தேய்ந்துபோன தே.மு.தி.க. தேர்தலுக்குப் பிறகு இருக்குமா?

 

2021 தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் அனாதையாக்கப்பட்டது இரண்டு கட்சிகள். ஒன்று புதிய தமிழகம், இரண்டு தேமுதிக

தேர்தல் கூட்டணி என்பதே கொள்கை சார்ந்தது இல்லை. தேர்தல் வெற்றியை முன்னிலைப்படுத்துவதுதான். அதேநேரம், அதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத கட்சிகள் பாமக, தேமுதிக, புதிய தமிழகம்.

இதுபோன்ற கட்சிகளை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மக்கள் நிராகரிப்பது ஒருபக்கம், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பெரிய கட்சிகள், இதுபோன்று தேர்தலுக்கு தேர்தல் கடைவிரிக்கும் கட்சிகளை கைவிட வேண்டும்.

பாமகவுக்கு வடதமிழகத்தில் சாதி வாக்குகள் கணிசமாக இருப்பதால், அதையே தன்னுடைய அஸ்திரமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு கூட்டணியில் ஒட்டிக்கொண்டு கணிசமான சீட்டுகளை வாங்கிவிடுகிறது. சீட்டுகளை மட்டுமல்ல, நோட்டுகளையும்தான்.

பாமகவுக்கு சவால்விடும் கட்சியாக வளர்ந்த தேமுதிக, பாமகவின் வாக்குவங்கி ரகசியத்தை புரிந்துகொள்ளாமல் பாமக ஃபார்முலாவிலேயே தேர்தல் பேரம் நடத்தியதன் விளைவுதான் தமிழக அரசியல்களத்தில் இன்று தேமுதிக அனாதையாக்கப்பட்டது.

1979 முதல், 2010 வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக, 150 படங்கள்வரை நடித்த விஜயகாந்த் தன் ரசிகர்மன்றங்களை மிகுந்த கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். முறைப்படி அவர் கட்சியைத் தொடங்குவதற்குமுன்பே, அவரது ரசிகர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி யடைந்தனர்.

2005ல் தேமுதிகவை துவங்கிய விஜயகாந்த், வழக்கம்போல், ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்று டெம்ப்ளேட் கொள்கைகளை அறிவித்தார்.

‘இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பாரா விஜயகாந்த்?” என்றும், கருப்பு எம்ஜி.ஆர் என்றும் மீடியாக்கள் அவரை உசுப்பேற்றின.

அதற்கு அடுத்த ஆண்டு – 2006ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடவுளுடனும் மக்களுடனும்தான் கூட்டணி என்று அறிவித்து 234 தொகுதி களிலும் தேமுதிக போட்டியிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார் விஜயகாந்த். அவரைத் தவிர, போட்டியிட்ட அனைவருமே தோல்வியைத் தழுவினர்.

விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, அந்தக்கட்சியில் பிரபலமான முகங்கள் யாரும் இல்லாத நிலையிலேயே தேமுதிக, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 8.4 சதவீதம்.

கட்சி தொடங்கி ஒரே ஆண்டில் தேமுதிக இவ்வளவு வாக்குகளைப் பெற்றது மிகப் பெரிய சாதனையாவே பார்க்கப்பட்டது.

அதற்கடுத்துவந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க. இந்தத் தேர்தலிலும் தேமுதிகவுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்க வில்லை. ஆனால், 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இது பதிவான வாக்குகளில் 10.3 சதவீதம்.

அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம்தான் தமிழக அரசியலில் விஜயகாந்ததை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது.

அதுவரை கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று சொல்லி தனித்து போட்டியிட்ட விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார்.

தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. 29 இடங்களில் வெற்றிபெற்று, 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது தே.மு.தி.க..

அதுமட்டுமல்ல அந்த தேர்தலில் திமுக படுதோல்வியடைந்ததால், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார் விஜயகாந்த்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த்தின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. சட்டசபையில் அநாகரிகமாக நடந்துகொண்டார். பத்திரிகையாளர்களிடமும் மோசமாக நடந்துகொண்டார்.

விஜயகாந்த் மீதான மக்களின் ஏமாற்றமும், அதிருப்தியும் – 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.

அந்தத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக, 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

அதுமட்டுமல்ல, அந்தகட்சிக்கு 5.1 சதவீத வாக்குகளே கிடைத்தது. அதாவது 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது தேமுதிக.

ஆனாலும், அடுத்து வந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் தவிர்க்க முடியாத மூன்றாவது கட்சியாகவே இருந்தது தேமுதிக.

அந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் கொண்டுவர படாதபாடு பட்டது திமுக. அவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த், நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஆசைக் காட்டியதால் கடைசிநேரத்தில் மக்கள் நல கூட்டணிக்கு தாவினார்.

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், போட்டியிட்ட ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. அதோடு, அக்கட்சியின் வாக்குகள் 2.41 சதவீதமாகக் குறைந்துபோனது. அதாவது வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது தே.மு.தி.க.

அதைவிட அவமானம், உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், சுமார் 34 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தேய்ந்துபோனது தேமுதிக.

தேமுதிக தேய்ந்துபோனதற்கு பல காரணங்கள். அதில் முக்கியமான காரணம் தேமுதிக மீதான நம்பகத்தன்மை குறைந்துபோனது.

அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தேமுதிகவின் இந்த செயல்பாடு பிற கட்சிகளிடம் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவது உறுதியாகியிருந்தநிலையில் வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைந்திருந்த கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டணித் தலைவர்களின் படங்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படமும் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசிவரை முடிவைச் சொல்லாமல் இழுத்தடித்தது தே.மு.தி.க.. எனவே, கடைசி நிமிடத்தில் மேடையிலிருந்து விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டது.

அதேநேரத்தில், தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த சிலர் தி.மு.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தகவல் வெளியானது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திய தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் 5 மக்களவை இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்டதாகச் சொல்லப்பட்டது.

அ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பா.ம.கவுக்கு அளித்ததைப் போல 7 தொகுதிகள் வேண்டுமெனக் கேட்டதாக சொல்லப்பட்டது.

இதன் மூலம் தாங்கள் பலம் வாய்ந்த கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, தங்கள் பேர பலத்தை உயர்த்த நினைத்தது தே.மு.தி.க.

அப்போது நடந்த சம்பவங்கள் எல்லாம், தே.மு.தி.கவின் இமேஜையே காலி பண்ணிவிட்டன.

எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு கடைசியாக தேமுதிகவுக்கு 4 சீட்களை கொடுத்தது அதிமுக. நான்கு தொகுதிகளிலுமே படுதோல்வி அடைந்து, சுமார் 2.19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

கட்சி துவங்கிய இரண்டாவது ஆண்டிலேயே அந்தக்கட்சி சந்தித்த முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 27 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளையும் இரண்டாவது தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளையும் பெற்றது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்

சுமார் 9 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளையே பெற முடிந்தது.

அக்கட்சியின் வாக்குவங்கி வெகுவேகமாக குறைந்துவருவதையே அந்தத் தேர்தல் முடிவுகள் காட்டின.

விஜய்காந்துக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது.

தேமுதிக – விஜயகாந்த் என்கிற தனிநபரை மையப்படுத்தி உருவான கட்சி. அந்த தனிநபர் பலவீனம் அடையும்போது அது அந்த கட்சியை பாதிக்கும்.

விஜய்காந்துக்கு மாற்றாக அங்கு ஒரு தலைவர் இல்லை. அவருடைய மச்சான் சுதீஷ் மக்கள் அறிந்த தலைவர் அல்ல, அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடவே இல்லை. இத்தனைக்கு விருப்பமனு எல்லாம் கொடுத்தார்.

2011-ஆம் ஆண்டு தேர்தலின்போது தேமுதிகவில் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார். விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் பிடிக்காமல் அவரும் நடையைக்கட்டிவிட்டார்.

பலரும் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைய ஆரம்பித்தனர். கட்சியினர் விலகுவதும், தேர்தல் தோல்வியும் சேர்ந்து அக்கட்சியை ஒரு பலவீனமான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு அக்கட்சி எந்தப் பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை. எந்தப் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. அதனால் அந்தக்கட்சியையே மக்கள் மறக்கும் சூழல் உருவானது.

தேமுதிக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தநிலையில், அதன் காரணத்தை கண்டறிந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் கட்சித்தலைமை ஈடுபடவில்லை.

மாறாக, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்தியாளர்களை ஒருமையில் பேசுகிறஅளவுக்கு தலைக்கனத்தோடு திரிந்தார்.

பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும், மகன் விஜயபிரபாகரனும் செய்தியாளர்களிடமும் கூட்டங்களிலும் பேசும் பேச்சுகள், ஆணவத்தின் உச்சமாக இருந்தன.

மொத்தத்தில் தேமுதிகவுக்கு சவக்குழி வெட்டப்பட்ட விஜயகாந்தின் குடும்பத்தினரே காரணமாகிப்போனார்கள்.

2006 சட்டமன்ற தேர்தலில் 8.38 சதவிகிதம், 2009 மக்களவை தேர்தலில் 10.3 சதவிகிதம் என எடுத்தஎடுப்பிலேயே தேமுதிகவுக்கு வாக்குகள் குவிந்ததற்கு, விஜய்காந்த் மீதான அபிமானம் மட்டுமே காரணமில்லை.

தமிழ்நாட்டில் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.கவிற்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் 10 முதல் 15 சதவீதம் இருக்கிறார்கள்.

இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டன என்று பொருமுகிற அந்த வாக்காளர்களில் கணிசமானபேர் தே.மு.தி.கவுக்கு வாக்களித்தனர்.

