ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைவில் மூடுவிழா?

திமுக ஆட்சியில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநியால் கட்டப்பட்ட சட்டமன்றத்துடன் கூடிய , புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார்.

ஓமந்தூரார் மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தற்போது இயங்கி வரும் அந்த இடத்தில் மீண்டும் புதிய சட்டமன்றமும், தலைமைச்செயலகமும் வரப்போகிறது.

ஓமந்தூரார் மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான வேலைகள் ரகசியமாக தொடங்கிவிட்டன.

நமது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதைவிட, எதிரிகட்சியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதில்தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் கவனம் செலுத்துகின்றன.

இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

அவற்றில் ஒன்றுதான் புதிய தலைமைச்செயலக விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் நடத்துகிற கண்ணாமூச்சி அரசியல் விளையாட்டு.

2001 -2006 ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ராணிமேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச்செயலகத்தை கட்டுவதற்கு முடிவு செய்தார்.

அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன.

அப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, ராணிமேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை கட்ட அனுமதி அளிக்க முடியாது என்று, தமிழக அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.

அடுத்து ஆட்சிக்கு வந்த, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும் புதிய இடத்துக்கு மாற்ற முடிவு செய்து, அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் அதற்கான இடத்தை தேர்வுசெய்தது.

18 லட்சம் சதுர அடி பரப்பளவில் 200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு, பிறகு கூடுதலாக 1.30 லட்சம் அடி சேர்க்கப்பட்டு, 19 லட்சத்துக்கு 30 ஆயிரம் சதுரஅடியில், 465 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச்செயலகம் கட்டும் பணி தொடங்கியது.

ஜூன் 2008 ல், புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இரண்டாண்டுகள் கடந்தும், புதிய சட்டசபை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமலே அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை அழைத்து வந்து 2010 மார்ச் 13 ஆம் தேதி திறக்க வைத்தனர்.

அதன் பிறகு புதிய கட்டிடத்தில் இரண்டுமுறை சட்டமன்றம் கூடியது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தலைமைச் செயலக அலுவலகங்கள் படிப்படியாக புதிய கட்டடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 2011 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரானார்.

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலக கட்டடம் வசதியாக இல்லையென காரணம் கூறி, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகத்தை மீண்டும் மாற்ற உத்தரவிட்டார் ஜெயலலிதா.

அதோடு, புதிய தலைமைச்செயலகக் கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது.

அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடம் கருணாநிதியின் கனவு. அதை சீர்குலைத்த ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் இருந்த திமுக தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்த உடனேயே, முதல் சட்டமன்ற கூட்டத்தையே புதிய தலைமைச்செயலக கட்டிடத்தில் கூட்டத்தான் விரும்பினாராம் முக ஸ்டாலின்.

அங்கே தற்போது செயல்படும் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவின் தீவிரம் குறையாத இந்த நேரத்தில் மருத்துவமனையை அங்கிருந்து மாற்றினால் மக்கள் மத்தியில் கெட்டபெயர் வரும் என்பதால், புத்திசாலித்தனமாக திட்டமிட்டு காய்நகர்த்தி வருகின்றனர்.

கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் 525 படுக்கையுடன் கோவிட் சிகிச்சை மையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் 250 கோடியில் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தொடங்க திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

புதிதாக மருத்துவமனை தொடங்கப்படவிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நடக்கப்போவது என்ன தெரியுமா?

ஓமந்தூரார் மருத்துசவமனையை கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்துக்கு மாற்றிவிட்டு, அங்கே சட்டமன்றத்தையும் தலைமைச் செயலகத்தையும் மீண்டும் கொண்டுவரப்போகிறார்கள்.

இதற்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், முதல்கட்டமாக புதிய சட்டமன்றத்தில் பொருத்தப்பட் உள்ள அதிநவீன மைக்குகள், ஒலிபெருக்கிகளை வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கேள்வி.

 

You can watch on youtube :

omandurar hospital
Comments (0)
Add Comment