தூத்துக்குடி மாவட்ட திமுகவில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், அமைச்சர் கீதா ஜீவனுக்கும் இடையில் நடக்கும் கோஷ்டி மோதலையும், அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்த தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழி இருவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது
பற்றியும் கடந்த வீடியோவில் பார்த்தோம்.
தூத்துக்குடி மாவட்டத்தை மிஞ்சுகிற அளவுக்கு வேறு சில மாவட்டங்களிலும் – அதாவது இரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் நீறுபூத்த நெருப்பாக பிரச்சனை புகைந்து கொண்டிருக்கிறது.
இவர்களுக்குள் நடக்கும் கோஷ்டிச் சண்டையில் சிக்கிக்கொண்டு மண்டைகாய்ந்து போகிறார்கள் அந்த மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகிகளும்.
இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களின்நிலைதான் அய்யோ பாவம்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, அவரது 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில், ஏறத்தாழ 30 ஆண்டுகள் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.
திருச்சி மாவட்ட செயலாளராக, திமுகவின் பல்வேறு மாநில மாநாடுகளையும், பிரம்மாண்டமானமுறையில் பல பேரணிகளையும், லட்சக்கணாக்கான தொண்டர் களை திரட்டி மிகப்பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தி திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர் கே.என்.நேரு.
சில வருடங்களுக்கு முன் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் கே.என்.நேரு.
2018-ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக திருச்சி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு, சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கே.என்.நேரு, முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட திமுக வடக்கு, மத்திய, தெற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இதில் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி காடுவெட்டி தியாகராஜனுக்கும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வைரமணிக்கும், கே என் நேரு வகித்து வந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி மகேஷ் பொய்யாமொழிக்கும் வழங்கப்பட்டன.
திருச்சி வடக்கு, மத்திய மாவட்ட திமுக செயலாளர்கள் இருவருமே கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் என்பதால் இந்தப்பகுதிகளில் கே.என்.நேருவை மையப்படுத்தியே அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ஆனால் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி நடத்தும் நிகழ்ச்சிகளில் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட அரசியலில் களம் இறங்கியது முதலே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் தொடங்கின.
இப்போது கே என் நேரு, மகேஷ்பொய்யாமொழி இருவருமே அமைச்சர்களாகி விட்டதால் திருச்சி மாவட்ட திமுகவில் பொறி பறக்கிறது.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் கே.என்.நேரு. மகேஷ்பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர்களாக்கப்பட்ட பிறகு, கே என் நேரு, மகேஷ் பொய்யாமொழி இருவரும் அடிக்கடி திருச்சிக்கு வருகின்றனர். சில நேரங்களில் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் இரண்டுபேருமே கலந்து கொள்கின்றனர்.
அப்படி இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்களுக்கு ஹார்ட் அட்டாக் வராததுதான் பாக்கி. அந்தளவுக்கு இரண்டு அமைச்சர்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விழா முடிந்து அமைச்சர்கள் புறப்படும்போது, அமைச்சர்களின் காரில் எம்எல்ஏக்களும் பயனிப்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்எல்ஏக்களோ அமைச்சர்களின் கார்களில் ஏறுவதற்கே அஞ்சி நடுங்குகின்றனர்.
அமைச்சர்களே அன்பொழுக அழைத்தாலும், வேண்டாங்க… நான் என் காரிலேயே வர்றேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாகி ஓட்டம் பிடிக்கின்றனர்.
அந்தளவுக்கு அவர்களை பயமுறுத்தி வைத்திருக்கின்றனர் கேஎன்நேருவும், மகேஷ்பொய்யாமொழியும்.
கேஎன் நேருவின் காரில் ஏறினால், அவர் காரில் ஏன் போனாய் என்று மகேஷ்பொய்யாமொழி பொருமுகிறாராம்.
மகேஷ் பொய்யாமொழி காரில் ஏறினால், அவர் கூட ஏன் போனே என்று கே என் நேரு கர்ஜனை செய்கிறாராம்.
அதனால் கேஎன் நேருவும் மகேஷ்பொய்யாமொழியும் ஒரே நேரத்தில் திருச்சிக்கு வருகிறார்கள் என்று தெரிந்தாலே திருச்சி மாவட்ட எம்எல்ஏக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் காய்ச்சலே வந்துவிடுகிறதாம்.
இவர்களின் கோஷ்டி சண்டையையும் அதனால் தாங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் கட்சி மேலிடத்துக்கு புகாராகத் தெரிவிக்கலாம் என்றால்….
அது பூமராங்காக தங்கள் பக்கமே திரும்பி தங்களின் அரசியல்வாழ்க்கையையே காலி பண்ணிவிடும் என்பதால் அமைதிகாக்கின்றனர்.
காரணம் என்ன தெரியுமா?
கே என் நேரு – மு க ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கிறார்.
மகேஷ் பொய்யாமொழி பற்றி புகார் கொடுக்கலாம் என்றால் அவர், உதயநிதி ஸ்டாலினின் உற்ற நண்பராக இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் மீது புகார் கொடுப்பதெல்லாம் நடக்கிற கதையா?
மதுரை மாவட்ட திமுகவில் நடக்கும் கோஷ்டி சண்டையை விலாவாரியாக அடுத்த வீடியோவில் பார்க்கலாம்.
……………
காணொலி வடிவத்தில் காண…