2020 ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கொரேனா பரவலை தடுப்பதற்காக பொது முடக்கம் நடைமுறைக்கு வந்த போது, ‘பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. கரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது’ என்றார் மோடி.
ஒரு வருடத்தை கடந்தநிலையிலும் கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை. பொதுமுடக்கம் என்ற பெயரில் மக்களை சாகடித்தார்களே தவிர கொரோனாவை அழிக்க முடியவில்லை.
தடுப்பூசி வந்த பிறகு கிழித்துவிடுவோம் என்றார் மோடி. அதிலும் ஆயிரம் குளறுபடிகள்.
கோவிஷீல்டு, கோவாக்சின்ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், பிரிட்டன் – ஸ்வீடன் கூட்டு நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து, கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை தயாரித்து சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம், செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் இந்தியா 5 கோடி டோஸ் தடுப்பூசி பெற முதல்கட்டமாக ஒப்பந்தம் செய்தது. ஒரு டோஸ் விலை ரூ.150 என்ற விலையில், இந்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்கி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்கைப்படி கோவிஷீல்டுக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.
மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 விலையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரம் தங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு எப்போதும் போல ரூ.150 விலையில் வழங்கவுள்ளதாகவும் சீரஸ் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
150க்கு வாங்கிய தடுப்பூசியை 100 ரூபாய் சேவைக்கட்டணம் சேர்த்து இதுவரை தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய் வசூலித்தன.
தற்போதைய விலை ஏற்றத்தால் இனி 1 டோஸ் தடுப்பூசி போட 700 ரூபாயை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. 2 டோஸ்களுக்கு 1400 ரூபாய்.
சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யாவில் ரூ.750-க்கும், சீனாவில் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் விலை உயர்வை நியாயப்படுத்தியுள்ளது சீரம் இன்ஸ்ட்டியூட்.
ஆனால் உண்மையில் இந்தியாவைவிட மற்ற நாடுகளில் விலை குறைவு.
இந்தப்பட்டியலைப் பாருங்கள்.
சவூதி அரேபியா 5.25 டாலர் (393.75 ரூபாய்) – தென் ஆப்ரிக்கா 5.25 டாலர் (393.75 ரூபாய்) – யுஎஸ் 4 டாலர் (300.00 ரூபாய்) – வங்காள தேசம் 4 டாலர் (300.00 ரூபாய்) – பிரேசில் – 3.25 டாலர் (243.75 ரூபாய்) – யுகே 3 டாலர் (225.00 ரூபாய்) – ஐரோப்பிய யூனியன் – 2.15 – 3.50 டாலர் (161.25 முதல் 262.50 வரை)
இதுவரை 150 ரூபாய்க்கு வழங்கிய தடுப்பூசியை தற்போது 600 ரூபாய்க்கு விற்பது என்பது கொள்ளை லாபம் சம்பாதிக்கும் செயல்.
பொதுவாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை ஈட்டி வருகின்றன. பிராண்டட் பெயரில் விற்கும் மருந்துகளுக்கும் ஜெனரிக் மருந்துகளுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசத்தை கவனித்தாலே இது புரியும். உயிர்காக்கும் மருந்துகள் உட்பட எல்லா மருந்துகளிலும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியிலும் கொள்ளை அடிப்பதுதான் கொடுமை.
மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கிய அதே பொருளை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு வழங்குவது என்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
ஒரு மருந்தின் விலையை தீர்மானிக்கும் உரிமை அந்நிறுவனத்துக்கு இருக்கக்கூடாதா என்று யாரேனும் கேட்கலாம்.
