தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு – சத்யா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கோல்டன் பாக்கியம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் முதல் படைப்பாகவும் இப்படம் உருவாகிறது.
தமிழ் – தெலுங்கு மொழிகளையும், இரு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களையும் இணைக்கும் ‘தெலுமிழ்’ என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. காதல், க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாக கிளிம்ப்ஸ் மூலம் தெரிய வருகிறது.
படத்தில் யோகி பாபு தெலுங்கிலும், சத்யா தமிழிலும் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருவரின் தனித்துவமான நகைச்சுவை பாணியும், காமெடி டைமிங்கும் படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயஸ்ரீ, அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பப்லு அஜு ஒளிப்பதிவு செய்ய, பவன் CH இசையமைக்கிறார். சிவா காமேஷ் D கலை இயக்கத்தையும், ரவி தேஜா கிரிஜாலா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
ஆரம்பத்தில் சங்கராந்தி வெளியீடாக அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.