இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் ஸ்டாலின்

திமுக வெற்றியடைந்து ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றானதும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இப்படியொரு சடங்கு நடைபெறுவது வாடிக்கையான நிகழ்வுதான்.

அதேநேரம் இன்றைக்கு ஸ்டாலினைத்தேடிப்போய் வாழ்த்து சொல்கிறவர் களைப் பார்க்கும்போது சில கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

திமுக வெற்றி என்ற செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அவசர அவசரமாக ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கும் இவர்களில் பலர் கடந்த பத்தாண்டுகளில் எங்கே போனார்கள்?

திமுக அதிகாரத்தில் இல்லாத கடந்த பத்தாண்டுகளில், ஸ்டாலினுக்கு பத்து முறை பிறந்தநாள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லக்கூட தயக்கம் காட்டியவர்களும்….

ஸ்டாலினின் தந்தை திரு.கருணாநிதி மறைந்தபோது ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்ல அஞ்சி நடுங்கி தயக்கம் காட்டிய பலரும்…

இப்போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கையில் பொக்கேயுடன் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களின் யோக்கியாம்சம் தெரிந்தும் அவர்களை நிராகரிக்காமல் அவர்களது வாழ்த்துக்களையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டு வருகிறார் ஸ்டாலின்.

இன்னொரு பக்கம், பணம்படைத்தவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக படோடமாகத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கல்விநிலையங்கள் நடத்தி வரும் கல்வி வியாபாரிகளின் விளம்பரங்கள் நிறையவே கண்களில் படுகின்றன.

திமுக வெற்றி என்று தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாள் எந்தப் பத்திரிகையை புரட்டினாலும் பளிச்சென கண்ணில்பட்டது…. பால் தினகரனின் காருண்யா பல்கலைக்கழகத்தின் வாழ்த்து விளம்பரம்தான்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிர்அணியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிட்ட எஸ்ஆர்எம் கல்விநிலையத்தின் பச்சமுத்துவோ முழுப்பக்க விளம்பரம் வாயிலாக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அரசியல் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் அதையும் மீறி வெற்றியடைந்தவர்களை வாழ்த்துவது நல்ல பண்புதான். என்றாலும் எஸ்ஆர்எம் பச்சமுத்து முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஸ்டாலினை வாழ்த்தியதில் அரசியல் பண்பைவிட, திமுக ஆட்சியில் நமக்கு எந்தப் பிரச்சனையும் வந்தவிடக்கூடாது என்ற எச்சரிகை உணர்வுதான் தெரிகிறது. எஸ்ஆர்ம், காருண்யா போன்ற கல்விநிலையங்கள் பல லட்சம் செலவு செய்து பத்திரிகை விளம்பரம் கொடுத்து புதிய அரசு அமைக்கப்போகும் ஸ்டாலினை வாழ்த்துவதில் காட்டிய வேகத்தைப் பார்க்கும்போது எனக்கு தோன்றியது இதுதான்.

சட்டவிரோதமாக இவர்கள் செய்யும் பல்வேறுவிதிமீறல்களை புதிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். அல்லது புதிய அரசிடம் இவர்கள் ஏதோ சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்கொள்ள தோன்றுகிறது.

பணமுதலைகள் கொடுக்கும் பத்திரிகை விளம்பரங்களைக் கண்டு மனமுருகி, இவர்களுக்கு சலுகை கொடுப்பதும் தவறு. இவர்களுடைய சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இந்த இரண்டு தவறுகளையும் எக்காலத்திலும் திமுக அரசு செய்து விடக்கூடாது.

திமுக வெற்றி என்ற தேர்தல் முடிவு உறுதியான அடுத்த நாள் வெளியான நாளிதழ்களில் என் கண்கள் தேடியது… ஒரேயொரு செய்தியைத்தான். புதிதாக ஆட்சி அமைக்கும் ஸ்டாலினுக்கு திரைப்படத்துறை சார்பில் பாராட்டுவிழா நடத்தப்படும் என்ற செய்திதான் அது.

