPF என்கிற விர்ச்சுவல் பிரிண்டிங் ஃபீஸ் (Virtual Print Fee) என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தியே இப்போது ஸ்டிரைக்கை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்தவாரம் சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஹோட்டலில், தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கமும், பாரதிராஜா தலைமையிலான நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில்தான் விபிஎஃப் கட்டணத்தை குறைக்க வலிறுத்தி ஜனவரி 1 முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று ஸ்டிரைக்கை அறிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அப்போதே மீடியாவுக்குக் கொடுப்பார்கள். இந்தமுறை அப்படி செய்யவில்லை. ஜனவரி 1 முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கமும், நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்தை உதயநிதியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகு இந்த விஷயத்தை அறிவிக்க உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு உதயநிதி ஏன் ஒப்புதல் கொடுக்க வேண்டும்? அவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் என்ன தொடர்பு? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர் சாதாரண உறுப்பினர்தானே?

இந்தக்கேள்வியின் பின்னணியை அலசினால், ஸ்டிரைக் அறிவிப்பின் உண்மையான காரணத்தையும் கண்டறிந்துவிட முடியும்.

ஜனவரி 13 அன்று அஜித்குமார் நடித்த வலிமை படம் வெளியாக உள்ளநிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று அறிவிப்பது வலிமை படத்துக்கு எதிரான காய்நகர்த்தல் என்பது எல்கேஜி படிக்கும் குழந்தைக்கும் புரியும். ஸ்டிரைக் அறிவித்தால், முதலில் பாதிக்கப்படப்போவது வலிமை படத்தின் தயாரிப்பாளர்தான். இது தெரிந்தே இப்படியொரு ஸ்டிரைக் தீர்மானத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

வெளிப்பார்வைக்கு விபிஎஃப் கட்டணக்குறைப்புக்காக தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்யவிருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் வலிமை படம் வெளியாகக் கூடாது என்பதற்காகவே இப்போது ஸ்டிரைக்கை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதாவது அஜித்குமாருக்கு எதிராக, அவரது வலிமை படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

வலிமை படத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன? அஜித்குமார் மீது யாருக்கு என்ன கோபம்?

தி.மு.க. குடும்பத்தை நேர்ந்த சன் பிக்சர்ஸ், ரெட்ஜெயண்ட் பட நிறுவனங்கள் நீண்டகாலமாகவே அஜித்திடம் கால்ஷீட் கேட்டு வந்ததாகவும், அதற்கு அஜித் தரப்பிலிருந்து இசைவான பதில் வரவில்லை என்றும் படத்துறையில் பேச்சுஅடிபட்டு வந்தது. மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியின் தயாரிப்பில் மங்காத்தா படத்தில் நடித்துள்ள அஜித், உதயநிதியின் பேனரிலும் சன் பிக்சர்ஸ் பேனரிலும் நடிப்பதற்கு மட்டும் ஏனோ தயங்கி வந்தார்.

தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தநிலையில் மறுபடியும் அஜித்திடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும் இம்முறையும் அஜித்திட மிருந்து சாதகமான பதில் இல்லை. இதனால் அஜித் மீது ஆளும் தரப்புக்கு கோபம் என்று சொல்லப்படுகிறது.

அதை மேலும் அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று அண்மையில் நடந்திருக்கிறது. அந்த சம்பவம்தான் வலிமை படத்தின் ரிலீஸுக்கே ஆப்பு வைக்கும் திட்டம் உருவாக காரணம் என்கின்றனர்.

அஜித்தின் வலிமை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமையை ஃபைனான்சியர் மதுரை அன்பு 62 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதமே இந்த டீல் முடிந்துவிட்டநிலையில், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வலிமை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை கேட்டிருக்கிறது.

சில கோடி லாபம் வைத்து கைமாற்றிவிட மதுரை அன்பு தயாரானநிலையில், அஜித் அதை விரும்ப வில்லையாம். வலிமை படத்தை ரெட்ஜெயண்ட் வெளியிட்டால் அனாவசியமாக தன்மீது அரசியல்சாயம் பூசப்படும் என்பதால், ரெட்ஜெயண்ட்டுக்கு கொடுக்க வேண்டாம்… நீங்களே வெளியிடுங்கள் என்று அஜித் தரப்பிலிருந்து மதுரை அன்பு வுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த படத்துறையினரும் தங்களிடம் பணிவுகாட்டும்போது அஜித் மட்டும் முரண்டு பிடிப்பதா என்று ஆளும்தரப்புக்கு கோபம். இன்னொரு பக்கம், அஜித்துக்கு ஆரம்பகாலத்தில் பட வாய்ப்பு கொடுத்தது நாங்கள். அவரை வளர்த்து விட்டது நாங்கள்.

ஆனால் வளர்ந்த பிறகு எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் வடஇந்தியா விலிருந்து வந்த போணிகபூருக்கு அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார் என்று தயாரிப்பாளர்களும் அஜித் மீது செமகோபத்தில் இருந்தனர்.

போதாக்குறைக்கு திரையுலகம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை, பட புரமோஷனுக்கும் வருவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு மற்றவர்கள் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என்று சுயநலமாக இருக்கும் அஜித்துக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவருடைய வலிமை படத்தின் ரிலீஸ் தடைபட்டால் நமக்கு என்ன? விபிஎஃப் கட்டணம் என்பது தயாரிப்பாளர் களாகிய நம்முடைய தலைவலி.

அதற்காக நாம் போராடுகிறோம். அதை மட்டும் கவனத்தில் நாம் எடுத்துக்கொள்வோம். அஜித் பற்றியோ அவருடைய வலிமை படம் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டாம் என்ற மனநிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இருக்கிறார்களாம்.

இப்படியாக அஜித் மீதான ஒட்டுமொத்தமான அதிருப்திகளும் ஒன்று சேர்ந்து இப்போது வலிமை படத்தின் வெளியீட்டுக்கே தடைக்கற்களாக மாறிநிற்கிறது. அதேநேரம், இந்த ஸ்டிரைக் அறிவிப்புக்கு உதயநிதி உடன்பட மாட்டார், எனவே நிச்சயமாக ஸ்டிரைக் என்ற பெயரில் வலிமை படத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் ஒருதரப்பினர் நம்புகின்றனர்.

உதயநிதியின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

ajithajith valimai newsvalimaivalimai ajith vs producers
Comments (0)
Add Comment