‘மத்திய அரசு நிதியுதவி அளித்தால் மட்டுமே கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும்,’ என்று கோரிக்கை வைத்தது சீரம் நிறுவனம். அதன்படி, மத்திய நிதி தொகுப்பில் இருந்து இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் நிதி வழங்கப்பட்டது. சீரம் நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
அரசிடமே நிதி உதவியை பெற்றுக்கொண்டு, தடுப்பூசியின் விலையை இருமடங்கு விலையையும் உயர்த்தியதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல இதுவரை கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மத்திய அரசு, இப்போது அதை மாநில அரசுகளிடம் ஒப்படைத் திருக்கிறது. இதன்மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியை 400 ரூபாய் கொடுத்து மாநில அரசுகளே வாங்க வேண்டிய சூழலுக்கு மாநில அரசுகளை தள்ளி விட்டிருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மாநில அரசுகளை தன்னிச்சையாக செய்ய வைப்பதன் மூலம் அதை எளிமைப்படுத்தியதுபோல் தோன்றும். உண்மையில் அதிக விலை கொடுத்து மருந்து கம்பெனிகளிடமிருந்து தடுப்பூசியை வாங்க வைக்கும் தந்திரம்.
ஏற்கனவே பொதுமுடக்கத்தால் வருவாய் பற்றாக்குறையில் தவிக்கும் மாநில அரசுகளுக்கு இது கூடுதல் சுமையைக் கொடுக்கும் என்பது தெரிந்தே பாஜக அரசு இப்படியொரு கேடுகெட்ட செயலை செய்திருக்கிறது.
இந்த விவகாரம் கடும் கண்டனத்துக்குள்ளானநிலையில், மாநில அரசுகளுக்கு வழக்கம்போல் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவோம் என அறிவித்துள்ளது மத்திய அரசு. இது நிச்சயம் கண்துடைப்பு அறிவிப்புதான்.
கோவிஷீல்டு விலையேற்றத்தைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோவாக்சின் மருந்தை, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
கோவாக்சின் மருந்து, இதுவரை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கும் ஒரு டோஸ் மருந்து விற்கப்படும் என, பாரத் பயோடெக் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
தாங்கள் உற்பத்தி செய்யும் மொத்த மருந்துகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கு வழங்குவோம் என கூறியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், அதற்கான விலை குறித்து ஏதும் கூறவில்லை.
அதே சமயம் தற்போது வரை ஒரு டோஸ் மருந்தை 150 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு வழங்கி வருவதாகவும், அதை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
மே 1 முதல் 18 வயது நிறைவடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், தடுப்பூசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள இந்த நேரத்தில் சீரம் நிறுவனம் விலையை உயர்த்தி இருக்கிறது.
மக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இப்போதுதான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வானது தடுப்பூசி போட விரும்புகிறவர்களையும் தடுத்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே நடிகர் விவேக்கின் மரணம் தடுப்பூசி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சூழலில் மேலும் ஒரு தடைக்கல்லாக இந்த விலை உயர்வு.
தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் கள்ளமார்க்கெட்டில் அதிகவிலைக்கு விற்கப்படவும் வாய்ப்புள்ளது.
மருந்துகம்பெனிகளின் அராஜகம் இப்படி என்றால், மத்திய அரசு செய்த காரியம் கடைந்தெடுத்த அயோகிக்கியத்தனம்.
சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியது கடமையை நிறைவேற்றாமல் சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா போன்ற 20 நாடுகளுக்கு தடுப்பூசிகளை பாஜக அரசு ஏற்றுமதி செய்தது. இதில், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட, 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
“நமது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி போதுமான அளவு இல்லாத போது , 72 நாடுகளுக்கு 6.5 கோடி தவணை முறையில் தடுப்பூசிகளை வழங்கியது, இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.
ஆனால், இந்தியாவில் 12 கோடி மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 8.5 சதவிகிதம். இதன் மூலம், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 8500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
ஆனால், பிரிட்டனில் 1 லட்சம் பேருக்கு 54 ஆயிரத்து 680 பேருக்கும், அமெரிக்காவில் 50 ஆயிரத்து 410 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து 2 முறை பிரதமராக்கிய மக்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளார் மோடி. இந்தியாவே சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இப்படியொரு செயலை செய்த மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் கூடாது.