நான் இப்படியொரு செய்தியை எதிர்பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறவர்களை குளிர்விக்க… குஷிப்படுத்த படத்துறையினர் இப்படியொரு அஸ்திரத்தை கையில் எடுப்பார்கள்.

பாராட்டுவிழா என்ற பெயரில் சுமார் ஆறுமணிநேரம் கவர்ச்சி நடிகைகள் மற்றும் கதாநாயகி நடிகைகளின் ஆட்டம் பாட்டம் என்று கலைநிகழ்ச்சிகள் களைகட்டும். அதைவைத்து படத்துறைக்கு தேவையான காரியத்தை அந்த அரசிடமிருந்து சாதித்துக் கொள்வார்கள்.

சினிமாக்காரர்களின் இந்த மலிவான மகுடிஇசைக்கு மயங்காதவர் ஜெயலலிதாதான். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் காலைச் சுற்றி வந்த இவர்கள், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய காலைப்பிடிக்க வருகிறார்கள் என்ற உண்மையை, சினிமாக்காரர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்டு அவர்களை அருகிலேயே சேர்க்கவில்லை அவர்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி அதிகாரத்துக்கு வந்ததும் அவருக்கும்கூட பாராட்டுவிழா எடுக்கிறேன் என்று ஒரு கோஷ்டி கோட்டைக்குக்கு படையெடுத்துக் கொண்டே இருந்தது. நாமே சசிகலாவின் காலைப்பிடித்து முதல்வராகி இருக்கிறோம்… நமக்கு எதற்கு பாராட்டுவிழா என்று நினைத்தாரோ என்னவோ…. கடைசிவரை எடப்பாடி இவர்களுக்கு பிடிகொடுக்கவில்லை.

சினிமாக்காரர்கள் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டால் பெரும்பாலும் அதை தவிர்த்த எடப்பாடி, சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரைப்பாருங்கள் என்று கடம்பூர் ராஜூ பக்கம் கையைக்காட்டிவிடுவார். தவிர்க்க முடியாத முக்கிய பிரச்சனைகளின்போது மட்டுமே திரைப்படத்துறையினரை சந்திக்க நேரம் கொடுத்தார். அந்தளவுக்கு சினிமாக்காரர்களிடம் எச்சரிகையாகவே இருந்தார் எடப்பாடி.

திரைப்படத்துறையினரை சற்று தள்ளி வைக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு நேர்மாறானவர் கருணாநிதி. அவரும் திரைப் படத்துறையிலிருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ, சினிமாக்காரர்களுக்கு அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்ல, திரைப்படத்துறைக்கு சலுகைகளையும் அள்ளிக்கொடுத்தார்.

அதற்கு கைமாறாக அல்லது மேலும் சலுகைகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திரைப்படத்துறையினரை திரட்டி பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா என்றெல்லாம் நடத்தி கருணாநிதியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தனர். அந்த பாராட்டுவிழாவில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்று மிரட்டப்பட்டனர். அப்படி மிரட்டி அழைத்துவரப்பட்ட அஜித், விழா மேடையிலேயே தான் மிரட்டப்பட்ட விஷயத்தை முதல்வர் முன்னிலையில் போட்டு உடைத்தார்.

திமுக ஆட்சியில் மின்வெட்டு உட்பட பல பிரச்சனைகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முதலமைச்சர் சினிமா நடிகைகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் பரவி அதுவே 2011 தேர்தலில் திமுக தோற்கவும் காரணமாகிப்போனது.

இதோ 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

இப்போதும் சினிமாக்காரர்களின் கூட்டம் ஸ்டாலினை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வருகிறது.

மற்றவர்களைப் போல் புதிய முதல்வரை வாழ்த்த வரவில்லை இவர்கள்.

பாராட்டுவிழா நடத்தப்போகிறோம் என்ற பசப்பு வார்த்தைகளோடு வருகிறார்கள்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.

இவர்களிடம் எச்சரிகையாக இருங்கள் .

Comments (0)
Add Comment