3 நாட்கள் கழித்து விமர்சனம் வந்தால் தியேட்டரில் படம் இருக்குமா? – விஷாலுக்கு எதிராக கிளம்பியது எதிர்ப்பு…

547

‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், சினிமாவை விமர்சனம் செய்வது எப்படி? என்று மீடியாக்களுக்கு பாடம் நடத்தினார்.

அதோடு, முட்டாள்தனமான ஒரு யோசனையையும் முன்வைத்தார்.

அதாவது, “படம் வெளியாகி மூன்று நாட்கள் கழித்து விமர்சனங்கள் எழுதுங்கள்” என்பதே விஷாலின் உலக மகா யோசனை.

‘‘இப்போது படம் எடுப்பதும், வெளியிடுவதும் பெரும் சவாலாக இருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ; வெளியாகி மக்களிடையே போய் சேருவதற்குள் வெளியாகும் சில தவறான விமர்சனங்களால் அப்படங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம் படம் பார்த்துக் கொண்டே ட்விட்டரில் படத்தை விமர்சித்து எழுதுகிறார்கள்! விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அதை ஆரோக்கியமான முறையில் செய்யுங்கள்! விமர்சனங்களை மக்கள் நம்புவதால் தியேட்டருக்கு அவர்கள் வருவதில்லை.

அதனால் படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து விமர்சனங்களை வெளியிடுங்கள். ஒரு திரைப்படத்திற்கு மூன்று நாளாவது அவசாகம் கொடுங்கள்! காரணம் ஒரு படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள்! அவர்களின் வாழ்வாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சினிமா நன்றாக இருக்க வேண்டும். சினிமா நன்றாக இருக்க நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’

என்று தன்னுடைய வேண்டுகோளுக்கு சென்ட்டிமென்ட் மசாலாவையும் சேர்த்துக் கொண்டார்.

விஷால் வெவரம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று அப்போதே பத்திரிகையாளர்கள் மத்தியில் கமெண்ட் எழுந்தது.

இந்நிலையில் விஷாலின் பேச்சுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விஷாலின் பேச்சு எத்தனை முட்டாள்தனமானது என்பதை விளக்கி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து தெரிவித்துள்ளார்..!

“திரைப்படங்களுக்கான விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் விஷால்.

படம் நமது முதலீடு. ஆனாலும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட நமக்கு உரிமையில்லை.

அப்படியே கேட்டுக்கொள்வதாக இருந்தாலும், நாம்தான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடியே பி ஆர் ஓவை அழைத்து அவர்கள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுகிறோம்.
விமர்சனம் என்பதே கருத்து பரிமாற்றம்.

அது சரி தவறு என்பதை பார்ப்பவன் தீர்மானிக்க வேண்டியது.

விமர்சனம் வியாபாரமல்ல.

எனக்கு மூன்று நாட்கள் விமர்சனம் வேண்டாமென்றால், படத்தைக் காட்டாமல் விட்டு விடலாமே?
தவிர, அந்த மூன்று நாட்கள் விமர்சனம் வரவில்லையென்றால் படத்தை திரையரங்கிலிருந்தே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுபடங்கள் ஜோக்கர், மாநகரம், துருவங்கள் 16, கடுகு, 8 தோட்டாக்கள் போன்ற படங்கள் ஓடியதே விமர்சனங்களால்தான்.

பெரிய படங்களுக்குத்தான் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் ஓவராக புகழ்வதும், சுமாராக இருந்தால் அதை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்குவதும் நடக்கிறது.

இருமுகன், கபாலி படங்கள் விமர்சனத்துக்குப் பின்பே வரவைப் பார்த்தன.

ஆரம்ப கட்ட முட்டுக்கட்டைகளை அடித்து நொறுக்கியது விமர்சனங்கள்தான்.

பெரிய படங்களுக்கு முதல் மூன்று நாட்கள் பார்வையாளர்கள், ரசிகர்கள் வந்துவிடுகிறார்கள்.
சின்னப்படங்களுக்கு அப்படி வருவதில்லை.

பார்வையாளர்கள், ரசிகர்கள் வராத பட்சத்தில் முதல் மூன்று நாட்களுக்கு படத்தை திரையரங்கிலிருந்து தூக்கிவிடாமலிருக்க முதலில் வழிவகை செய்ய வேண்டும்.

திரையரங்கோடு தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்யவேண்டும்.

முதல் மூன்று நாட்களுக்கும் வெளியிடப்படும் திரையரங்கில் எல்லா காட்சிகளும் கூட்டம் இருக்கோ இல்லையோ ஓட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வரமுடியுமா?

அப்படி முடியாதபோது சிறு படங்கள் பெரும்பாலும் விமர்சனமில்லையென்றால் கட்டாயம் பாதிக்கப்படும்.

விஷால், படங்கள் ஓடவேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசுகிறார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாம் நல்ல படங்களை எடுப்பதை விட்டுவிட்டு விமர்சனத்தை நிறுத்துவது முறையாகாது.

என்னைப் பொருத்தவரை விமர்சகர்கள் குறைந்த பட்ச கருணையோடுதான் நடந்துகொள்கிறார்கள்.

பல சிறுபடங்களுக்கு எங்கே நாம் குறைத்து எழுதிவிட்டால் அந்தப் படம் பாதிக்கப்படுமோ என விமர்சனம் எழுதுவதேயில்லை அவர்கள்.

ஒரு படத்தை ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு தெரியப்படுத்துவதும் அவர்கள்தான்.

நாம் நம் பக்கம் இருக்கும் குறைகளை களைய முயல்வோம்.

நல்ல படங்களைத் தர முயற்சிப்போம்.

வியாபார முறையை முறைப்படுத்துவோம்.

அப்படி முறைப்படுத்துவதின் மூலம் தோல்வியடையும் படங்களுக்கான நஷ்டத்தை சரிக்கட்ட வழிமுறைகளை கண்டறிவோம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

நாம் எது பேசினாலும் மீடியாவில் செய்தியாகும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி உளறக் கூடாது என்பதை விஷால் புரிந்து கொள்ள வேண்டும்.

– ஜெபிஸ்மி