அஜித், நயன்தாராவை நடிகர் சங்கம் கண்டிக்காதது ஏன்?

1761

 

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் நடத்தப்பட்ட அடையாள கண்டனப் போராட்டம் அமைதிப்போராட்டமாக மாறியது ஏன்?

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் விளக்கினார்…

இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விஷயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால், அது தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள், வல்லுநர்கள்.

இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுநர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மக்களின் உரிமை. நேர்மையான தேவையும்கூட. அதேபோல ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில், மக்களின் உரிமைக்குரலுக்கு மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.

மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்று கருதுகிறவர்களே பாதிக்கப்பட உள்ளோம் என்பதைப் புரிந்து போராட்டம் செய்யும்போது, அதற்குத் தீர்வுகாண வேண்டும்.

சினிமா சார்ந்த பிரச்சினைகள் நெருக்கடியில் நாங்களும் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் கடந்த ஒரு மாதகாலமாக வேலை வாய்ப்பில்லாத ஃபெப்சி தொழிலாளர்கள், மக்களின் உரிமைக்காக இங்கே போராட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்தத் திரையுலகமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

இங்கே தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் அமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகமும் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரது தனிப்பட்ட குரலும் மக்களின் நன்மைக்கானதே… ஆகவே, இந்தப் போராட்டத்துக்கு மவுனமே சிறந்த ஆயுதமாகக் கருதி, இங்கே கூடியுள்ள ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்களது மவுன அறவழி கண்டனப் போராட்டம் வாயிலாகப் பதிவு செய்வோம்.

இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.”

திரைத்துறையினர் நடத்திய இந்தப் போராட்டத்தில்  நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் கலந்து கொள்ளவில்லை.

வரலட்சுமி சரத்குமார், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும், ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி போன்ற சீனியர் நடிகைகளே கலந்து கொண்டனர்.

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும், சென்னையில்தான் வசிக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், வீட்டில்தான் சும்மா இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ்மக்களின் வாழ்வாதாரத்துக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

அஜித், சிம்பு, அதர்வா, ஆர்யா, விஷ்ணு விஷால், வடிவேலு, சந்தானம், பிரகாஷ்ராஜ், விமல், பரத், விக்ரம் பிரபு, ஜீவா, கெளதம் கார்த்திக், அர்ஜுன் போன்ற நடிகர்களும் பங்கேற்கவில்லை.

போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நாசர், வாரதவர்களுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருக்கலாம். அப்படி செய்தால்தான் அடுத்தமுறையேனும் வருவார்கள்.

தமிழ்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டங்களுக்குக் கூட வர மறுக்கும் நடிகர் நடிகைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் தலையில் சூட்டிய நட்சத்திர கிரீடத்தை பறிக்க வேண்டும்.