இந்திய சினிமாவில் தரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் ஹொம்பாலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனம், தனது அடுத்த மிகப்பெரிய தயாரிப்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அளவற்ற அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட கதைகளை வணிக அம்சங்களுடன் சொல்லும் திறமையான இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர், ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த புதிய கூட்டணி, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ், மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி உலகத் தரத்திலான திரைப்படங்களை உருவாக்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. அந்த வரிசையில் ‘S-48’ திரைப்படமும் இந்திய அளவில் பேசப்படும் படைப்பாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘S-48’ திரைப்படத்திற்கு, இளம் தலைமுறையின் இசை ரசனையை வென்ற இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக கயாது லோகர் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைக்கதை உருவாக்கத்தில் பா. கிருத்திகா பங்களித்துள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 22ஆம் தேதி முதல் ‘S-48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தயாரிப்பு மதிப்பு, வலுவான கதை, முன்னணி நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவின் இணைப்பால் உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.