விக்ரம் வீழ்ந்தது ஏன் தெரியுமா?

விக்ரம் வீழ்ந்தது ஏன் தெரியுமா?
…………………..
ஜெ.பிஸ்மி

 

தமிழ்சினிமாவில் நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. பட்டியல்போட ஆரம்பித்தால் பக்கங்கள் நீளும். ஆனால் மார்க்கெட் வேல்யூ என்கிற வணிகமதிப்பு கொண்ட நடிகர்கள் மிகவும் குறைவு. அதனால்தான் மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களை தயாரிப்பாளர்கள் மொய்க்கிறார்கள். அவர்கள் கேட்கும் கோடிகளை கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இந்த அந்தஸ்த்து எல்லா நடிகர்களுக்கும் வாய்த்து விடுவதில்லை. அதை அடைவதற்கு திறமையும், கடுமையான உழைப்பும், இலக்கை அடைந்த பிறகு அதை தக்கவைத்துக்கொள்ள சளைக்காத போராட்ட குணமும் வேண்டும். இந்த இரண்டும் சற்று குறைந்தாலும் சரிவு நிச்சயம்.

அப்படியொரு சரிவு நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்டிருப்பதுதான் நம்மை வருத்தம் கொள்ள வைக்கிற விஷயம்.

தமிழ்சினிமாவில் கதாநாயகனாக தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தத்துறையில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக கதாநாயகநடிகராக இருப்பது அசாதாரணமான விஷயம்.

லயோலாவில் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, 1990 ஆம் ஆண்டில் – என் காதல் கண்மணி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானர் விக்ரம். அந்தப்படம் வெளிவரவில்லை. அதை எண்ணி முடங்கிவிடாமல், மனம்தளராமல், படக் கம்பெனிகளில் ஏறி இறங்கினார். பொருளாதார நெருக்கடி தன் லட்சியத்தைக் காவு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக, பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக இயங்கிக்கொண்டே, இன்னொருபக்கம் தன்னுடைய லட்சியத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்.

உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ள கலைஞன் ஒருநாள் வென்றே தீருவேன் என்பதற்கு விக்ரம் மிகப்பெரிய உதாரணம்.

அவரது வாழ்க்கையில் ஒருநாள் நடந்தது அந்த மேஜிக். ஸ்ரீதர் இயக்கத்தில் தந்துவிட்டேன் என்னை, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் மீரா, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் காவல் கீதம் என ஒரேநேரத்தில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அல்ல அதிர்ஷ்டம் விக்ரமைத் தேடி வந்தது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களைக்கொடுத்து நட்சத்திர இயக்குநராக விளங்கிய ஸ்ரீதரின் பார்வை எப்படி ஒரு புதுமுகமான விக்ரம் மீது பட்டது என்ற ஆச்சர்யம் அகல்வதற்குள், அன்றைக்கு ரஜினி, கமல் படங்களை தொடர்ந்து இயக்கிவந்த எஸ்.பி.முத்துராமனின் பார்வையும் விக்ரம் மீது திரும்பியது. முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், தான் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஹீரோவாக விக்ரமைத் தேர்வு செய்திருந்தார். இதன் காரணமாக ஒரேநேரத்தில் மூன்று படங்களில், அதுவும் முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அதிர்ஷடத்தைப் பெற்றார் விக்ரம். அதனால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் பார்வையும் விக்ரம் பக்கம் திரும்பியது.

தந்துவிட்டேன் என்னை, விக்ரம், காவல்கீதம் படங்களில் ஏதாவது ஒரு படம் வெற்றியடைந்திருந்தாலும், தயாரிப்பாளர்கள் கூட்டம் விக்ரமை மொய்த்திருக்கும். யாருமே எதிர்பாராதவிதமாக – முக்கியமாக விக்ரமே எதிர்பாரதவிதமாக – இந்த மூன்று படங்களும் தோல்விப்படங்களானதுதான் துரதிஷ்டம். குறிப்பாக மீரா படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட்டாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்க, படமோ பப்படமாகிவிட்டது. அதனால், ராசியில்லாத ஹீரோ என்கிற முத்திரையும் விக்ரம் மீது குத்தப்பட்டது.

விக்ரம் இடத்தில் வேறுஒருவர் இருந்திருந்தால் எதிர்காலமே இருண்டுவிட்டதாக எண்ணி நிச்சயம் தன் உயிரையே மாய்த்துக்கொண்டிருப்பார். விக்ரமோ அந்த சூழ்நிலையிலும் துவண்டவிடவில்லை. தன்னம்பிக்கையை இழந்துவிடவில்லை அவர். ஒருவித மென்சோகம் அவருக்குள் இருந்தாலும் அதை தனக்குள்ளே புதைத்துக்கொண்டு எல்லோரிடமும் புன்னகை முகத்தையே காட்டினார்.

ஸ்ரீதர். எஸ்.பி.முத்துராமன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தும் கரைசேராததினாலோ என்னவோ, அதன் பிறகு தமிழில் யாரும் விக்ரமுக்கு கதாநாயகன் வாய்ப்பைக் கொடுக்க முன்வரவில்லை என்பதுதான் பெரும்துயரம். அதனால் தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்கப்போனார்.

