‘2018’, ‘ரேக்காசித்திரம்’, ‘மாளிகப்புரம்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தனது அடுத்த தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ஆர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படம் வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனியும் சரத்குமாரும் முதன்முறையாக இணையும் திரைப்படம் என்பதால், இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கமல் பிரகாஷ், இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சங்களுக்குப் பெயர் பெற்ற அவர், சரத்குமாரை இதுவரை காணாத புதிய மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் திரையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி …,
“சரத்குமார் சார் அவர்களின் பிறந்தநாளில் எங்கள் அடுத்த தமிழ் படத்தை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்த அவரது நடிப்பும் பன்முகத்தன்மையும் எங்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பவை. வலுவான கதையும் அர்ப்பணிப்புள்ள படக்குழுவும் இணைந்துள்ள இந்தப் படத்தில் அவர் இணைவது எங்களுக்கு பெருமை. இயக்குநர் கமல் பிரகாஷ் இந்தக் கதையை மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கியுள்ளார். ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. நவம்பர் 2026-க்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.