எதிர்பார்த்ததைப்போலவே ஸ்டெரிலைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்த நிறுவனத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் மத்திய அரசு, மாநில அரசு, பாஜக, பாமக, திமுக போன்ற கட்சிகள் இணைந்து அரங்கேற்றிய ஸ்டெரிலைட் ஆலைத்திறப்பு என்ற நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நாடகத்தை தடுத்துநிறுத்தவேண்டிய உச்சநீதிமன்றமும் இந்த நாடகத்தில் கதாபாத்திரமாய் மாறிப்போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஸ்டெரிலைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்பார்த்த நாடகம் என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது.
இந்தியா முழுவதும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா சிகிச்சைக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காததால் பலர் மரணம் அடைந்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகளின் அலட்சியப்போக்கினால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தினசரி 240 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நாள்தோறும் 400 மெட்ரிக் டன் வரை மருத்துவ ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பெரும்பாலும் ஐநாக்ஸ் ஏர், பிராக்ஸ்ஏர் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிம் மூலமே பெறப்படுகிறது.
இந்த மூன்று நிறுவனங்களைத் தவிர, தஞ்சை, கோவை மாவட்டங்களில் அமைந்துள்ள சில தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்படுகிறது.
புதுவையில் உற்பத்தி செய்யப்படும் 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழக அரசைக் கேட்காமலேயே தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் அனுப்பியது. “ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் வாதிடும்போது, தமிழக அரசிடம் ஆலோசித்த பிறகே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. என்று சொன்னார். மத்திய மாநில அரசுகளின் நாடகத்தில் இதுவும் ஒரு அங்கம்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேல் பாதிக்கப்பட்டோர் இருக்கும் போது 30,000 பேர் பாதிக்கப்பட்ட தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பிவைத்தது மத்திய அரசின் அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு.
அதன் தொடர்ச்சியாய் நடைபெற்ற சம்பவங்களை கவனிக்கும்போது, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை தமிழக அரசுக்கு தெரியாமலே தெலங்கானா, ஆந்திராவுக்கு மத்திய அரசு வழங்கியது அந்த மாநிலங்களுக்கு உதவும் நோக்கத்தில் அல்ல, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உருவாக்குவதற்காகவே என்று தோன்றுகிறது.
காரணம்… இந்த சம்பவங்கள் நடைபெற்ற அதே சமயத்தில், தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜனை நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம்.
மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தால் 7 முதல் 14 நாட்களுக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தூத்துகுடியில் தற்காலிக ஊழியர்களுக்கு ஸ்டெரிலைட் ஆலையை சுத்தம்செய்ய வரும்படி அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியும் நமக்குக் கிடைத்தது.
இதை எல்லாம் தொகுத்து பார்க்கும்போது ஸ்டெர்லைட் திறப்பு என்கிற நாடகத்துக்கான திரைக்கதை முன்னரே எழுதப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று முதலில் கூறிய தமிழக அரசு. அடுத்தநாளே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாமா? என்பது குறித்து கருத்து கேட்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்தது. அதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை தற்போது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக 4 மாதம் மட்டும் திறக்க அனுமதி அளிக்கலாம்.“ என்று பல்டி அடித்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர் தூத்துக்குடி எம்பியான கனிமொழி. தனக்கு வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்திருக்கிறார் கனிமொழி.
பசுமைத்தாயகம் என்ற அமைப்பை வைத்துக்கொண்டு சுற்றுச்சூழல் பற்றி வாய்கிழியப்பேசும் பாமகவும் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்தது.
திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்படும் சூழலில் இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் மூலம் ஒருவேளை திமுக ஆட்சியைப்பிடித்தால் எதிர்காலத்தில் பாஜகவுக்கு ஆமாம் சாமி போடும் அரசாகவே இருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
அனைத்துக்கட்சி கூட்டம் என்பதே மத்திய பாஜக அரசால் அடிமை அதிமுக அரசுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட ஒரு கண்துடைப்பு நாடகம். அதனால்தான், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.
அதுபற்றி கேட்டால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதான் காரணம் என்றால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத பாமகவுக்கு ஏன் அழைக்கப்பட்டது? மொத்தத்தில் ஆலையை திறக்க வேண்டும் என்ற பாஜகவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு. இந்த பட்டியலில் திமுகவும் இருக்கிறது என்பதை இந்த சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற விஷயத்தில் மற்ற கட்சிகள் அரசியல் செய்தாலும், நேர்மையான சட்டப்போராட்டம் நடத்தியது வைகோ தான். அவரையும், சீமானையும், திருமாவளவனையும், அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைத்திருந்தால் தமிழக அரசின் எண்ணம் நிச்சயமாக நிறைவேறி இருக்காது.
ஆக்சிஜன் பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறக்க முயற்சிக்கின்றது என்றும், எக்காரணத்தை கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும் வைகோ கூறினார்.
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்! என்று சீமான் எச்சரித்தார்.
இந்த விஷயத்தில மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். உயிர்காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை என்ற கமல், ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த 13 பேரின் குடும்பமும் சுற்றமும் இவர்களை மன்னிக்காது. என்று கண்டித்தது மட்டுமல்ல,
அவசரகால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதா? திமுக ஆட்சியில் தென்மாவட்டங் களில் 16 மணி நேர மின்வெட்டு நிலவியபோது அங்குள்ள மக்கள் துயரங்களுக்கு ஆளாயினர்.
அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தது. மின்சார தேவைக்காக கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கவில்லை. மின்சாரம் தேவைதான். ஆனால், கடல்வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைத்து தான் மின்சாரம் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.
தற்போதைய சூழலில் தமிழக அரசும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை யும் எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும். என்றும் கூறிய கமலின் இந்த பார்வை பாராட்டத்தக்கது.
எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய கமல் தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உடைய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.
கமல் சொன்னதை ஊர்ஜிதப்படுத்தும்வகையில் உள்ளது திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதிய கடிதம்.
திருச்சியில் அமைந்துள்ள ‘பெல்’ நிறுவனத்தில், மூன்று ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் அளவு உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால், இவை கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து செயல்படாமல் உள்ளது.
இதை பராமரித்து மீண்டும் செயல்பட வைக்கலாம். நாட்டின் அவசர அவசிய தேவையை கருத்தில் கொண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் மணிக்கு 140 மெட்ரிக் க்யூப் ஆக்ஸிஜன் தயாரிக்கும் திறன் கொண்ட செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை உடனடியாக இயக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் திருச்சி சிவாவின் கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மட்டும் ஆர்வம் காட்டியிருக்கிறது மத்திய அரசு.
சுவாசத்திற்கு பயன்படும் ஆக்ஸிஜன் 100 சதவித ஆக்ஸிஜன் கிடையாது. நாம் இங்கே குறிப்பிடும் ஆக்ஸிஜன் என்பது வெறும் அழுத்தப்பட்ட காற்றுதான். காற்றில் ஆக்ஸிஜன் 21 சதவிகிதம் இருக்கிறது, 77 சதவிகிதம் நைட்ரஜன், மீதி இரண்டு சதவிகிதம் இதர வாயுக்கள். அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனிலிருந்து தூசுத் துகள்கள், கார்பன்டைஆக்ஸைடு, ஈரம் ஆகியவற்றை நீக்கிவிட்டு அழுத்தப்பட்ட கனமான உலோக உருளைகளில் அடைக்கப்படுகிறது.
காற்றை அழுத்தி தூசை நீக்கி ஈரத்தையும் கார்பன்டைஆக்ஸைடையும் நீக்கி உருளையில் அடைப்பதற்கு எதற்கு ஸ்டெரிலைட் ஆலை? ஒரு சாதாரண ஷெட் போதும். அதற்குள் இரண்டு மூன்று கம்ப்ரஸர்களை நிறுவி இதர உபகரணங்களையும் நிறுவினாலேபோதும்.
நகரப்பகுதிகளில் 25 சதுர மீட்டர் பரப்பளவுக்கு இதைப் போன்று ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்தலத்தை நிர்மானித்தால் இந்த ஷெட்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளிலிருந்து உருளைகளைக் கொண்டு வந்து ரீ ஃபில் செய்து கொள்ளலாம்.
ஸ்டெர்லைட் திறக்காமலே இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்திருக்க முடியும். மத்திய அரசின் நோக்கம் ஆக்சிஜன் அல்ல, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைப்பதே.
அதற்காகத்தான் இத்தனை நாடகத்தையும் நடத்தியுள்ளது. இதன் பின்னணியில் இருந்தது வேதாந்தா நிறுவனம்தான்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்தால் ஆக்சிஜன் தயாரித்து, அதை இலவசமாக வழங்குவோம் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சொன்னது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பானது.
ஸ்டெர்லைட் ஆலையை தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் தொடங்க அனுமதிபெற்று தொடங்கவிருந்தநிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து ஆலையை உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, தூத்துக்குடியில் தொடங்கினார்கள். காற்று, நீர் நிலத்தை மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கே ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம். இப்போது ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்தி அதிகாரவர்க்கத்தை கையில் கோட்டுக்கொண்டு, குறுக்குவழியில் ஆலையைத் திறக்க உள்ளனர்.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை முதலில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். உபரியான ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்’ என்றார்.
தமிழகத்துக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்ட ஆலை நிர்வாகம், தற்போது அனுமதி கிடைத்துவிட்ட பிறகு ‘ஆலையில் 200 டன் வரை ஆக்சிஜன் தயாரிக்க முடியும். யாருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறதோ, அதன்படி மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அளிக்க தயாராக உள்ளோம்.’ என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சொலிசி்ட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். பின்னர் அது மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றார்.
ஆக தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது புரிகிறதா?
அடுத்து தமிழக அரசு மற்றொரு கோரிக்கையை முன்வைத்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை அரசு அமைத்துள்ள குழு கண்காணிக்கும். குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெற வேண்டும். என்பதே அது.
தமிழக அரசு அமைக்கும் குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறுவதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வேயும், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உள்ளூர் மக்களும், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்துள்ளதை எதிர்க்கிறோம் என்றார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் குரலும், வேதாந்தா நிறுவனத்தின் குரலும் ஒரேமாதிரி ஒலிப்பதை கவனியுங்கள். அப்படியானால் இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் சீமான் சொன்னதுதான் நடக்கும்.
தமிழகம் போர்க்களமாக மாறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.