விக்ரம் மீண்டும் தமிழில் நடித்தது விக்ரமன் இயக்கிய புதியமன்னர்கள் (1994) படத்தில். அன்றைய காலகட்டத்தில் புதுவசந்தம் கொடுத்த வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்த விக்ரமனுக்கு புதியமன்னர்கள் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. விக்ரம் என்கிற ராசியில்லாத நடிகர் நடித்ததால்தான் புதிய மன்னர்கள் படம் வெற்றியடையவில்லை என்று படத்துறையில் பேச்சு அடிபடத்தொடங்கியது.

அதனாலோ என்னவோ விக்ரமுக்கு அடுத்த சில ஆண்டுகள் பட வாய்ப்புகளே இல்லை. 1997ல் அமிதாப்பச்சன் கார்ப்பரேசன் தயாரிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உல்லாசம் என்ற படத்தில் கமிட்டானார் விக்ரம். அந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ… அன்றைக்கு வளரும் நடிகராக இருந்த அஜித்குமார். அமிதாப்பச்சன் தயாரிக்கும் படம் என்பதால் உல்லாசம் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் அட்டர்ப்ளாப். அதோடு தமிழ்ப்படத்தயாரிப்புக்கு குட்பை சொன்னார் அமிதாப்பச்சன். உல்லாசம் படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அமிதாப்பை காலி பண்ணியதே விக்ரமின் ‘ராசி’தான் என்று படத்துறையில் பேசினார்கள்.

உல்லாசம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே பார்த்திபனின் ஹவுஸ்ஃபுல் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் விக்ரம். 1998ல் வெளியான இந்தப் படமும் படுதோல்வி.

இப்படியாக, 1990 தொடங்கி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்துவந்த விக்ரம் அவரது வாழ்க்கையில் சந்தித்த, முதல் வெற்றி சேது படம்தான். பாலா இயக்கிய சேது படமும்கூட அத்தனை சுலபமாக தியேட்டருக்கு வந்துவிடவில்லை. ஃபர்ஸ்ட்காப்பி தயாராகி, பிசினஸ் ஆகாமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பெட்டிக்குள் சுருண்டு கிடந்தது. ப்ரிவியூ தியேட்டர்களிலேயே 100 காட்சிகள் திரையிடப்பட்டநிலையிலும் அந்தப்படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்க முன்வரவில்லை. ஒருவழியாக 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. சேது படம் வெளியாகி முதல்வாரம் தியேட்டரில் ஆட்களே இல்லை. பத்திரிகைகள் சேது படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடத் தொடங்கிய பிறகே தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகி, சரித்திரம் படைத்தது சேது.

ஏறக்குறைய பத்து ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு வெற்றியை ருசித்த விக்ரம் அதன் பிறகு மளமளவென முன்னேறி, முன்னணி கதாநாயகன் ஆனார். நேற்றுவரை ராசியில்லாத ஹீரோ என்று தூற்றிய வாய்கள் சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் என்றால் விக்டரி என்று புதிய அர்த்தம் சொன்னது. (விக்ரமின் நிஜப்பெயர் விக்டர் கென்னடி என்பதை நினைவில்கொள்க)

படத்துக்குப் படம் வித்தியாசமான கெட்டப், கதாபாத்திரத்துக்காக தன்னையே உருமாற்றிக்கொள்வது என இன்னொரு கமல்ஹாசனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியிலும் இறங்கினார் விக்ரம். அதில் அவருக்கு அபரிமிதமான வெற்றியும் கிடைத்தது. 2001 ல் – தில், காசி, 2002ல் – ஜெமினி, 2003ல் – தூள், சாமி, பிதாமகன், 2005ல் – அன்னியன் என விக்ரமின் கரியர் கிராஃப், நம்நாட்டின் விலைவாசியைவிட பன்மடங்குவேகத்தில் உச்சம் தொட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு படங்களை தேர்வு செய்திருந்தால் விக்ரமின் வெற்றிக்கொடி இன்னும் பலஅடி உயரத்தில் பட்டொளி வீசி பறந்திருக்கும். ஆனால் புகழும் பணமும் விக்ரமை மாற்றியது.

தில், ஜெமினி, சாமி, தூள் போன்ற மசாலாப்படங்கள் விக்ரமுக்கு வணிகவெற்றியைத் தேடிக்கொடுத்தாலும், ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்தது சேது, காசி, பிதாமகன் போன்ற வித்தியாசமான படங்களைத்தான். இந்த யதார்த்தத்தை மறந்தார் விக்ரம். இதை என்றைக்கு புரிந்து கொள்ள மறந்தாரோ அன்றைக்கு தொடங்கியது அவருடை வீழ்ச்சி.

