அரசியலும் சமூக அக்கறையும் இணைந்த ‘ஆகாயம்’

டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. ‘தினந்தோறும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், இந்துமதி மணிகண்டன், தீபா, தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடிக்கு எதிரான கருத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் அரசியல் மற்றும் சமூக அக்கறையும் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தின் நடைமுறை வாழ்க்கையை பாசம் மற்றும் உணர்வுகளுடன் பதிவு செய்யும் வகையில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கூறுகையில், “கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். இதில் அரசியலும், சமூக அக்கறையும் இணைந்து வருகின்றன. ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஏக்நாத், சாரதி மற்றும் ரமணிகாந்தன் பாடல்களை எழுதியுள்ளனர். சூர்யா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். பையர் கார்த்திக் சண்டைப் பயிற்சியையும், மணிகண்டன் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.

‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment