பாஜகவின் அடிமையாகவே மாறி ஆட்சியை நடத்தியதால் ஆட்சியிலிருந்து அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்ற வேகமும் வெறியும் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்தது.
அதே நேரம் திமுகவை ஆட்சியில் உட்கார வைத்தால் என்னாகுமோ என்ற அச்சமும் சாமானிய மக்களை சஞ்சலமடைய வைத்தது.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்தேறின. திரைப்படத்துறையை கருணாநிதியின் குடும்பத்தினர் கபளீகரம் செய்தனர். இன்னும் சொல்லமுடியாத துயரங்களை தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்தனர். அதனால்தான், 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தனர்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக பத்து வருடங்கள் ஆட்சி செய்தது. ஊழல் ஒருபக்கம், அடிமைத்தனம் ஒரு பக்கம்…
அதிமுகவை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்தே அகற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
அதன் காரணமாகவே திமுக மீதான கடந்தகால கசப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அந்தக்கட்சிக்கு வாக்களித்தனர் மக்கள்.
பத்து வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்ததாலோ என்னவோ திமுக அமைச்சர்களும் அடக்கி வாசிக்கின்றனர்.
கவர்மெண்ட் டெண்டர்களுக்கும், போஸ்டிங், டிரான்ஸ்ஃபர்களுக்கும் கட்டிங், கமிஷன் என்று கைநீட்ட ஆரம்பிக்கவில்லை.
சிபாரிசுகளோடு கோட்டைப்பக்கம் வரும் இடைத்தரகர்களைப் பார்த்தால் பேயைக்கண்டதுபோல் அலறுகிறார்கள் பல அமைச்சர்கள்.
இதை எல்லாம் வைத்து தமிழகத்தில் நடப்பது பரிசுத்த ஆட்சி என்று பாமரத்தனமாக நம்பிவிட வேண்டாம்.
ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதனால் வாலைசுருட்டிக்கொண்டு இருங்கள் என்று திமுக மேலிடம் போட்ட உத்தரவு காரணமாகவே வசூல் வேட்டையை இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.
அதேசமயம், கட்சிக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் தங்கள் கஜானாவை விரியத்திறந்துவிட்டு பணத்தை வாரி இறைத்த எ.வ.வேலு போன்ற திமுகவின் ஸ்பான்சர்கள் கடந்த பத்தாண்டுகளில் கட்சிக்கு செலவு செய்த பணத்தை பெருத்த லாபத்தோடு திரும்ப எடுக்கும் வேலையைத்
தொடங்கிவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
எ.வ.வேலுவைப்போலவே பொன்முடி போன்ற சில சீனியர் அமைச்சர்களும் சைலண்ட் ஆக பணம் பார்த்து வருவதாக கோட்டையில் தகவல்கள் உலா வருகிறது.
சீனியர் அமைச்சர்கள் இப்படி இருந்தாலும், ஜூனியர் அமைச்சர்கள் சற்று அச்சத்துடன்தான் இருக்கிறார்களாம்.
இதில் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா?
கோடிகளில் பணம் கொட்டும் மின்சாரத்துறையை கையில் வைத்திருக்கும் செந்தில்பாலாஜியும் கையைக்கட்டிக்கொண்டு அடக்கி வாசிப்பதுதான்.
அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி சேர்த்த பணம் பத்து தலைமுறைக்கு தாங்கும் என்று சொல்வார்கள் அரசியல் வட்டாரத்தில். அப்பேற்பட்ட செந்தில்பாலாஜிக்கு மின்துறை என்கிற பசையான துறையை ஒதுக்கியதே கரெக்ட்டாக
கப்பம் கட்டுவார் என்பதால்தான். ஆனால் அவரோ இன்னமும் கைநீட்டாமல் இருக்கிறாராம்.
அதற்காக மின்சாரத்துறை லஞ்ச லாவண்யமில்லாத துறையாகிவிட்டதாக நினைத்துவிட வேண்டாம்.
துறையின் அமைச்சரான செந்தில்பாலாஜி கமிஷன், கட்டிங் என்று கைநீட்டாமல் இருப்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு செமத்தியாய் பணம் பண்ண ஆரம்பித்துவிட்டாராம் – தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்
கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் லகானி.
கான்ட்ராக்ட், போஸ்ட்டிங், டிரான்ஸ்ஃபர் என எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து வசூல்வேட்டையை நடத்தி வருகிறாராம்.
இந்த விஷயம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தெரியவந்ததும் மனுஷன் டென்ஷன் ஆகிவிட்டாராம்.
தன்னுடைய துறையில் இப்படி நடந்தால் தனக்குத்தான் கெட்டபெயர் என்று, ராஜேஷ் லகானியை அழைத்துக் கண்டித்திருக்கிறார் செந்தில்பாலாஜி.
அதன் பிறகும், அவரது வசூல்வேட்டை குறையவில்லை என்றதும் கடுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜி, அடுத்தகட்டமாக, ராஜேஷ் லக்கானியின் வசூல் வேட்டை விவகாரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
ராஜேஷ்லக்கானி யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்ற பட்டியலையும் முதலமைச்சரிடம் கொடுத்திருக்கிறார்.
அதோடு, அவரை உடனடியாக தன்னுடைய துறையிலிருந்து மாற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை செந்தில்பாலாஜி வைத்து பல வாரங்களாகி விட்டநிலையில் ராஜேஷ் லக்கானி இன்னமும் அதே பதவியில்தான் நீடிக்கிறார். அவரது வசூல்வேட்டையும் குறையவில்லை என்கிறது கோட்டை வட்டாரம்.
முதலமைச்சரிடம் முறையிட்ட பிறகும் ராஜேஷ் லக்கானியை தன்னுடைய துறையிலிருந்து அகற்றமுடியவில்லையே என்ற ஆறாத துயரத்தில் இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது கோடிகளை குவித்த செந்தில்பாலாஜிக்கு, அதேபோன்று இம்முறையும் பணத்தைக் குவிக்க முடியாதஅளவுக்கு ராஜேஷ்லக்கானி பெரிய தடையாக இருக்கிறார். அதனால்தான் ராஜேஷ்லக்கானி மீது இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக அவரைப்பற்றி அவதூறுகளை அள்ளிவிடுகிறார் என்று செந்தில்பாலாஜியைப் பற்றி ராஜேஷ்லக்கானி தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறதாம்.
செந்தில் பாலாஜி நல்லவரா? ராஜேஷ் லக்கானி நல்லவரா? என்பது ஒருபக்கமிருக்க, மொத்தத்தில் மின்சாரத்துறையில் ஷாக் அடிக்கும் அளவுக்கு வசூல்வேட்டை தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.
காணொலி வடிவத்தில் காண…