ஆளும் கட்சிக்கு ஒரு படம்… எதிர்கட்சிக்கு ஒரு படம்…. – இதுதான் அஜித் ஃபார்முலா

975

சினிமாவில் என்னதான் வீர வசனம் பேசினாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோக்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கு அஞ்சி வாழ்கிற சராசரி மனிதர்கள்தான்.

ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் வரை இதற்கு எவருமே விதிவிலக்கில்லை.

அதனால்தான், மக்களை பாதிக்கும் அரசின் திட்டங்கள் குறித்தோ, சமூகப்பிரச்சனைகள் குறித்தோ இவர்கள் வாய் திறப்பதில்லை.

இப்படிப்பட்ட அட்டைகத்தி ஹீரோக்கள் ஏதோ ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு ஆதாயம் தேடிக் கொடுக்கவும் தவறுவதில்லை.

என்னத்துக்கு இப்படியொரு பில்ட்அப்?

வேதாளம் படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

வீரம், வேதாளம் படங்களின் இயக்குநரான சிவா இயக்கும் இந்தப் படம் சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டாலும், அதன் உண்மையான தயாரிப்பாளர் ஆளும் கட்சியின் அதிகார மையத்துக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனமாம்.

அஜித் நடித்த வேதாளம் படத்தை வாங்கி வெளியிட்டதே ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

அதன் தொடர்ச்சியாகவே அஜித்தை வைத்து படத்தயாரிப்பில் இறங்கி இருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ்.

நேரடியாக தங்களின் பெயரில் படத்தயாரிப்பில் இறங்குவது தேர்தல் நேரத்தில் சர்ச்சையை உண்டாக்கும் என்பதால் சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. மேலிடத்துக்கு கால்ஷீட் கொடுத்த தகவல் தி.மு.க. மேலிடத்துக்கு தெரிய வந்தால் தனக்கு தலைவலியாகிவிடும் என்பதை உணர்ந்த அஜித் அடுத்து செய்த காரியம்… புத்திசாலித்தனத்தின் உச்சம்.

தேர்தல் முடிவு ஒருவேளை தி.மு.க.வுக்கு சாதகமானால், ஜாஸ் சினிமாவுக்கு கால்ஷீட் கொடுத்தது தனக்கு பாதகமாகிவிடும் என்று நினைத்தோ என்னவோ, முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு  அவர்கள் கேட்காமலே கால்ஷீட் கொடுக்க முன் வந்தாராம் அஜித்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்த வருடம் அஜித்தின் கால்ஷீட் உதயநிதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

உதயநிதி தயாரிப்பில் அஜித்  நடிக்க உள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

‘தீனா’ படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தில் இணைகின்றனர்.

அஜித், லைலா நடித்த ‘தீனா’ படத்தின் மூலம்தான் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்குநராக அறிமுகமானார்.

அந்தப்படத்தில்தான் அஜித்தை ‘தல’ என்று அழைக்கும் வசனம் இடம்பெற்றது.

அதன் பிறகே அவரை தல என அஜித் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

தீனா படத்தைத் தொடர்ந்து மிரட்டல் என்ற படத்தில் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைய இருந்தனர்.

அந்தப் படம் பூஜையோடு நின்றுபோனது.

அந்தக்கதையைத்தான் சூர்யாவை வைத்து கஜினியாக்கினார் முருகதாஸ்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இது பற்றி உதயநிதியிடம் கேட்டால், “இப்போதுதான் பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எனவே அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை”  என்கிறார்.