மசாலாப்பட இயக்குநர்களின் படங்களில் நடித்தால் தன்னுடைய மார்க்கெட் வேல்யூ கூடும், சம்பளமும் அதிகமாகக் கேட்கலாம் என்று விக்ரம் போட்ட கணக்கு தப்புக் கணக்கானது. விளைவு… அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்த படங்கள் எல்லாம் மண்ணைக்கவ்வத்தொடங்கின.

மஜா, பீமா, கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம், 10 எண்றதுக்குள்ள, ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் என விக்ரமின் தோல்விப்படங்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். விக்ரம் இதுவரை 60 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சுமார் 8 படங்கள் மட்டுமே வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை. அருள், ஐ, போன்ற அரை டஜன் படங்களை ஆவரேஜ் ரகத்தில் சேர்க்கலாம். ஏனைய படங்கள் அதாவது விக்ரம் நடித்த 75 சதவிகித படங்கள் வணிகரீதியில் தோல்விப்படங்கள். அதனால் அவரை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் காணாமலே போனார்கள்.

தன்னுடைய சுயநலத்துக்காக பல தயாரிப்பாளர்களை கொஞ்சம்கூட ஈவுஇரக்கமில்லாமல் காலி செய்தார் விக்ரம். அதில் ஒருவர் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவிமேக்கர்ஸ் என்ற படநிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தில் நண்பர்கள் உதவியுடன் தயாரிப்பாளராக உயர்ந்த கிருஷ்ணகாந்த், விக்ரமை வைத்து கிங் என்ற படத்தை தயாரித்தார். கிட்டத்தட்ட 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நேரத்தில் ஷங்கரின் அன்னியன் படத்தில் நடிக்க கமிட்டானார் விக்ரம்.

அன்னியன் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துகொண்டுவிட்டு வத்த விக்ரம், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தை அழைத்து கிங் படத்தின் கதையை மாற்றும்படி சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? கிங் படத்தின் கதையும் அன்னியன் படத்தின் கதையும் ஒரே கதை. ஷங்கர் சாரை கதையை மாற்றுங்கள் என்று நான் சொல்ல முடியாத. எனவே நீங்கள் கதையை மாற்றுங்கள் என்றார்.

ஹீரோ பேச்சை தட்ட முடியுமா? கிட்டத்தட்ட 55 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை தூக்கிப்போட்டுவிட்டு அவசரஅவசரமாக வேறுகதையை ரெடி பண்ணி கிங் படம் எடுக்கப்பட்டது. படம் படு தோல்வி. கிங் படம் தோல்வியால் ஒரு பக்கம் நஷ்டம். விக்ரமினால் குப்பையில் போடப்பட்ட படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் இன்னொரு பக்கம். இதை ஈடுகட்ட கிருஷ்ணகாந்துக்கு இன்னொரு படத்துக்கு கால்ஷீட் தருவதாக வாக்குறுதி கொடுத்த விக்ரம் கடைசிவரை அவருக்கு கால்ஷீட் கொடுக்கவே இல்லை. கிங் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடனாளியான கிருஷ்ணகாந்தால் கடைசிவரை கரையேற முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் செத்தேபேனார். கிருஷ்ணகாந்த் என்கிறந தயாரிப்பாளரின் மரணத்துக்கு ஒருவகையில் விக்ரம்தான் காரணம் என்பதற்கு வாழும் சாட்சி இயக்குநர் பிரபுசாலமன்.

கிங் படம் ஒரு உதாரணம்தான். இதுபோல் பல தயாரிப்பாளர்களை காலி பண்ணியவர்தான் விக்ரம். லேட்டஸ்ட்டாக பாதிக்கப்பட்டவர் தயாரிப்பாளர் லலித். விக்ரம் மீதான நம்பிக்கையில் அவரை வைத்து மகான், கோப்ரா என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்தார் லலித். கேப்ரா படத்தில் விக்ரமுக்கு 7 கெட்டப். இந்தப்படத்தினால் தனக்கு மிகப்பெரிய ஹைப் கிடைக்கும் என்று கணக்குப்போட்ட விக்ரம் அப்படத்தின் இயக்குநரை கைக்குள் போட்டுக்கொண்டு கன்னா பின்னாவென செலவை இழுத்துவிட்டார். படத்தின் பட்ஜெட்டில் வட்டியாக மட்டுமே 15 கோடியை தண்டம் அழும்நிலைக்குத்தள்ளப்பட்டார்.

விளைவு… கோப்ரா படம் படுதோல்வி. அதற்கு முன் வெளியாக மகான் படமும் தோல்வி.

சுருக்கமாக சொல்வதென்றால்… தன்னை நம்பி பணத்தைக்கொட்டும் தயாரிப்பாளர்களைப் பற்றியும் விக்ரம் கவலைப்படுவதில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதில்லை. அதனால் விக்ரமுக்கும் வெற்றிக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்த இடைவெளி தயாரிப்பாளர்களுக்கு நன்மையைத்தரலாம். ஆனால் விக்ரமுக்கு நல்லதல்ல.
…………………………

பின்குறிப்பு – குமுதம் இதழுக்காக எழுதிய கட்டுரை

Do you know why Vikram fell?Vikram
Comments (0)
Add Comment