அக்ஷய் குமாரின் புதிய கிரைம் டிராமா படம் தொடக்கம்

‘சிறை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இளம் நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எல்.கே. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் எச். வினோத்தின் உதவி இயக்குநராக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

படத்திற்கு சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன். ஆர் கவனிக்கிறார். கலை இயக்கம் பி.எஸ். ஹரிஹரன், சண்டைக்காட்சிகள் ஆக்சன் சந்தோஷ் ஆகியோர் பொறுப்பில் உருவாகிறது.

சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ‘சிறை’ மற்றும் ‘ராவடி’ படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த எல்.கே. அக்ஷய் குமார், தற்போது கிரைம் டிராமா கதைக்களத்தில் புதிய பரிமாணத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படம், தொடக்க விழாவிலேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Akshay Kumar's new crime drama movie starts
Comments (0)
Add Comment