2011 சட்டமன்ற தேர்தல் முதல் அரசியல்வியாபாரம் செய்யும் கட்சியாக தேமுதிக மாறிவிட்டதால் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது.

தற்போதைய சூழலில் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கழக அதிருப்திவாக்குகளை அறுவடைசெய்யும் சூழல் உருவாகிவிட்டதால், இனி எதிர்காலத்தில் தே.மு.தி.க.வின் வாக்குவங்கி உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த யதார்த்தத்தை உணராமல், இன்னமும் தேமுதிக பெரியகட்சி என்ற கற்பனையில் திளைத்துக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.

கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகவின் அலுவலகத்தில் பல கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த காலம் மாறி, இந்த தேர்தலில் ’எங்களுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்’ என்று வெளிப்படையாகவே கெஞ்சுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டார் பிரேமலதா.

தனித்து நின்றால் 234 தொகுதிகளில் தேமுதிகவே வெற்றிபெறும், 41 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணிக்கு உடன்படுவோம், தேவை ஏற்பட்டால் மூன்றாவது அணியை உருவாக்குவோம், தேமுதிக ஆதரவுடன்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றெல்லாம்
வாய்சவடால் விட்டார்கள் பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும்.

இப்படி எல்லாம் பேசியதாலோ என்னவோ தேமுதிகவை கடைசியாகவே பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக. 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவோம் என்று கறார் காட்டியது அதிமுக.

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியை விட்டால் வேறு போக்கிடம் இல்லை, தேர்தல் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற வேண்டும். அதனால் அதிமுக கொடுக்கும் இடங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அதிமுக இப்படி கறார் காட்டியதற்கு மற்றொரு காரணம்… அரம்பத்தில் வெளியான கருத்துக்கணிப்புமுடிவுகளைவிட சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது. திமுக – அதிமுக இடைவெளி குறைந்துள்ளது.
மேலும் பல இலவசங்களை அறிவித்தால் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று அந்தக்கட்சி நம்பியதால், வெறும் 2 சதவிகித வாக்குகள் மட்டுமே வைத்துள்ள தேமுதிகவின் தயவு தமக்கு தேவையில்லை என்று கருதி அலட்சியப்படுத்தியது.

அதனால் தேமுதிக வேறுவழியை தேட ஆரம்பித்தது.

அக்கட்சிக்கு மூன்று வாய்ப்புகள்தான் இருந்தன.

ஒன்று… தனித்து போட்டியிடுவது. தனித்துபோட்டியிடுவது என்பது தற்கொலைக்கு சமம். 1 சதவிகித வாக்குகூட கிடைக்காது. இந்த தேர்தலோடு கடையை மூடவேண்டியதுதான். தனித்து போட்டியிட்டால் தேர்தல் செலவுக்கு பணம் யார் தருவார்கள்? திமுக அதிமுக பாஜக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி என்பதே தேர்தல் செலவுக்கு என்ற பெயரில் பலநூறு கோடிகளை கறப்பதற்குத்தான். தனித்துபோட்டியிட்டால் பலநூறு கோடிகள் கிடைக்காது.

தேமுதிகவின் அடுத்த சாய்ஸ். மக்கள் நீதிமய்யம் கட்சி உடன் கூட்டணி. கமல் ஓட்டுக்கே பணம் கொடுக்க மாட்டேன் என்ற கொள்கை கொண்டவர். அவர் தேமுதிகவுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க உடன்பட மாட்டார்.

மூன்றாவது, அமமுக உடன் கூட்டணி வைப்பது. பல ஆயிரம்கோடி குவிந்துகிடக்கும் இடம் இது என்பதால், தேமுதிக கேட்கும் பணத்தைக் கொடுப்பதில் தினகரனுக்கு சிக்கல் இருக்காது. அந்த அடிப்படையிலேயே 60 சீட்டுகளை கொடுத்து தேமுதிகவை தன் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன்.

அமமுக கூட்டணியில் இணைந்தாலும் அது தேமுதிகவுக்கு நன்மை பயக்க வாய்ப்பில்லை. எடப்பாடி தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக வீர்யமுடன் களமாடிக் கொண்டிருக்கிறது. அமமுகவுக்கே ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றிகிடைக்கம் என்பதே இப்போதையநிலை.

இந்தலட்சணத்தில் அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்துவிடப்போகிறது? விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா கரைஏறுவதே கஷ்டம் என்பதே களநிலவரம்.

2006 இல் சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.4 சதவீத வாக்குகளுடன் அரசியலை துவங்கிய தேமுதிக தற்போது 2 சதவீத வாக்குகளுடன் பரிதாபமான நிலையில் உள்ளது.

2021 தேர்தல் முடிவு – தேமுதிக என்ற கட்சியை தமிழக அரசியல்களத்தைவிட்டே அப்புறப்படுத்தும் என்பதே நம்முடைய கணிப்பு.

DMDKDMKPremalathaSeemanThe worn-out DMDK Will it be after the election?Vijaykanth
Comments (0)
Add Comment