அதாகப்பட்டது மகாஜனங்களே…! காமெடி நடிகரின் மகன் கதாநாயகன் ஆனார்…!

826

கதாநாயக நடிகர்கள் தங்களின் பிள்ளைகளை ஹீரோவாக்குவது போல், காமெடி நடிகர்களும் தங்களின் மகன்களை ஹீரோவாக களத்தில் இறக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிரிப்பு நடிகர் மயில்சாமியின் மகன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

வடிவேலு தன் மகனை கதாநாயகனாக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் காமெடி நடிகர் தம்பி ராமையா சத்தமில்லாமல் தன் வாரிசை ஒரு படத்தில் ஹீரோவாக்கிவிட்டார்.

சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக S ரமேஷ்குமார் தயாரித்து வரும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தில்தான் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார் மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் , மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே. வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்தவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமலே சுயம்புவாக இப்படத்தை இயக்கி இருக்கிறாராம்.

சரி… அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் கதை என்ன?

“நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டாலும் அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம்.

இந்த கதைக்கருவை மையமாக வைத்து விறுவறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம் தான் “அதாகப்பட்டது மகாஜனங்களே”.

படத்துக்கு இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பு சூட்டடியதற்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரியவரும்.”

விரைவில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதை தொடர்ந்து இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.!