அம்மா உணவகம் உடைப்பு அராஜகத்தின் தொடக்கமா?

அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அதிமுக ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு திமுகவை உட்கார வைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு முழுமையாக வரவில்லை. காரணம் திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த அச்சம்தான்.

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு போன்ற நிர்வாக சீர்கேடுகள், நிலஅபகரிப்பு போன்ற அராஜகங்கள் மீண்டும் தலைதூக்கிவிடுமோ என்கிற அச்சம்தான் அது.

பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், பத்து வருட பசியை ஒரே ஆண்டில் தீர்த்துக்கொண்டு விடுவார்களோ என்கிற சந்தேகமும் இருந்தது.

இப்படியான அச்சத்தையும், சந்தேகத்தையும் மீறித்தான், மக்கள்விரோத அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் தமிழக மக்கள்.

இன்னமும் திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்கவில்லை. அதற்குள் திமுகவினரின் வன்முறையாட்டம் தொடங்கிவிட்டது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை இரண்டு திமுகவினர் அடித்து உடைப்பதோடு, அம்மா உணவகத்தையே சூறையாடுகின்றனர்.

இப்படியொரு வீடியோ வெளியாகி தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத் தியதோடு, திமுக ஆட்சியில் இனிவரும் நாட்களில் என்னவெல்லாம் அராஜக காட்சிகள் அரங்கேறுமோ என்கிற பீதியையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகஊடகங்களில் வைரலானது மட்டுமல்ல, தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தியாக இடம்பிடித்தது.

உடனடியாக ஊடகங்களை சந்தித்த சென்னையின் முன்னாள் மேயரும் தற்போதைய சைதாப்பேட்டை எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம். அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அந்த இருவரையும் கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக சார்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்து. அந்த வீடியோவில், அம்மா உணவக போர்டை உடைத்தெறிந்த திமுக தொண்டர்கள் இருவரும், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் உடைத்தெறிந்த போர்டை அதே இடத்தில் வைத்து ஆணி அடித்து சரி செய்கின்றனர்.
இந்த வீடியோவையும், மா.சுப்பிரமணியத்தின் பேச்சையும் கேட்டபோது சிரிப்புதான் வந்தது.

இரண்டு திமுக தொண்டர்களால் உடைக்கப்பட்ட அம்மா உணவக போர்டை இப்போது சரி செய்துள்ள திமுகவால், அம்மா உணவகம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் அதே பெயரில் செயல்படும் என்ற உத்திரவாதத்தைக் கொடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது.

திமுக பதவியேற்றதும் உடனடியாக செய்ய வேண்டிய அஜண்டாக்களில், ஜெயலலிதாவுக்கு புகழ்சேர்க்கும் அம்மா உணவகத்தை ஒழித்துக்கட்டுவதும் ஒன்றாக இருக்கப்போவது நிச்சயம்.

முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதியின் பெயரைத்தாங்கி கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தை, ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும் காலி பண்ணினார்.

அதற்கு பதிலடியாக, அம்மா உணவகத்தை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையைப்பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜெயலலிதா வழியில் பழிவாங்கும் மனப்பான்மையுடன் திமுகவும் செயல்படத் தொடங்கினால், ஜெயலலிதாவைப்போலவே இவர்களும் செயல்பட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். அதாவது கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரை மாற்றினாரே தவிர, ஜெயலலிதா காப்பீட்டு திட்டம் என்றோ, அம்மா காப்பீட்டு திட்டம் என்றோ மாற்றம் செய்யவில்லை.

அதுமட்டுமல்ல, மக்கள் பயன்பெற்று வந்த இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் ஜெயலலிதா ரத்து செய்யவில்லை. மாறாக, தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற புதிய பெயரில் கலைஞரின் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்தார்.

அம்மா உணவகம் என்ற பெயர் திமுக தலைமைக்கு உறுத்தலாக இருந்தால், அந்தப்பெயரை மாற்றிவிட்டு, கலைஞர் காப்பீட்டு திட்டம் விஷயத்தில் ஜெயலலிதா செய்ததைப்போல், அம்மா உணவகத்தின் பெயரை அரசு உணவகம் என்றோ, மக்கள் உணவகம் என்றோ மாற்றி வழக்கம்போல் செயல்படவும் ஏழை எளிய மக்கள் பயன்அடையவும் வழிவகுக்கலாம். மக்களின் வரிப்பணத்தில் நடத்துவதால் “மக்கள் உணவகம் என்ற பெயர் மிகப்பொருத்தமாகவும் இருக்கும். அதைற்கு மாறாக கலைஞர் உணவகம் என்று பெயரை மாற்றினால் அதைவிட கேலிக்கூத்து வேறொன்றுமில்லை.

ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரை வைத்தாலும் பயனாளிகளின் பாராட்டு ஜெயலலிதாவுக்குப் போகுமே தவிர கருணாநிதிக்கு கிடைக்காது.

அதுமட்டுமல்ல, ஒருவேளை 2026 தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப்பிடித்தால் முதல்வேலையாக கலைஞர் உணவகம் என்ற பெயரை அம்மா உணவகம் மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அதற்குமுன்னர், அதிமுக தொண்டர்கள் கலைஞர் உணவகத்தின் போர்டை அடித்து உடைத்து அதை சூறையாடவும் வாய்ப்பிருக்கிறது.

இப்படி ஆட்சி மாறும்போதெல்லாம் பெயர் மாற்றி பெயர் மாற்றி மக்களின் வரிப்பணத்தை சுரண்டியது போதும்.

ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எளியமக்களின் பாராட்டைப்பெற்றது அம்மா உணவகம் என்றால், நடுத்தரவர்க்கத்து மக்களின் பாராட்டைப் பெற்ற திட்டம் அம்மா வாட்டர்.

ஏறக்குறைய அம்மா உணவகத்துக்கு ஏற்படும் அதே கதி, அம்மா வாட்டருக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதையும் கூட அரசு குடிநீர் என்று பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஏனெனில் குடிநீர் பாட்டில்களை கொள்ளைவிலைக்கு விற்கும் வாட்டர் மாஃபியாக் களிடமிருந்து மக்களை காப்பிற்றியதே அம்மா வாட்டர்தான். மலிவுவிலை யில் கிடைத்த தண்ணீர் பாட்டில் எந்தப்பெயரில் கிடைத்தால் என்ன? மக்களுக்கு தேவை 10 ரூபாய்க்கு சுத்தமான தண்ணீர். தமிழ்நாடு குடிநீர் என்று பெயரை சூட்டுங்களேன்…

ஜெயலலிதாவின் திட்டங்களை ஒழித்துக்கட்டுவது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, ஜெயலலிதாவால் ஒழித்துக்கட்டப்பட்ட திட்டங்களை மீண்டும் புத்துயிரூட்டும் வேலையையும் புதிய திமுக அரசு செய்யும்.

அவற்றில் முக்கியமானது…. கருணாநிதியின் கனவான புதிய தலைமைச் செயலகம்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை அரசு மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. இன்றைக்கு ஓமந்தூரார் மருத்துவமனை என்ற பெயரில் தமிழகத்தின் மிகச்சிறந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிர் பிழைத்தது அங்குதான் இன்றைக்கு பலபேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதும் அங்குதான்.

இந்த சூழலில் ஜெயலலிதாவை பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு மீண்டும் அங்கே தலைமைச்செயலகத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையில் திமுக அரசு இறங்கக்கூடும்.

கொரானா பரவல் படு தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் அப்படியொரு காரியத்தை செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் கேடுகெட்ட செயலாகிவிடும்.

அதுமட்டுமல்ல, அங்கே செயல்பட்டு வரும் ஓமந்தூரார் மருத்துவமனையை வேறிடத்துக்கு மாற்றுவது என்றால், பல நூறு கோடி செலவாகும்.

அந்த இடத்தில் கருணாநிதி விரும்பிய புதிய சட்டசபையை, புதிய தலைமைச் செயலகத்தை மீண்டும் கொண்டுவரவும் பல நூறு கோடி செலவாகும்.

இப்படியொரு விஷயத்தை செய்ய வேண்டும் என்பதில் திமுக அரசு பிடிவாதமாக இருந்தால், இந்திய மக்களை கொரோனா வைரஸூக்கு தின்னக்கொடுத்துவிட்டு தன்னுடைய சுயவிளம்பரத்துக்காக 13450 கோடி செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டும் மோடிக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

என்ன செய்யப்போகிறார் புதிய முதல்வர் ஸ்டாலின்?

amma-restaurant-breakdown-news
Comments (0)
Add Comment