‘ஜெய்பீம்’ படத்தை பாராட்டிய திரை உலக பிரபலங்கள்

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து,  சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், திரையுலக விமர்சகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என அனைவரின் ஏகோபித்த பாராட்டுகளுடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியானது..
ஒடுக்கப்பட்ட பழங்குடி இன தம்பதிகளின் வாழ்க்கையையும், முன்னேற வேண்டும் என்ற அவர்களின் மன உறுதியையும், இதற்காக அவர்கள் எதிர்கொண்ட கடினமான துன்பத்தையும் ‘ஜெய் பீம்’ ரத்தமும் சதையுமாக செல்லுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய் பீம்’ சட்டத்தின் வலிமையையும், நீதிக்கான நெடிய போராட்டத்தின் உருவகமாகவும் அமைந்திருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களாலும், சமூக ஊடகங்களில் இப்படம் குறித்த விமர்சனம் அனைவரையும் வியக்க வைத்திருப்பதுடன், அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் படங்களில் ஒப்பற்ற. தலைசிறந்த தமிழ் படமாக ‘ஜெய் பீம்’ இருக்கிறது என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ‘ஜெய்பீம்’ குறித்து தனது சுட்டுரையில்,
”பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு.
நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என பதிவிட்டிருக்கிறார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ‘ஜெய்பீம்’ குறித்து தனது சுட்டுரையில், ”ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவிட்டிருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்லாமல் படத்தை பார்வையிடும் ஒவ்வொரு பார்வையாளர்களும், ராஜாக்கண்ணு- செங்கேணி தம்பதிகள் மீது காவல் துறையினர் ஏவிய அதிகார துஷ்பிரயோகத்தை, சந்துரு போன்ற உண்மையை மட்டும் ஆதாரமாக நம்பும் வழக்கறிஞர்கள், சட்டத்தின்  உதவியுடன் போராடி, அவர்களுக்கு  நியாயமும், நிவாரணமும் கிடைக்கச் செய்ததைக் கண்டு, தங்களை மறந்து கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்கிறது.
jaibhimjaibhim moviejaibhim movie newssuriyatribuesஜெய்பீம்
Comments (0)
Add Comment