அஜித்துக்கு எதிராக அணி திரளும் நட்சத்திரங்கள்… என்ன செய்யப்போகிறார் அஜித்?

1529

சமூக வலைத்தளம் என்ற பெயர்தான். அங்கே சமூகப்பிரச்சனைகளைவிட சமூகத்தை சீரழிக்கும் விஷயங்களைப்பற்றிய பதிவுகளே அதிகமாக தென்படுகின்றன.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ என்ன தெரியுமா?

நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்தான்.

நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்பதற்காக, ஒட்டுமொத்த திரைப்பட நட்சத்திரங்களும் இணைந்து களமிறங்கியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் இருவரும் வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல், நான் வர மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாராம் அஜித்.

‘நடிகர்கள் தங்கள் சொந்த நலனுக்காக கஷ்டப்படும் ரசிகர்களிடம் காசு பிடுங்குவதா…? கட்டிடம் கட்ட என் பங்குக்கு 10 லட்ச ரூபாய் தருகிறேன். என்னைப்போலவே ஒவ்வொரு நடிகரும் பணம் கொடுத்தாலே நடிகர் கட்டிடத்தை கட்டிவிடலாம்..’ என்று அஜித் சொன்னதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களிலும், ஊடங்களிலும் வெளியானது.

அஜித் தரப்பிலிருந்து இந்த விஷயம் சொல்லப்பட்டதைப் போல தகவல் பரவியது.

நடிகர் அஜித் தரப்பிலிருந்தும் இந்த செய்தி குறித்து மறுப்போ, ஆட்சேபனையோ தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம், அஜித்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சில நிருபர்களே இந்த செய்தியை வாட்ஸ்அப்பில் பரப்பினர்.

இதை வைத்து இது அஜித்தின் வேலைதான் என்ற எண்ணம் செய்தியாளர்கள் மத்தியில் பரவியது.

அஜித் சொன்னதாக வெளியான கருத்து, நடிகர் சங்க நிர்வாகிகளை மட்டுமல்ல, சக நடிகர்கள் பலரையும் கொந்தளிக்க வைத்தது.

அவர் கொடுக்கும் பணத்தை வாங்கக்கூடாது என்ற கருத்தும் வலுப்பெற்றது.

இது ஒரு பக்கம் இருக்க, அஜித்துக்கு எதிராக, நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக ஒரு கட்டுரை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுவும் மொட்டைக்கடுதாசி டைப்பிலானதுதான் என்றாலும், இதற்குப் பின்னால் நடிகர்சங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய ஹீரோக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிகெட்டும் என்ற தலைப்பில் பரவிவரும்,  அஜித்தை காய்ச்சி எடுக்கும் அந்தக் கட்டுரை இதுதான்…

“வணக்கம்.

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார்.

ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID, PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று.

இந்த நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலேயே கட்ட முடியும். ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள்.

கலைத்துறை சார்ந்த விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே.

நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?

நடிகர் நடிகைகள் பிச்சைகாரர்கள் அல்ல.

அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர்.

தனது ரசிகர்களுக்குகூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை.

ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும்.

தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.

அவர்களை வருந்த செய்யாமல் இருந்தாலே போதும்.

பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள்.

இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும்.

அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்.

அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை.

சில நடிகர்கள் சொல்லுவதுபோல் நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்படவேண்டும் மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே…. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்?

அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியதுதானே?

அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியதுதானே?

இந்திய கிரிகெட் அணி ஆடுகிற விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத்தான் செல்லவேண்டும்.

அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது என்று குற்றம் சாட்டுவார்களோ?

தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்?

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு. அவர்கள் அவர்களது திரை குடும்ப தேவைகளை சரி செய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிகெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.

விவாதம் செய்யும் நடிகர்கள்  ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

முதலில்அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.”

இதில் அஜித்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், முழுக்க முழுக்க அஜித்தைப்பற்றியே குற்றம்சாட்டி எழுதப்பட்டுள்ளது.

தான் சொன்ன அல்லது தான் சொன்னதாக வெளியான ஒரு கருத்தின் அடிப்படையில் சர்ச்சை எழுந்திருக்கிறது.

தன்னுடைய தரப்பை வெளிப்படையாக சொல்வதன் மூலம் இதை முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அஜித்துக்கு இருக்கிறது.

என்ன செய்யப்போகிறார் அஜித்?